ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் இயங்கும் தொடக்கப்பள்ளி: ஆசிரியர்களின் சம்பளத்தில் வாடகை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் வாடகைக்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை ஊராட்சிக்கு உட்பட்டது வினாயகபுரம் கிராமம். போக்குவரத்து அதிகம் இல்லாத இக்கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும்.
இக்கிராமத்தில் 1978-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டது. ஏழாண்டுகளுக்கு பிறகு 1985-ல் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 11 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளிக் கட்டிடம் வலுவிழந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அரசு உத்தரவின்படி பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி பயின்றனர். ஆனாலும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அப்பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் என்பவரது முயற்சியால் அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு அறையை பள்ளியாக மாற்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறைக்கான வாடகையை பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து கொடுத்து வருகின்றனர்.
இந்த வீட்டின் மேற்கூரை ஓடுகளால் ஆனதால் வெயில் காலங்களில் மாணவர்கள் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கூடம் அதே வீட்டின் பின்புறம் செயல்பட்டு வருகிறது. மேலும், போதிய இடவசதி இல்லாததால் பெஞ்ச், ஆவணங்கள் வைக்கும் பீரோ ஆகியவை வைத்து பயன்படுத்த முடியவில்லை. மாணவர்களும் தரையில் அமர்ந்து தான் படிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், “எங்கள் ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள், தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத நிலையில் உள்ளவர்கள். அரசு கிராமப்புற மாணவர்கள் படித்து முன்னேறும் வகையில் பல்வேறு நடவடிக்கையை எடுத்தாலும், எங்கள் ஊர் போல போக்குவரத்து இல்லாத உட்பகுதியில் உள்ள பள்ளிகளின் நிலை இது தான். எனவே எங்களை போன்ற ஏழைகளின் பிள்ளைகள் படிக்க உடனடியாக பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment