நெடுவாசல் பிரச்னையை கையில் எடுக்கும் மீம்ஸ் படை!
சமீப வருடங்களில் உலகை ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க வைத்த விஷயம் மீம்ஸ். முதலில் ட்ரோல் எனப்படும் சீண்டல் வகை மீம்ஸ்களே அதிகம் வர ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து வந்தவையும் காமெடியான விஷயங்களே. மெல்ல, அந்த வடிவத்துக்கு மக்கள் பழகியவுடன், போட்டோ மீம்ஸீல் இருந்து Gif, வீடியோ என வளர்ந்தது அதன் பயணம். இப்போது செய்திகளை கூட மக்கள் மீம்ஸில் படிக்கவே விரும்புகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்தில் தொடங்கி கோலியின் சதம் வரைக்கும் எல்லாவற்றுக்கும் மீம்ஸ் தான். மெரீனா போராட்டத்திலும் மீம்ஸின் பங்கு முக்கியமானது. அந்த மீம் க்ரியேட்டர்ஸ் அடுத்து கையில் எடுத்திருப்பது நெடுவாசல் போராட்டம் .
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இது மீத்தேன் திட்டத்தின் இன்னொரு பெயர்தான். விவசாயத்தையும், மண்ணையும், மக்களையும் அழிக்கும் இந்தத் திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை உலகளாவிய தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்லவும், இந்தத் திட்டம் பற்றியும், அதன் ஆபத்துகள் பற்றி எடுத்துச் சொல்லவும் மீம்ஸ்கள் பறக்க தொடங்கிவிட்டன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களின் பின்னால் அணில் போல அல்ல; யானை போல இருந்து ஆதரவு அளித்து வருகிறார்கள் மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்.
இது பற்றி மீம் க்ரியேட்டர் ராஜீவிடம் பேசினோம்
"நானும் ஆரம்பத்துல காமெடிக்கு மட்டும் மீம்ஸ்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, அதோட ரீச்சும், பலமும் லேட்டாதான் புரிஞ்சது. ரத்தம் வேணும்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுறதுக்கும், அதையே ஒரு கான்செப்ட்ல அழகா மீமா போடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குன்னு புரிஞ்சது. மக்களோட மனச தொடுற விஷயத்துக்குத்தான் அவங்க அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப மக்களோட மனச ஈசியா ரீச் பண்ண மீம்ஸ் உதவியா இருக்கு. அத சரியான வழியுல பயன்படுத்தணும்ன்னு இளைஞர்களுக்கு தெரியுது. அதோட விளைவுகள்தான் இதெல்லாம். நெடுவாசல் மட்டும் இல்ல. இனிமேல் மக்கள் போராட்டங்கள் எல்லாத்திலும் மீம்ஸூக்கு பங்கு இருக்கும்"
இணையத்தில் பெரும்பாலும் தேவையற்ற விஷயங்களையே இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில், இது போன்ற விஷயங்கள் நம்பிக்கையை கொடுக்கின்றன. மீம்ஸ் உருவாக்குபவர்கள் கொஞ்சம் தேடி, அலசி உண்மையான, சரியான விஷயங்களை மட்டுமே கொடுப்பார்களேயானால், இந்த மாற்றம் நூற்றாண்டின் முக்கியமான விஷயமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
-கார்க்கிபவா
No comments:
Post a Comment