Tuesday, February 28, 2017

எக்ஸ்பிரஸ் ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தும் பணி தீவிரம்; பிளாட்பார்ம்களில் மூக்கை பிடித்து செல்வதற்கு விமோசனம்!


கோவை : கோவை - ராமேஸ்வரம் ரயிலில், 'பயோ டாய்லெட்' வசதி முழுமையடைந்துள்ள நிலையில், இதர எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இவ்வசதியை விரிவுபடுத்தும் பணி, கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது. பசுமை ரயில் பாதை திட்டத்தால், பிளாட்பார்ம் பயணிகள் மூக்கை பிடித்து செல்வதற்கு விமோசனம் கிடைத்துள்ளது.

ரயில் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, ரயில்வே ஸ்டேஷன்களும், ரயில் பெட்டிகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவது ஒருபுறம் இருப்பினும், ரயில் கழிவறையிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளால் பிளாட்பார்ம் பயணிகள் மூக்கை பிடித்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.நீண்டதுார ரயில்களில் பயணிகள் கழிவறையை பயன்படுத்துவது அதிகம் என்பதால், பெட்டிகளில் தண்ணீர் காலியாவதுடன், தண்டவாளங்களிலும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க, 'இக்கோ பிரண்ட்லி பயோலஜிக்கல் டாய்லெட்' இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவுசெய்தது.

அதன்படி, ராமேஸ்வரம் - மானாமதுரை இடையிலான ரயில்பாதை மனிதக் கழிவுகள் வெளியேறாத நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 'துாய்மை இந்தியா' திட்டத்தின்படி, ரயில் பெட்டிகளில் இந்த 'பயோ டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டு பசுமை வழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் நடந்த குடியரசு தின விழாவில், 35 பெட்டிகளில் ஏற்கனவே, 140 'பயோ டாய்லெட்' பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த, கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, கோவை - ராமேஸ்வரம் பசுமை ரயில் உட்பட, பல்வேறு ரயில்களில், 120 பெட்டிகளில், 'பயோ டாய்லெட்' வசதிகள் விரைவில் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை ரயில்வே ஸ்டேஷனை பொறுத்தவரை தினமும் இயக்கப்படும், 72 ரயில்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், குறுகிய துார ரயில்கள் தவிர, வட இந்தியா வரை செல்லும் நீண்ட துார எக்ஸ்பிரஸ் ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன் பணிமனையில் ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. முதற்கட்டமாக, கோவை - ராமேஸ்வரம் ரயிலில் இந்த வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதர எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழி பிறந்துள்ளது.

இதுகுறித்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராசு கூறுகையில், ''கோவை - ராமேஸ்வரம் ரயில் பெட்டிகளில் 'பயோ டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏ.சி., ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் படிப்படியாக, 'பயோ டாய்லெட்' வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

விசேஷ தொழில்நுட்பம்!
'பயோ டாய்லெட்' எனப்படும் இந்த உயிரி கழிவறையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது. இந்த கழிவறைகளில் ஆறு கட்டமாக மனிதக் கழிவுகள் மக்கச் செய்யப்படுகிறது. சூற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பயணிகள் கழிப்பறையில் போடும் மதுபாட்டில்கள் போன்றவற்றால், அவை செயலிழக்க வாய்ப்புள்ளதாக பராமரிப்பு பொறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024