மனச்சோர்வு... மனஅழுத்தம்... வழிவிடவேண்டாம்! நலம் நல்லது-79 #DailyHealthDose
மனச்சோர்வு, மனஅழுத்தம் இவை இரண்டும் இன்று புற்றுப்போல ஒவ்வொருவருக்குள்ளும் வளர்ந்துவருகின்றன. காரணம், நெரிசலும் இரைச்சலுமான வாழ்க்கைமுறை. இது பின்னாளில் முழு மனநோயாக உருவாக வாய்ப்பும் உண்டு. அது மட்டுமல்ல... காய்ச்சல், தலைவலி, புற்றுநோய் என மற்ற நோய்களை உருவாக்க, ஊக்குவித்து வளர்க்க மனஅழுத்தம் காரணமாகிவிடும். எனவே, மனச்சோர்வு... மனஅழுத்தம் இரண்டும் மிகத் தீவிரமாக அணுகவேண்டிய பிரச்னைகள்.
மூட்டுவலிக்கு முடக்கத்தான் தோசை, மாதவிடாய் வலி நீக்க உளுந்தங்களி, மைக்ரேன் தலைவலிக்கு இஞ்சி ரசாயனம்... இப்படி மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மனவலியைப் போக்கத்தான் மருந்து இல்லை. பணி நெருக்கடி ஒரு பக்கம், குட்டியூண்டு பாராட்டு, சுமையை இறக்கிவைக்க உதவும் அரவணைப்பு, மருந்தாகும் புன்னகை, நம் கவலைகளைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை... இவை இல்லாதது மறுபக்கம். இதன் காரணமாக, மனதை அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
மனஅழுத்தம்தான் காதலையும் கருத்தரிப்பையும் தாமதிக்கச் செய்கிறது. ஆண்களின் பிரத்யேக ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான், லேடிக் (Leydic Cells) செல்களில் இருந்து ஊற வேண்டும். ஆனால், இந்த மாற்றம் மனஅழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குறைவதும், உடலுறவுக்கான நாட்டத்தைக் குறைப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சினைமுட்டை சரியான நாளில் வெளியேறி, கருப்பையை நோக்கி வருவதைத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கலை ஏற்படுத்துகிறது மனஅழுத்தம்.
பெண்களுக்கு மனஅழுத்தத்தால் ஏற்படும் கருத்தரிப்பு கோளாறு மற்றும் சினைமுட்டைப் பிரச்னைகள் இரண்டுக்கும் எள் சிறந்த மருந்து. எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) தடவிய உளுந்தங்களியும், தொலி உளுந்தும் புழங்கல் அரிசியும் சேர்த்துச் சமைத்த உளுந்தஞ்சோறும், அதில் பிசைந்து சாப்பிட எள்ளுத் துவையலும் பெண்களுக்கான ஆரோக்கிய உணவுகள். ஆண்மையைப் பெருக்கும் ஆங்கில மருந்துகளில் பரவலாகச் சேர்க்கப்படும், `எல்-அர்ஜினைன்’ (L-Arginine) எனும் அமினோ அமிலமும் புரதமும் எள்ளில்தான் அதிகம் உள்ளன. எனவே, ஆண்களும் எள்ளை உணவில் சேர்த்து, அடிக்கடி சாப்பிடலாம். மனச்சோர்வு, மனஅழுத்தம் தொடர்பான பிரச்னைகளில் எள்ளும் உளுந்தும் மட்டும் உதவாது. மனஅழுத்தத்தை நீக்கும் புரிதலையும் பொறுமையையும் வளர்க்க வேண்டும். இன்றைய இன்ஸ்டன்ட் உலகில் இந்த இரண்டுக்குமான மெனக்கெடலுக்குப் பலருக்கு நேரம் இருப்பதில்லை என்பதே உண்மை.
`காளாஞ்சகப்படை’ என அழைக்கப்படும் சோரியாசிஸ், மனஅழுத்தத்தால் பெருகும் முக்கியமான தோல் நோய்களில் ஒன்று. வெட்பாலை மரத்தின் இலையை மட்டும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு, இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால், எண்ணெய் அடர்ந்த கருநீல நிறமாகும். அந்த எண்ணெயை சோரியாசிஸ் பாதித்த சருமத்தில் வெளிப் பூச்சாகப் பூசினால், இந்த நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும். இதை, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. மருந்துடன் மனசையும் லேசாக்கினால் மட்டுமே சோரியாசிஸ் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
மனச்சோர்வு, இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியமான தொல்லை. `கேஸ்ட்ரோஈஸோபேஜியல் ரெஃப்ளெக்ஸ் டிசீஸ்’ (Gastroesophageal Reflux Disease - GERD) - வயிற்று வலி வந்து, உணவை எதுக்களித்து, தொண்டையில் சமயங்களில் புண்ணையும் உண்டாக்குவது இந்த குன்ம நோய். அடிக்கடி ஆர்ப்பரித்து வெம்பும் மனம் இதற்கு ஒரு முக்கியமான காரணம். காரமான எண்ணெயில் பொரித்த உணவையும் கிழங்குகளையும் சில மாதங்கள் விட்டுவிட்டு, இட்லிக்கு பிரண்டைச் சட்னி, இடியாப்பத்துக்கு தேங்காய்ப்பால், மோர், சீரகத் தண்ணீர், இரவில் வாழைப்பழம்... என உணவைத் திட்டமிடுங்கள்.
`மலக்குடலுக்குள் வரும் சாதாரண பாலிப் (Polyp), மார்பகத்திலும் கர்ப்பப்பையிலும் வரும் சாதாரண நார்த்தசைக் கட்டிகள்... இவை, எப்போதும் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் இருப்பவர்களுக்கு புற்றுநோயாக மாற வாய்ப்பு இருக்கிறது’ என்கிறது இன்றைய அறிவியல். மனச்சோர்வில் இருந்து விடுபட மூச்சுப் பயிற்சியும் பிராணாயாமமும் மிக மிக அவசியம்.
வாழ்வில் கடந்துபோன ஏக்கமும், நேசமும், கோபமும், வலியும் வாழ்வின் பல பரிமாணங்களைக் காட்டி மன எழுச்சியைத் தரும். ஆனால், இன்றைய தலைமுறையோ இப்படி எதையும் கடக்காமல், பணமும் பணம் சார்ந்த அசைவுகளுமாக வாழும் தட்டையான நகரத்து ஓட்டங்களுக்குள் சிக்கியிருக்கிறது; சிக்கவிடப்பட்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கவேண்டியது அவசியம். மனச்சோர்வு, மனஅழுத்தம் போக்க இதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
No comments:
Post a Comment