Tuesday, February 28, 2017

மலைக்க வைத்த நகைகள்.. அசரவைத்த சொகுசுப் பேருந்து! அந்த நாள் ஞாபகம்!


2000 பிப்ரவரி முதல் வாரத்தில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திலிருந்து ஐந்து பெரிய சூட்கேஸ்கள், அப்போது சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த முதலாவது சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா, சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குச் சொந்தமான தங்க நகைகள், வைர நகைகள் அந்த ஐந்து சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்தன.

போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதா வீட்டிலும், சுதாகரனின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட அந்த நகைகளை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருமாறு நீதிபதி எஸ்.சம்பந்தம் ஆணையிட்டிருந்தார். நகைகளை மதிப்பிட்டு, வழக்கின் சாட்சியங்களாக அவற்றை வைத்திருக்கலாம் என்று அவை கொண்டுவரப்பட்டிருந்தன. ஒவ்வொரு சூட்கேஸிலிருந்தும் எடுக்கப்பட்ட ஆபரணங்களின் அழகைப் பார்த்து, நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் என்று அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சுதாகரன் திருமணத்தின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே மாதிரியான சேலைகளில், ஒரே மாதிரியான நகைகள் அணிந்திருக்கும் புகைப்படம் மிகப் பிரபலமானது. அப்போது அவர்கள் அணிந்திருந்த ஒட்டியாணங்களில் ஒன்று நீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டபோது அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

இன்னொரு ஒட்டியாணம் சோதனைகளில் கிடைக்கவே இல்லை என்று வழக்கு விசாரணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒட்டியாணத்தின் எடை 1,044 கிராம். 2,389 வைரக் கற்கள், 18 மரகதக் கற்கள், 9 மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணம் அது. 487.4 கிராம் எடை கொண்ட காசுமாலையும் எல்லோர் கண்களையும் விரிய வைத்தது. ஜெயலலிதா வாங்கியிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு.

கேரவன் வேன்களெல்லாம் வராத காலத்திலேயே பல்வேறு சிறப்பு வசதிகள் அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்தன. ஷவருடன் கூடிய ஒரு குளியலறை, தொலைபேசி, மேஜை, நாற்காலிகள் கொண்ட ஒரு ‘மினி கான்ஃபரன்ஸ் ஹால்’, தொலைக்காட்சி என்று புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்த சிறப்பு வசதிகள் அனைவரையும் வாய் பிளக்கச் செய்தன. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அந்தப் பேருந்தை வடிவமைத்ததுடன், ஜெயலலிதாவுக்கு அதை விநியோகமும் செய்திருந்தது. சீக்கியரான அதன் தலைவர், ஜெயலலிதாவுக்கான அந்தப் பேருந்தை போயஸ் கார்டனுக்கு தானே தனிப்பட்ட முறையில் சேர்ப்பித்ததாகவும் சொன்னார்.

“அந்தப் பேருந்தை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தீர்களா?” என்று வழக்கறிஞர் கேட்டபோது, “இல்லை. வேறொரு மேடம்தான் (சசிகலா!) அங்கு இருந்தார்” என்றார். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன், பையனூரில் உள்ள தனது நிலத்தை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி விற்க வைத்தது பற்றி விவரித்தபோது உடைந்து அழுதார்!

நகைகளுக்குக் காவலாக வந்திருந்த போலீஸார், நீதிமன்றத்திலேயே முழுதாக மூன்று நாட்களுக்குத் தங்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், மூன்று நாட்கள் மதிப்பிடும் அளவுக்கு நகைகளைக் குவித்திருந்தார் ஜெயலலிதா. அந்த ஐந்து சூட்கேஸ்களும் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளன.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024