Friday, February 24, 2017


தவறான நட்பால் வீழ்ந்த ஆலமரம் ஜெயலலிதா!

VIKATAN




ஜெயலலிதா... இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். திரைப்பட நடிகையாகத் தொடங்கிய இவரது வாழ்க்கை, அரசியலுக்குள் நுழைந்ததும் பல அதிர்ச்சியான திருப்பங்களுடன் நகர்ந்தது. அ.தி.மு.கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியதையே தனது பலமாக மாற்றிக்கொண்டார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வரானார். ஆனால், அவரின் வாழ்க்கை முடிவு இனிமையாக இல்லை. இறப்புக்குப் பிறகு அவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் கூறிவிட்டது. வரலாற்றில் இருந்து நீங்காத கறையாக இது அமைந்துவிட்டது. பணம், புகழ் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஜெயலலிதாவை இந்த இடத்துக்கு நகர்த்தியது எது?

தன்னிடம் உண்மையாகவும் அன்பாகவும் இருக்கும் நபர்களிடம் நெருக்கமாகப் பழகும் தன்மைகொண்டவர் ஜெயலலிதா. புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள புத்தகங்களைத் தேடி வாசிக்கும் பழக்கம்கொண்டவர். திரைப்படத் துறையில் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக ஷீலா இருந்தார். புத்தகங்கள் வாங்கச்செல்வது தொடங்கி, வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் இடம்பிடிப்பவராக அவர் இருந்தார். அம்மா சந்தியாவே உலகம் என்றிருந்த ஜெயலலிதாவுக்கு, தாயின் மறைவுக்குப் பிறகு ஆலோசனைகள் கூறும் தோழியாகவும் ஷீலா இருந்தார். பின்னர் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டவர்தான் சசிகலா.

வாழ்வின் பல அடுக்குகளிலும் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா. யாரேனும் ஒருவரை முழுமையாக நம்புவது. முதலில் தனது அம்மா, அடுத்து, தோழி ஷீலா, பிறகு சசிகலா. (இடையில் இன்னும் சிலரும் இருந்தனர்) ஜெயலலிதா நட்பு கிடைத்ததும், மன்னார்குடியில் பிரமாண்டக் கூட்டம் நடத்துகிறார் சசிகலா. அதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், ஜெயலலிதாவின் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க, பிள்ளையார் சுழியாகவே அந்தக் கூட்டம் அமைந்தது. சசிகலாவின் கணவர் நடராஜன் துணையோடு ஜெயலலிதா அரசியலில் பல இடங்கள் முன்நகர்கிறார்.

எம்.ஜி.ஆர் மறைவின்போது ஜெயலலிதாவை அ.தி.மு.கவில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓரங்கட்ட நடந்த முயற்சிகளை சசிகலா - நடராஜன் தம்பதியினர் துணையோடு முறியடிக்கிறார். அந்த நேரத்தில் இவர்களின் இருப்பும் உதவிகளுமே இறக்கும் வரை சசிகலாவைத் தன் பக்கத்தில் வைத்திருக்கும் சூழலை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியது. ஜெயலலிதா முதல்முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்று சட்டமன்றம் செல்கையில், எந்தவித பதவியும் இல்லாத சசிகலாவை சபாநாயகர் இருக்கையில் அமரச்செய்தார். இந்தச் செயல் சசிகலாவுக்கு எந்தளவு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அந்தக் கட்சியினருக்கு உணர்த்தியது. பொதுமக்கள் மத்தியிலோ அதிப்தியை உண்டாக்கியது. அதன்பின், ஜெயலலிதா ஒருவரை வளர்ப்பு மகன் என்று அறிவிக்கிறார். அவர், சசிகலாவின் அண்ணன் மகன் என்று அறியும்போதுதான் இதன் பின்னணியில் சசிகலா நடராஜன் இருப்பதை உணரமுடியும்.

