Monday, February 27, 2017

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியா? நீடிக்கும் குழப்பம்

By வாணிஸ்ரீ சிவக்குமார்  |   Published on : 27th February 2017 01:14 PM  |   
jaya

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியா? இல்லையா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இதற்கு தொடர்ந்து பல தரப்பில் இருந்து விளக்கம் வந்து கொண்டுதான்  இருக்கிறது.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம்  உறுதிப்படுத்தியது.

எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவருக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் அளித்தனர். இருவரும் சேர்ந்து மொத்தம் 563 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்தனர். மேலும், நீதிபதி அமிதவா ராய் தனியாக ஏழு பக்கத் தீர்ப்பை அளித்தார்.
ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான தண்டனை நீக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கும் கருத்துக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் திமுக, அவரது படத்தை அரசு அலுவலகங்களிலோ, அரசு நிகழ்ச்சிகளிலோ பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில்,அரசியல் விமரிசகர் சுமந்த் ராமன் நேற்று தனது டிவிட்டரில் இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ஜெயலலிதாவுக்கு (எ1) சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை, எனவே, சட்டப்படி அவரை உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கவில்லை.
மேலும், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான தண்டனை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான மேல்முறையீடே தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தையும் கேட்டுள்ளேன் என்று  கூறியுள்ள சுமந்த் ராமன், Dr. ராஜேந்திர கோயலின் டிவிட்டர் பதிவையும் ரீ-டிவீட் செய்துள்ளார்.
அந்த பதிவில்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இருந்து நேரடியாக விளக்கம் எடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது,
பாரா 2. இறுதியாக வைக்கப்பட்ட வாதங்களின் நிறைவாக, குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் மரணம் அடைந்துவிட்டதால் சட்டப்படி, அவர் மீதான மேல்முறையீடு நீக்கப்படுகிறது.
பாரா 541. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். எனவே, அவர் மீதான மேல்முறையீடு கைவிடப்படுகிறது. அதே சமயம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
பாரா 542ல். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, மற்ற குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கு உரிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவர் மரணம் அடைந்துவிட்டதால், அவர் மீதான முறையீடு நீக்கப்படுகிறது. அதே சமயம், மற்ற மூன்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், சிறப்பு விசாரணை நீதிமன்றம் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஆராய்ந்து அளித்த தீர்ப்பு முழுமையாக உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கங்களை அடிப்படையாக வைத்து, சுமந்த் ராமன் தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் இறந்துவிட்ட நிலையில், மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்ப்பில், ஊழல் தடுப்புத் சட்டத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பதவி வகித்தவர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்து விட்டால் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு தண்டனை விதிக்க முகாந்திரம் உள்ளது என்று ஏற்கெனவே 2014-இல் உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கான தண்டனை நீக்கப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிப்படுத்தப்படுவதால், அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைந்து மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவர்களுக்கான மீதமுள்ள தண்டனைக் காலத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கையை பெங்களூரு தனி நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...