Sunday, February 26, 2017


மருத்துவக் கனவை நனவாக்க இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு! #NEET
vikatan.com



மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) படிக்க திட்டமிட்டு இருக்கும் மாணவர்கள் வழக்கம் போல கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு கல்லூரியில் சேர்ந்து விடலாம் அல்லது கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்ந்து விடலாம் என்று திட்டமிட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வினையும் எழுதி இருந்தால் மட்டுமே மெடிக்கல் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 தேதியே கடைசி. அதன் பின்பு விண்ணப்பிக்கவும் முடியாது, மருத்துவ சேர்க்கையிலும் பங்குபெற முடியாது என்பதால் மறக்காமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து விடவும். விண்ணப்பம் வாங்க எங்கும் போகத்தேவையில்லை. இணையத்தளத்திலேயே விண்ணப்பித்தால் போதுமானது. இதற்கான இணையத்தளம் www.cbseneet.nic.in

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உங்களுடைய ஆதார் எண் அவசியம் என்பதால், ஏற்கெனவே ஆதார் கார்டு வாங்கி வைத்திருந்தால் அதனைத் தேடி வைத்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் போது உதவியாக இருக்கும். ஆதார் அட்டையில் உங்களுடைய பெயர், பிறந்த நாள் போன்றவற்றை எப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அதைப்போலத்தான் உங்களுடைய விண்ணப்பத்திலும் குறிப்பிட வேண்டும். வெளிநாட்டு இந்தியர்களாக இருந்தால் பாஸ்போர்ட் எண்ணைக் குறிப்பிட வேண்டும். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 17 வயதை அடைந்திருக்க வேண்டும். 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டு வரை வயது வரம்பு விலக்கு உள்ளது.

நீட் தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணைப் பெற வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது (General) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு ரூ. 1400 ரூபாயும், தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடியினத்தவர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PH) ரூ. 750 ரூபாய் கட்டணம். தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் (BC மற்றும் MBC) பிரிவைச் சார்ந்தவர்கள் OBC பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், மொபைல் வேலட்டுகளின் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முன்னர், உங்களுடைய புகைப்படத்தை ஸ்கேன் செய்து இணையத்தில் வைத்திருக்கவும். அதைப்போலவே போஸ்ட் கார்டு அளவுள்ள உங்களது புகைப்படம், உங்களுடைய கையெழுத்து, வலது கைரேகை போன்றவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். நீட் விண்ணப்பத்தில் மாணவருடைய மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி அல்லது பெற்றோருடைய மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட வேண்டும். ஏதேனும் தகவல் அல்லது மாற்றங்கள் இருந்தால் நீட் தேர்வினை நடத்துபவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு குறுந்தகவலோ அல்லது மின்னஞ்சலோ அனுப்புவார்கள். அதனால் விண்ணப்பத்தில் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் தவறுதல் இல்லாமல் கொடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பித்தவுடன், அந்த விண்ணப்பப் படிவத்தினை மூன்று பிரிண்ட் செய்து எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பக்கட்டணத்திற்கான ஆதாரத்தைக் கையில் வைத்திருங்கள்.

நீட் தேர்வின் மூலம் இந்திய முழுவதும் உள்ள மத்திய அரசின் கோட்டாவில் சேர முடியும். மாநில அரசின் கோட்டாவிலும் சேரலாம். தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும், மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசுக்கான ஒதுக்கீட்டிலும் சேரலாம்.

மே 7 தேதி நீட் தேர்வு நடக்க இருக்கிறது. மார்ச் மாதம் முழுவதும் பொதுத்தேர்வில் கவனம் செலுத்தவும். அதன் பின்பு ஏப்ரல் மாதம் முழுவதும் நீட் தேர்வில் கவனம் செலுத்தி நீட்டாக மதிப்பெண் பெறலாம். இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) பாடங்களில் இருந்து 180 கேள்விகள் சரியான விடையினை தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் கேட்கப்படும். மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். கேள்விகள் பதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது பாடங்களில் இருந்து கேட்கப்படும். தமிழ் மொழியிலும் கேள்வித்தாள்கள் இருக்கும் என்பதால் தமிழ் மீடியம் படித்தவர்கள் கவலைகொள்ள தேவையில்லை. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள். தவறாகப் பதிலளித்தால் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. உங்களுக்கு எந்த நகரம் அருகிலும், பேருந்து, ரயில் போக்குவரத்து எளியதாக இருக்கிறது என்று பார்த்து தேர்ந்தெடுக்கவும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வினை விலக்களிக்கக்கோரி சட்ட மன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவிற்கு மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை ஒப்புதல் அளித்தபின்பு குடியரசு தலைவர் கையெழுத்திட வேண்டும். இந்த மசோதா குறித்து தமிழக முதலமைச்சரும் 27-ம் தேதி பிரதமரை சந்தித்துப் பேச இருக்கிறார். ஆனால் இது எல்லாம் சாத்தியம் ஆவதற்கு முன்னால் விண்ணப்பத்தேதி நெருங்கி வருவதால் விண்ணப்பித்து இருப்பது மிகவும் நல்லது. இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் அலுவலத்தில் பேசிய போது "குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்த தீர்ப்பு நமக்குச் சாதகமாகவும் வரலாம், எதிராகவும் வரலாம் என்பதால் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது" என்று சொன்னார்கள்.

மருத்துவம் படிக்க விரும்பவர்கள் காலம் தாழ்த்தாமல் எந்த முடிவினையும் எதிர்பார்க்காமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும். ஆல் த பெஸ்ட்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024