Saturday, February 25, 2017

சின்னம்மா என அழைக்கப் பிடிக்கவில்லை: ஓபிஎஸ் அணிக்கு மாறிய பிரபலம் விளக்கம்




சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகை பாத்திமா பாபு தனது ஆதரவை தெரிவித்தார்.
அதிமுகவில் சசிகலா அணி, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து மௌனம் காத்து வந்த பாத்திமா பாபு நேற்று தனது மௌனத்தைக் கலைத்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான பாத்திமா பாபு சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.
இது குறித்து தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பதில் அளித்த பாத்திமா பாபு, இப்போதும் மக்கள் முதல்வராக பன்னீர்செல்வம்தான் இருக்கிறார். காபந்து முதல்வராக எப்போதுமே ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை மட்டுமே தேர்வு செய்தார்.
ஆனால், தற்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத, அவரால் எந்த அவை நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது என்று கூறியவர்கள்தான் முக்கியப் பொறுப்புகளுக்கு வர போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் வளர்த்த கட்சியை, தனது குடும்பத்தாருக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதோடு, செய்தித் தொலைக்காட்சியில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயரோடு, அம்மா என்றோ, புரட்சித் தலைவி என்றோ அழைத்ததில்லை. ஜெயலலிதா என்று தான் செய்திகளில் குறிப்பிடுவோம். ஆனால், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதும், அவரை செய்திகளில் கூட சின்னம்மா என்று அழைக்க வலியுறுத்தினர். இது நெருடலை ஏற்படுத்தியது.
அதனால், மக்கள் விரும்பும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தேன் என பாத்திமா பாபு கூறியுள்ளார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024