Tuesday, February 28, 2017


பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமையே இல்லையா?



"நாளும் கிழமையும்
நலிந்தோருக்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கு இல்லை"

- கந்தர்வன்.

வெள்ளிக்கிழமை விடிந்ததுமே 'வீக் எண்ட்' கொண்டாட்ட மனநிலையும் பிறந்துவிடும். சனி, ஞாயிறு கிழமைகளின் விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்கிற யோசனைகள் உதிக்க தொடங்கி விடும். அதனால் வெள்ளிக்கிழமை சீக்கிரமாக செல்வதுபோல இருக்கும். ஞாயிறு மட்டும் விடுமுறை இருப்பவர்களுக்கு இவற்றை அப்படியே சனிக்கிழமைக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

வாரம் முழுவதும் உழைப்பவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது இயல்புதான். அது தேவையானதுதான். ஏனெனில், நீண்ட ஓட்டத்தில் சிறிது ரிலாக்ஸ் செய்தால், உற்சாகத்தோடு ஓட்டத்தைத் தொடர முடியும். ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெண்களின் வழக்கமான வேலைகளின் பட்டியல் நீண்டு விடும். விடுமுறை நாள்தானே என்று ஆண்கள் தாமதமாக தூக்கம் கலைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுந்ததுமே பசிக்கும். அதற்கு தயாராக காபி, டிபன் செய்ய வேண்டியது அந்த வீட்டின் பெண்கள்தான். அதனால் அவர்களால் விடுமுறையன்றும் அதிக நேரம் தூங்க முடியாது. ஆண்கள் டிபன் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்ப்பது, வெளியே செல்வது என்று 'பிஸி (!) ஆகிவிடுவார்கள். பெண்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கும்.

ஒரு வாரம் சேர்த்து வைத்த அழுக்குத் துணிகள் குவியலாக சேர்ந்திருக்கும். அதைப் பார்க்கும்போதே மலைப்பு வந்துவிடும். அவற்றை ஊற வைத்து, துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அவற்றை உலர வைக்க மொட்டை மாடியில் தூக்கிச் செல்வது இன்னொரு போராட்டம். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கும்போதே மதிய சமையலுக்காக இறைச்சி வங்கப்பட்டு தயராக இருக்கும்.

மதிய உணவு மீன் என்றால், அதை சுத்தம் செய்து சமைக்க இன்னும் நேரம் பிடிக்கும். இதற்கு இடையில் பிள்ளைகளைக் குளிக்க வைப்பது, படிக்கச் சொல்வதும் நடந்துகொண்டிருக்கும். ஒரு வழியாக மதிய உணவு முடிந்து 'அப்பாடா' என பெருமூச்சு விடும் பெண்களுக்கு சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்கள் வெல்கம் சொல்லும். 'அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம், கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றால், பூனைகள் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விடும். பாத்திரங்களைத் துலக்கி முடித்து, மொட்டை மாடியில் உலரும் துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தால், சூரியன் 'கிளம்பட்டுமா?' என்றுக் கேட்கும். இதற்குள் குழந்தைகள் விளையாடி, சில செல்ல சண்டைகள் போட்டு வர, அதற்கு பஞ்சாயத்துகளையும் பார்க்க வேண்டும். மறுபடியும் மாலை நேர காபி, இரவு டிபன் தயாரித்தல்... என அந்த நாள் முடியும். ஞாயிற்றுக்கிழமையை விட வார நாட்கள் பரவாயில்லையோ எனத் தோன்றிவிடும் பெண்களுக்கு.

அப்படியெனில், பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமை என்பதே கிடையாதா... அல்லது அது வழக்கமான இன்னொரு நாள்தானா?

உண்மையை ஒப்புக்கொள்வதெனில், பெண்கள் ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு வேலைகள் குவிந்துவிடுகின்றன. அதனால் விடுமுறைத் தினத்தை வரவேற்கும் மனநிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழல் மாற வேண்டும் அல்லவா?

நிச்சயம் மாறவேண்டும் என்பவர்கள். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் மன நிலையிலிருந்து வெளியேற வேண்டும். தொடக்கத்தில் தயக்கம் இருக்கத்தான் செய்யும். இந்தத் தயக்கம் ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் மனதில் ஏற்றப்பட்ட ஒன்று. அதை ஓரிரு நாட்களில் இறக்கி வைத்துவிட முடியாது. ஆனாலும் இப்போது தொடங்க விட்டால், அடுத்த தலைமுறைக்கும் இந்த வேலைப் பாகுபாடு பரவிவிடும். வீட்டு வேலைகளில் எல்லோரும் பங்கெடுக்கும்போது, வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு, எல்லோருக்குமான ஓய்வு நேரம் கிடைக்கும். அப்படி அமையும் பட்சத்தில் திங்கள் கிழமையை எதிர்கொள்வதை பெண்களால் திட்டமிட முடியும்.

இனி ஞாயிற்றுக்கிழமை ஓய்வும் கொண்டாட்டமும் பெண்களுக்கும் இருக்கட்டும்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...