சுமார் 100 கோடி செலவில் நடைபெற்ற அந்தப் பிரமாண்ட திருமணம், மக்கள் மத்தியில் கடும் வெறுப்பை உருவாக்கியது. அதன் விளைவாகவே அடுத்த தேர்தலில் பெரும் தோல்வியை ஜெயலலிதாவுக்கு அளித்தனர். சுதாகரனைத் தத்தெடுத்தது, பிரமாண்ட திருமணம் எல்லாம் ஜெயலலிதா மனதார விரும்பிச் செய்திருப்பாரா எனும் கேள்வி பலரின் மனதில் இருந்தது. பின்னர் சுதாகரனை வளர்ப்பு மகன் இல்லை என்று அறிவித்ததையும் கைது செய்ததையும் பார்க்கும்போது அந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதை உணர முடிந்தது.

சாதாரண புடவையும் எளிமையான அலங்காரத்துடனும் மக்கள் மத்தியில் வலம்வந்த ஜெயலலிதா, ஜொலிக்கும் நகைகள், ஆடம்பர அலங்காரத்துடன் சசிகலாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியது. அன்று தொடங்கி மக்கள் மட்டுமல்ல, கட்சியினரும் எளிதில் அணுக முடியாத நிலைக்குச் சென்றார் ஜெயலலிதா. இதன் பின்னணியில் சசிகலா குழு இருந்ததை வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர்.



1996-ம் ஆண்டு நடந்த தேர்தலின் தோல்விக்கு சசிகலா உள்ளிட்டவர்களின் நட்பே காரணம் என்று அறிந்துகொண்ட ஜெயலலிதா, செய்த செயல் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. சசிகலாவை போயஸ் தோட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றினார். ஆனால், ஓரிரு மாதங்களில் வீட்டு வாசலில் நின்று சசிகலாவை வரவேற்றபோது, ஜெயலலிதாவின் உறுதி உடைந்ததையும் சசிகலா தன்னுடன் இருப்பது அவ்வளவு அவசியம் என்றும் உணர்த்தினார்.

அ.தி.மு.கவின் கட்சி நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட எனப் பல விஷயங்களிலும் சசிகலா குழுவினரின் கை மேலோங்கியே இருந்தது. இதை நன்கு தெரிந்துகொண்ட கட்சியினர், சசிகலாவின் குழுவினரை நெருங்கி காரியங்களைச் சாதித்துக்கொண்டனர். நிலைமை தன் கையை மீறிச் செல்லும்போதெல்லாம் சசிகலா குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பார் ஜெயலலிதா. ஆனால், அதன் காலம் ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு மாதங்களே நீடிக்கும். இந்தத் தன்மையால் சசிகலா மீது நடிவடிக்கைகளை அ.தி.மு.கவினர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

வளர்ப்பு மகன் திருமண காலக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குதான் ஜெயலலிதாவின் மனதை உருக்குலையச் செய்தது. அந்த வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்றதை எதிர்க் கட்சிகள் கேலி செய்தனர். 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா தரப்புக்கு அதிர்ச்சி தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டது. உடனே சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கிடைத்து வெளியே வந்தாலும், ஜெயலலிதாவை உலுக்கிப்போட்ட நாட்கள் அவை. அந்த வழக்குக்கு வழங்கப்பட்ட பலவித தீர்ப்புகளே அவரின் மனநிலையையும் உடல்நிலையையும் வெகுவாக பாதித்தன.

ஜெயலலிதா உள்ளிட்டோரை வழக்கில் இருந்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு விடுதலைச் செய்தது. ஆனால், அதன் மேல் முறையீட்டுத் தீர்ப்பு என்னவாகும் எனும் கவலையே ஜெயலலிதாவின் எண்ணத்தில் நிறைந்திருந்தது. அந்த எண்ணங்களே உடல்நிலையைக் குலைத்தது. இந்நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார்.

இந்திய அரசியலில் ஒரு பெண்ணாக எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்த ஜெயலலிதாவின் வாழ்வை, ஒரு பலவீனம் வீழ்த்தியது. தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நட்புகளை விலக்கிவைக்கத் தெரியாததே அந்தப் பலவீனம்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...