Tuesday, February 28, 2017

டுபாக்கூர் 'இ - டிக்கெட்' முகவர்களிடம் உஷார் : ரயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., எச்சரிக்கை | Dinamalar

கோவை: அனுமதியற்ற, 'இ - டிக்கெட்' முகவர்கள் அதிகரித்து உள்ளதாக எச்சரித்துள்ள, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், 'போலி முகவர்கள் பற்றி ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் புகார் அளிக்கலாம்' என, அறிவுறுத்தி உள்ளது. 

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005 முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆன்மிகம், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களுக்கு, சிறப்பு ரயில்களில் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
முன்பதிவு

ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, உணவும் முன்பதிவு செய்து கொள்வது இத்திட்டத்தின் சிறப்பம்சம். தவிர, மாநிலம் முழுவதும், ஐ.ஆர்.சி.டி.சி., அனுமதி பெற்ற, 1,000 முகவர்கள் மூலமும் இதர ரயில்களுக்கு, இ - டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி டிக்கெட் முகவர்கள் அதிகரித்து வருவதாக, சமீப காலமாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே, பயணி யர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் குறிப்பிடப்பட்ட முகவர்களிடம் மட்டும் இ - டிக்கெட் பெற்று, ஏமாறுவதை தவிர்க்கலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனுமதியற்ற டிக்கெட் முகவர்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் அதிகம் வருகின்றன. இத்தகைய நபர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கில் தாங்களாகவே, 'யூசர் ஐடி' ஒன்றை உருவாக்கி, பயணிகளையும், ரயில்வே நிர்வாகத்தையும் ஏமாற்றுகின்றனர். 

டிக்கெட்டுக்கு, 500 ரூபாய் வரை கமிஷன் பெற்று ஏமாற்றுவதாகவும் புகார்கள் வருகின்றன. இத்தகைய நபர்களிடம் பெறப்படும் டிக்கெட்டுகள் செல்லத்தக்கதல்ல; டிக்கெட் கட்டணமும் திரும்பக் கிடைக்காது.

நடவடிக்கை

பயணிகள், www.irctc.com என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட முகவர்களை மட்டுமே டிக்கெட் பெறுவதற்கு தொடர்புகொள்ள வேண்டும். அனுமதியற்ற முகவர்கள் குறித்து ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024