சாமான்ய வாக்காளனாக ஓ.பன்னீர்செல்வத்திடம் சில கேள்விகள்!
ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் நீதி கேட்டு ஒரு பயணத்தை நிகழ்த்தவிருக்கிறார். சசிகலா தலைமை இப்போது அம்பலப்பட்டுப் போயுள்ளது. மக்களிடம் சசிகலா மீதான வெறுப்பு அதிகரிக்கும் சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான இடத்தை உருவாக்கத் துடிக்கிறார். இந்நிலையில் ஒரு சாதாரண வாக்காளனாக ஓ.பன்னீர்செல்வத்திடம் சில கேள்விகள்...
* ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தபோது முதல் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நடிகர் ஆனந்தராஜ். ஆனால் நீங்களோ உங்களிடம் இருந்து முதல்வர் பதவியைப் பறிக்கும்வரை சின்ன முனகலைக்கூட எழுப்பவில்லை. அ.தி.மு.க.வில் பெரிதாக எந்தப் பொறுப்பிலும் இல்லாத, சாதாரண பேச்சாளரான ஆனந்தராஜுக்கு இருந்த நேர்மைகூட உங்களிடம் இல்லாமல்போனது ஏன்?
* தியானம் செய்வது உங்கள் நீண்டநாள் பழக்கமா, அல்லது முதலமைச்சர் பதவி பறிபோன அன்றைய இரவுதான் தியானம் செய்யக் கற்றீர்களா?
* ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்’ என்று அறிவித்தீர்கள். அதுவும் சசிகலாவுக்கும் உங்களுக்குமான பிரச்னை உச்சத்தை அடைந்தபோது. உங்கள் நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் ‘அம்மா’தான் என்றால் அவர் இறந்த மறுநாளே நீங்கள் சந்தேகம் எழுப்பியிருக்கலாமே? உங்கள் அபிமானத்துக்குரிய தலைவியின் மரணத்திலேயே உங்களுக்குச் சந்தேகம் என்றால் அது பதவி பறிபோனபின்தான் வெளிப்படும் என்றால் அந்த அபிமானமே சந்தேகத்துக்குரியது ஆகிறதே?
* ‘75 நாள்களும் எங்களை ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை’ என்று இப்போது சொல்லியிருக்கிறீர்களே. இவ்வளவு நாள்கள் தங்கள் பிரியத்துக்குரிய தலைமை தங்களிடமிருந்து மறைக்கப்பட்டால் உலகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்குமே, உங்கள் கட்சியில் ஏன் அது நடக்கவில்லை?
* ‘ஜெயலலிதா நலமுடன்தான் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்’ என்று அடிக்கடி சொன்னவர்களில் ஒருவர், இப்போது உங்கள் அணியில் இருக்கும் பொன்னையன். சசிகலா குற்றம் செய்தார் என்றால் அதற்கு உடந்தையாக இருந்தவர் என்றவர் முறையில் பொன்னையனும் குற்றவாளி என்று எடுத்துக்கொள்ளலாமா?
* ’எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து பன்னீர்செல்வம் சிரித்துப் பேசினார்’ என்று சசிகலா ஆவேசமாகக் குற்றம் சாட்டியபோது, ‘’சிரிப்பது மனிதர்கள் இயல்பு. மிருகங்கள்தான் சிரிக்காது” என்று சூடாகப் பதிலளித்தீர்கள். நியாயமான பதில்தான். ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நீங்கள் எந்த எதிர்க்கட்சிக்காரர்களையும் பார்த்து சிரித்ததில்லை. அப்படியானால் ஜெயலலிதா உங்களை மனிதர்களாக நடத்தியதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
* மூச்சுக்கு முன்னூறு தடவை ‘’அம்மாவின் ஆன்மா பேசியது”, ‘’அம்மா வழியில் நடப்போம்” என்கிறீர்கள். இப்போது உங்கள் ‘அம்மா’வான ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஊழல் குற்றவாளி. ஓர் ஊழல் குற்றவாளியின் வழியில் நடப்போம் என்று சொல்லும் உங்கள் அரசியல் பாதை நேர்மையாக இருக்கும் என்று எப்படி நாங்கள் நம்புவது?
* நீங்கள் முதல்வராக இருந்தபோதுதான் தலைமைச் செயலகத்திலேயே அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவரின் அறையிலேயே ரெய்டு நடந்தது. அதற்குப் பின் ராம மோகன்ராவ் பேட்டியளித்தபோது, “ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இப்படி நடக்கவிட்டிருக்க மாட்டார்” என்று பேட்டியளித்தார். இதுகுறித்த உங்கள் கருத்தை நீங்கள் இதுவரைக்கும் சொல்லவேயில்லையே?
* சசிகலாவின் ஆதிக்கம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இதைப் பற்றியெல்லாம் இப்போது நிறையப் பேசுகிறீர்கள். ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நீங்கள், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீது கார்டனில் ‘விசாரணை’ நடந்ததாகவும் நீங்கள் வீட்டுச்சிறை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதே, அதுகுறித்தும் விளக்கமளிப்பீர்களா?
* இறுதியாக ஒரே ஒரு கேள்வி. நீங்களும் சேகர் ரெட்டியும் திருப்பதியில் மொட்டை போட்டபடி நிற்கும் புகைப்படம் ரொம்பவே பிரபலம். அந்த ‘மொட்டை’ என்பது தமிழ்நாட்டுக்கான குறியீடு என்று எடுத்துக்கொள்ளலாமா?
No comments:
Post a Comment