Saturday, February 25, 2017

கண்ணின் மணி போல மணியின் நிழல் போல மரணத்திலும் கணவரை தொடர்ந்தார் மனைவி

திருப்பூர்:திருப்பூரில், கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


திருப்பூரை சேர்ந்தவர் ரத்னசபாபதி, 83; ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், வீட்டில் கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிந்தது. மருத்துவமனையில், சில நாட்கள் சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினார்.நேற்று முன்தினம் காலை, 6:50 மணிக்கு, ரத்னசபாபதி திடீரென இறந்தார். அதிர்ச்சி யில், மனைவி ருக்மணி, 79 மயக்கமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்த ருக்மணியின் தாலியை, உறவினர்கள் அகற்ற முயன்றனர். அப்போது, ருக்மணி இறந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, தம்பதிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர்களது மகன் ராமச்சந்திரமூர்த்தி, கண்ணீர் மல்க கூறியதாவது:

இருவரும் எப்போதுமே பிரிந்ததில்லை. வீட்டிலும், கடையிலும் ஒன்றாகவே இருந்தனர். அப்பாவுக்கு முன், சுமங்கலியாக இறந்துவிட வேண்டும் என, அடிக்கடி அம்மா கூறி வந்தார்.
அவரது விருப்பம் போலவே, சாவிலும் இணைந்து விட்டார். இருவருக்கும் சேர்த்தே இறுதிச் சடங்கு செய்து, மின் மயானத்தில் ஒரே, 'டிரே'யில் வைத்து, தகனம் செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024