Monday, February 27, 2017

இனிது இனிது... பிளஸ் 2 தேர்வு எழுதுவது இனிது!

டி.எல்.சஞ்சீவிகுமார்



பிளஸ் 2 பொதுத் தேர்வு என்றதும் பலருக்கும் இனம் புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். அது காய்ச்சல் அல்ல, கற்பிதம். தேர்வு பயத்தை விரட்டி அடிப்பது எப்படி என்பதை முதலில் கண்டறியுங்கள். தேர்வு சமயத் தில் உங்களை எந்தெந்த விஷயங்கள் பயமுறுத்துகின்றன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். அந்த விஷயங்களை மனதில் இருந்து விலக்கி வையுங்கள்.
நாளை தேர்வு எனில் முதல் நாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்ததையே படிப்பதை நிறுத்துங்கள். தூக்கம் கெட்டால் புத்தி கெடும். மூளையின் நியூரான் சோர்வடைந்து அங்குமிங்கும் நினைவலைகள் அலை பாயும். நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் படித்தாலும் படிப்பதை ரசித்துப் படி யுங்கள். புரிந்துக்கொண்டுப் படியுங் கள். ஆராய்ந்துப் படியுங்கள். இப்படி படித்தீர்களேயானால் வேதியியல், கணிதம் முதலான பாடங்கள் சுவாரஸ்ய மான சதுரங்க விளையாட்டைப்போல உங்களை உள்ளே இழுத்துக்கொண்டு போய்விடும்.

தேர்வு அறைக்குச் செல்லும் முன்பு நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டாம். நமக்கு தெரியாத கேள்வி, பதில் குறித்து நண்பர்கள் கூறினால் பதற்றம் தொற்றிக் கொள்ளும். தெரிந்த பதிலைக்கூட பயம் மறக்கடித்துவிடும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை தனிமையாக இருங்கள். புத்துணர்வுடன் இருங்கள். மனதைத் தெளிவாக வையுங்கள். தேவையற்ற பேச்சுக்களையும், சுய சந்தேகங்களையும் தவிருங்கள். இதனால், நினைவு சக்தி அதிகரிக்கும். கண்ணை மூடி 4 முறை மூச்சை ஆழ்ந்து இழுத்து, மெதுவாக மூச்சை விடுவதன் மூலம் புத்துணர்வு பெறலாம்.

தேர்வு அறையில் கேள்விகளை படிக்க அளிக்கப்படும் 5 நிமிடத்தைப் பதற்றம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெளிந்த மனதுடன் புரிதலுடன் கேள்வித்தாளைப் படியுங் கள். தேர்வுக்கு செல்லும்போது பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேலைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும். பெற்றோர் இதற்கு உதவ வேண்டும். பெரும்பாலும் மாதிரித் தேர்வில் பயன்படுத்திய பேனாவையே பொதுத் தேர்விலும் பயன் படுத்துங்கள். பழைய பேனா தவ றில்லை. புதுப் பேனா மக்கர் செய்தால், தேவையில்லாத குழப்பம் தானே. தெரியாத கேள்விக்கான விடையை எழுத வேண்டாம்.
குளிர் காலத்தில் இருந்து கோடைக் காலம் ஆரம்பிக்க உள்ளதால், உடல் நிலையைப் பராமரிப்பது அவசியம். படிப்பே கதி என்று வீட்டில் முடங்கியிருக் காமல், தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி செல்லுங்கள். தேர்வு அறையில் தலைவலி, ஜலதோஷம் உள்ளிட்ட உடல் உபாதைகளைத் தவிர்க்க உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அடிக்கடி காஃபி, சாக்லெட், குளிர்பானங்கள் அருந்த வேண்டாம். காஃபியிலுள்ள கோக்கைன் ரசாயனம் மந்தநிலையை ஏற்படுத்தக் கூடியது.

நேரம் திட்டமிடல் அவசியம்!

இன்ன பாடத்துக்கு இத்தனை நாட்கள் என்று ஓர் அட்டவணையை தயார் செய்து உங்கள் மேஜையில் ஒட்டிக் கொள்ளுங்கள். பொதுவாக ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச், ஹிந்தி ஆகிய மொழிப் பாடங்களுக்கு தலா 2 நாட்கள் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 4 நாட்கள் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள நாட்களை எந்த பாடத்துக்கு ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டமிடுதலில் முக்கியமான விஷயம்.

