Saturday, February 25, 2017

அப்போது வாடிவாசல்... இப்போது நெடுவாசல்... வலுக்கும் போராட்டம்..!

vikatan.com

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் கட்சிகளுக்கு இடையே அதிகாரமோதல் எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அரசு அமைதியாக ஓர் ஒப்புதலை வழங்கியது. அதில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. அந்த அனுமதியினை வெளியிட்ட நிதியமைச்சர் அருண்ஜெட்லி "இந்தியாவில் மொத்தம் 31 இடங்களில் 'ஹைட்ரோகார்பன்' எனும் இயற்கை எரிவாயு எடுக்கப்படும்" என்று அறிவித்தார். அந்த 31 இடங்களில் 17 இடங்களில் தனியார் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை எடுக்கும். அதில் கமிஷன் தொகையை மட்டும் மத்திய அரசு பெற்றுக்கொள்ளும். ஒரே நிறுவனம் 14 இடங்களில் ஹைட்ரோகார்பன் வாயு எடுக்க அனுமதி வாங்கியுள்ளது. இந்த இயற்கை எரிவாயுவுக்காக தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான், புதுக்கோட்டை மாவட்டம்., நெடுவாசல் கிராம். இந்த நெடுவாசலானது தஞ்சாவூர் மாவட்ட எல்லைப்பகுதியில் டெல்டா பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதற்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல்கேஸ் ஆகிய திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த எரிபொருள் எண்ணெய்கள் இருப்பதைக் கண்டறிய 2009-ம் ஆண்டே தமது வேலையைத் தொடங்கி ஆரம்பித்துவிட்டது ஓ.என்.ஜி.சி நிறுவனம். நெடுவயல் அருகிலுள்ள கருங்காகுறிச்சி கிராமத்தில் இரண்டு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பின்னர் அங்கு ஆழ்துளைக்கிணறு தோண்டும் பணியினை ஆரம்பித்தது. அங்கிருந்த நிலத்தடிநீரை வெளியேற்றிய பின்னர் எரிபொருள் எண்ணெயும், வாயுவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் எரிவாயுக்கழிவுகள் அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதற்கிடையில் நெடுவயலில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் சிலர் விபரம் தெரியாமல் நிலங்களைக் கொடுத்திருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் நெடுவாசல் மக்கள் அனைவரும் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது எனத் தெரிந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து 19-ம் தேதி காரைக்காலில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குழுவானது நெடுவாசலை ஆய்வு செய்ய வருகிறது. அதைத் தெரிந்துகொண்ட விவசாயிகள் "இங்கு எதற்கு வருகிறீர்கள்" எனத் தடுத்து வாகனத்தைச் சிறைபிடித்து அதிகாரிகளைத் திருப்பி அனுப்பினர். ஆனால் மக்கள் அத்துடன் நிறுத்தாமல், ஹைட்ரோகார்பன் வாயுவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.



நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சரவணக்குமார் என்ற விவசாயி நம்மிடம் பேசினார். "மீத்தேன் திட்டமானது டெல்டா மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. என்னுடைய நிலத்தைக் கேட்டு மிரட்டும் தொனியிலும் பேசினர். என் தந்தையை அழைத்து 50 பேர் சுற்றி அமர்ந்து கொண்டு கேள்வி கேட்டு நிலத்தை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், எங்களைச் சுற்றி இருந்த நிலங்களை மண்ணெண்ணெய் எடுக்கப்போகிறோம் என ஏமாற்றி வாங்கிவிட்டார்கள். இதுவும் டெல்டாவின் ஒரு பகுதிதான். அதனால்தான் இங்கு ஹைட்ரோகார்பன் வாயு இருப்பதாகச் சொல்லி ஆழ்துளைக்கிணறு அமைக்கப் பார்க்கிறார்கள். அவ்வாறு அமைத்தால் அருகில் உள்ள கடல்நீரானது பூமிக்குள் புகும். இதனால் நிலத்தடி நீர்வளம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். ஹைட்ரோகார்பன் எனச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஹைட்ரோகார்பன் குடும்பத்தில் மொத்தம் 12 வாயுக்கள் உள்ளன. அதில் முதலிடம் மீத்தேனுக்குத்தான். ஆழ்துளை அமைக்கப்பட்டு விட்டால் என்ன வாயு எடுக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. வாயுக்களைப் பிரித்தெடுக்கும்போது வாயுவிலிருந்து வெளியேறும் கழிவுகள் இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்குத் தீமையை ஏற்படுத்தும். வெளிநாட்டில் பத்து ஆண்டுகள் வேலை செய்து சேர்த்த பணத்தை வைத்து விவசாயக் கருவிகளை வாங்கி விவசாயத்தை ஆரம்பித்திருக்கிறேன். இப்போது இந்த இடத்தில் இவர்களை எடுக்கவிட்டால் அடுத்ததாக காவிரி டெல்டா மாவட்டத்தில்தான் இந்தப் பணி தொடரும். நாங்களே குறைந்த அளவு நிலத்தடிநீரை வைத்துத்தான் விவசாயம் பார்த்து வருகிறோம். உயிரக்கொடுத்தாவது இந்தத் திட்டத்தை எதிர்ப்போம்" என்றார்.



ஹைட்ரோகார்பன் வாயுவானது எடுக்க ஆரம்பித்த பின்னர் அந்த நிறுவனத்தை அவ்விடத்தை விட்டு நீக்குவது மிகக் கடினம். 31 இடங்களை அறிவித்துவிட்டு தமிழ்நாட்டில் முதன்முதலில் திடமாக கால்பதிக்கப் பார்க்கிறது தனியார் நிறுவனம். நெடுவாசலில் எண்ணெய் எடுக்கும் 'ஜெம் லெபாரட்டரீஸ்' நிறுவனமும் இப்போதுதான் முதல்முறையாக எண்ணெய் எடுக்கும் வேலையைச் செய்யப்போகிறது. இந்த நிறுவனம் மத்தியில் ஆளும் அரசான முன்னாள் பிஜேபி எம்.பிக்கு சொந்தமானது. தற்போது சரியான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி இப்போது கையை விரிக்கிறது. இதனால் எடுக்கப்போகும் வாயுவினால் மத்திய அரசுக்குக் கிடைப்பது கமிஷன் மட்டுமே. விலை நிர்ணயம் செய்வது ஆயில் எடுக்கும் தனியார் நிறுவனங்கள்தான். புதுக்கோட்டை மக்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். புதுக்கோட்டை மாணவர்களும் கல்லூரியை புறக்கணித்து போராட்டக்களத்தில் இணைந்திருக்கிறார்கள். அப்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் வாடிவாசலுக்காக நடந்தது. இப்போதைய போராட்டம் நெடுவாசலுக்காக ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024