Saturday, February 25, 2017

ரேஷனில் இலவச கோதுமை 'நோ' : ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்

ரேஷன் கடைகளில் இலவச கோதுமை வழங்காமல், அலைக்கழிப்பு செய்வதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரருக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கிலோ, 7.50 ரூபாய் விலையில், 10 கிலோ கோதுமை; மற்ற பகுதிகளில், ஐந்து கிலோ விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம், 2016 நவம்பரில் அமலானது. இதனால், நான்கு உறுப்பினர்கள் உள்ள ரேஷன் கார்டுக்கு, 20 கிலோ அரிசி; அதற்கு மேல் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக, ஐந்து கிலோ அரிசி இலவசமாக தரப்படுகிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், ரேஷனில் இலவச கோதுமை திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, அரிசி வாங்குவோர், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு, கோதுமையை இலவசமாக பெறலாம். இருப்பை பொறுத்து, 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. 

தற்போது, பெரும்பாலான ரேஷன் கடைகளில் கோதுமை வினியோகம் செய்வதில்லை.இதுகுறித்து, ரேஷன் கார்டுதாரர்கள் கூறுகையில், 'பலருக்கு நீரிழிவு நோய் உள்ளதால், ரேஷனில் அரிசி வாங்காதோர், கோதுமை வாங்கினர். விலைக்கு விற்கும் போது எப்போது சென்றாலும், கோதுமை கிடைக்கும். தற்போது, கோதுமை கேட்டால், 'நோ ஸ்டாக்' என, ஊழியர்கள் கூறுகின்றனர்' என்றனர். 

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில் வழங்க மாதந்தோறும், 17 ஆயிரம் டன் கோதுமையை, மத்திய அரசு தருகிறது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும், போதிய அளவு, கோதுமை சப்ளை செய்யப்படுகிறது. ஊழியர்கள் கோதுமை தராவிட்டால், உணவு வழங்கல் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024