கடைசித் தேர்வும் முக்கியம்
உதாரணத்துக்கு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியலுக்கு கூடுதலாக ஒரு நாளை எடுத்து படிக்கலாம். ஏனெனில், மருத்துவப் படிப்புக்கு கடும்போட்டி நிலவி வருகிறது. அதேபோல, பிற பிரிவு மாணவர்களும், அவர்கள் படிக்கக் கூடிய மேற்படிப்புக்கு ஏற்ற பாடத்துக்கு ஒருநாள் கூடுதலாக ஒதுக்கிக்கொண்டு படிக்க வேண்டும். இதுதவிர மீதம் உள்ள நாட்களில், எந்தெந்த தேர்வுக்கு இடையே விடுமுறை இல்லாமல் தேர்வு வருகிறது என்பதைப் பார்த்து, அந்த தேர்வுக்கான பாடத்தைப் படிக்க கூடுதல் நாட்களை ஒதுக்கலாம்.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வில், கடைசித் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. முந்தைய தேர்வுகள் எழுதிய களைப்பில், நாளை முதல் பள்ளி நாட்கள் நிறைவடைகிற உற்சாகத்தில் கொண்டாட்டம் மற்றும் அலட்சியம் கலந்த மனோபாவத்தில் இறுதித் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

இறுதித் தேர்வு என்பது இறுதிப் போட்டி போன்றது. கடைசி நேர கட் ஆஃபை நிர்ணயிப்பதில் இறுதித் தேர் வுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். எனவே, இறுதித் தேர் வில் அலட்சிய போக்கைக் கைவிட்டு, அந்தத் தேர்வுக்கு கூடுதல் முக்கியத் துவம் கொடுத்து, ஆர்வமுடன் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

தேர்வுக்கு தயாராகி வரும் நீங்கள் இரவு வழக்கமாக எத்தனை மணிக்கு படித்துவிட்டு படுக்கைக்கு உறங்கப் போவீர்கள் என்கிற நேரத்தை வரை யறுத்துக்கொள்ள வேண்டும். வழக்க மாக நீங்கள் இரவு உறங்கச் செல்லும் நேரம் 10 மணி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், தேர்வுக்காக ஒரு மணி நேரம் கூடுதலாக செல விடுகிறீர்கள். அதாவது, இரவு 11 மணி வரை படித்துவிட்டு உறங்கச் செல்கி றீர்கள். அப்படி எனில் இரவு 10 மணியுடன் படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஃபார்முலா, வரை படம், ஜாமின்டரி என எழுத்து சார்ந்த பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், வழக்கமாக இரவு 10 மணிக்கு தூங்குவதற்கு பழக்கப்பட்ட நிலையில், அந்த நேரத்துக்கு கண்கள் சொருக ஆரம்பித்துவிடும். இதனைத் தவிர்க்கவே, எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகிறது.

தேர்வு அறைக்கு கண்டிப்பாக கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு போக வேண்டாம். அடிக்கடி மணி பார்த்து தேவையில்லாத பதற்றம் அடைவார்கள். தேர்வுத் தாளில் அலங்காரம், ஜோடனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். கேள்விக்கான பதிலை முதலில் எழுதுங்கள். முதல் பிரிவில் உள்ள அனைத்து கேள்வி-பதிலும் எழுதி முடித்த பின், நேரம் இருந்தால் மட்டுமே நீங்கள் எழுதிய பதிலுக்கு தேவையான இடங்களில் அடிக்கோடு இடுவதும், வண்ணம் தீட்டுவதையும் வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு வரியில் இடைவெளி
ஒரு கேள்விக்கான பதிலை எழுதி முடித்தப் பின்பு, இரண்டு வரிகள் எழுதுவதற்கு தேவையான இடங்களை விட்டு, அடிகோடு போடுங்கள். ஏனெனில், கடைசி தருணத்தில் முதலில் எழுதிய பதில்களுக்கான முக்கிய குறிப்புகள் மனதில் தோன்றும். அப்போது, ஏற் கெனவே விட்டு வைத்துள்ள இடத்தில், பதிலுக்கான முக்கியக் குறிப்புகளை எழுத வசதியாக இருக்கும்.
கணிதம், அறிவியல் பாடங்களில் வரைபடங்கள் மிகவும் நேர்த்தியாகவும், கோடு பிசகாமலும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வரை படத்துக்கான தோற்றம், வரைபடம், குறிப்புகள் சரியானதாக இருந்தாலே முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்கிறது விதிமுறைகள். அதற்காக கிறுக்கி வைக்க வேண்டும் என்பதில்லை.

கட்டம் கோணையாக இருக்கிறதே என்று மதிப்பெண்கள் குறைக்க போவதில்லை. ஸ்கேலை வைத்துக் கொண்டு நேராக கோடு போடுகிறேன் என நேரத்தை வீணடிக்க வேண்டாம். கையாலே கோடு போட்டு, சரியான விடை எழுதுங்கள்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும், அடுத்த தேர்வுக்கான பாடத்தை படிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும். நடந்து முடிந்த தேர்வைப் பேசி பயனில்லை. நண்பர்களுடன் விவாதம் செய்து நேரத்தை வீணாக் காதீர். தேர்வு ஆரம்பித்து முடியும் வரை ஒவ்வொரு நொடியையும் உங்கள் பாடத்துக்கானதாகவும், தேர்வுக் கானதுமாக பயன்படுத்திக் கொள்ளுங் கள். உங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும்!

பெற்றோர் செய்ய வேண்டியவை
பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும்போது பெற்றோர் வீட்டு பிரச்சினைகளை பேச வேண்டாம். குடும்ப சச்சரவுகளை தவிர்க்கவும். தொலைக்காட்சி சீரியல்களையும் தவிர்க்கவும். அதேபோல் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் வகையில் பேச வேண்டாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024