கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி
கர்நாடகாவில் யாதகிரியில் இறந்ததாக கருதப்பட்டு, இரவெல்லாம் பிணமாக கிடந்தவர் திடீரென எழுந்து ‘‘பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால் அங்கு அழுது கொண்டிருந்த உறவினர்கள் அலறி அடித்து ஓடினர்.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் மடலிங்கனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கப்பா (57). விவசாயியான இவர் கடந்த 16-ம் தேதி இரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நிங்கப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த 23-ம் தேதி மருத்துவர்கள் கூறியபோது, ‘‘நிங்கப்பா உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உயிர் பிழைப்பது கஷ்டம். இன்னும் 3 மணி நேரம்தான் உயிரோடு இருப்பார்'' என நேரம் குறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ‘‘நிங்கப்பாவின் ஆசைப்படி அவரது சொந்த வீட்டில்தான் உயிர் போக வேண்டும். எனவே வீட்டுக்கு கொண்டு போகிறோம்'' என கூறி மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். ஆம்புலன்ஸ் மூலமாக யாதகிரியில் இருந்து மடலிங்கனாலா கிராமத்துக்கு கொண்டு சென்றனர். பாதி வழியிலே நிங்கப்பாவின் உடலில் வெப்பம் குறைந்ததால் உறவினர்கள் பதறினர்.
நிங்கப்பாவை பரிசோதித்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவமனையின் ஊழியர், ‘‘இப்போதுதான் உயிர் பிரிந்து இருக்கிறது.அவர் இறந்துவிட்டார்'' என அறிவித்தார். இதனால் கதறி அழுத உறவினர்கள், வீட்டுக்கு கொண்டு சென்று படுக்க வைத்தனர். நிங்கப்பா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் ஊர் மக்கள் எல்லாம் கூடி விடிய விடிய அழுதனர்.
அதிகாலை 3 மணியளவில் நிங்கப்பா திடீரென எழுந்து உட்கார்ந்து, ''பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் அழுது கொண்டிருந்த பலர் பீதி அடைந்து சிதறி ஓடினர். இறந்ததாக கூறப்பட்டவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அங்கு பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு யாதகிரியில் 17 வயதான குமார் என்ற இளைஞர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது அவர் திடீரென எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment