Tuesday, February 28, 2017

தமிழை கொலை செய்யும் தமிழ் படங்கள் - சமூக ஆர்வலர்கள் வேதனை

தமிழுக்கு ஏற்பட்ட வறட்சியால், தமிழ் படங்களே தமிழே கொலை செய்து வருகின்றன. வாயில் நுழையும் வார்த்தைகள் எல்லாம், படங்களின் தலைப்பாக மாறுவது, கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜென்டில்மேன், லவ் டுடே என, தமிழ் படங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் கலாசாரம் அதிகரித்தது. 'தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே, படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்' என்ற நடைமுறை, தி.மு.க., ஆட்சியில் அமலானது. 
தமிழா, இல்லையா குழப்பம்:

ஜில்லா, மிருதன், கெத்து, கபாலி, ஜில் ஜங் ஜக், மெட்ராஸ் உட்பட, பல படங்களின் பெயர்கள், தமிழா, இல்லையா என, சர்ச்சை எழுந்து, வரி விலக்கு கிடைப்பதிலும் சிக்கல் உருவானது. சமீப காலமாக, சேதுபதி, போக்கிரிராஜா, மனிதன், கொடி, படிக்காதவன், பொல்லாதவன் என, பழைய படங்களின் பெயர்களே, புதிய படங்களுக்கு சூட்டப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், தற்போது வாயில் நுழையும் வசனத்தையும், தலைப்பாக மாற்றி வருகின்றனர். த்ரிஷா இல்லைனா நயன்தாரா, தலையில் ஏண்டா எண்ணெய் வைக்கல, கெட்ட பையன் சார் இவன், குரங்கு கையில பூமாலை, நாளை முதல் குடிக்க மாட்டேன் என, இப்பட்டியல் நீள்கிறது. 

இது குறித்து, தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது: கனவு வாரியம் போன்ற தமிழ் படங்கள், சர்வதேச அளவில் விருது வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், தமிழ் படங்களுக்கான அடையாளம் மற்றும் கலாசாரமும் குறைந்து வருகிறது. தமிழ் படங்களில் இடம் பெறும், 70 சதவீத பாடல் மற்றும் வசனங்கள், 'தமிங்கிலீஷ்' ஆகவே உள்ளன.
மக்களை எளிதில் சென்றடையும் சினிமா போன்ற தளங்களை, தமிழின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளத்திற்கும் பயன்படுத்த வேண்டும். தற்போதைய நிலை நீடித்தால், அடுத்த தலைமுறைக்கு, திருக்குறள் கூட புரியாமல் போய்விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024