Monday, February 27, 2017

குறை நம்மிடம்தான்

By எம். அருண்குமார்  |   Published on : 27th February 2017 02:18 AM  |   
ஒரு காலத்தில் நாளிதழ்களை வாங்கிப் படித்து உலக விஷயங்கள் அறிந்தோம். தற்போது செல்லிடப்பேசி மூலம் கூகுள், கட்செவி அஞ்சல், முகநூல், இ-பேப்பர் என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.
அந்த அறிவியல் வளர்ச்சி காரணமாக நமக்கு பல்வேறு பயன்கள் இருந்தாலும், ஒருசில தீமைகளும் இருக்கத் தான் செய்கின்றது.
தகவல் பறிமாற்றம் நொடியில் நடக்கின்றது. உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும், அடுத்த நொடியே நமக்கு உடனடியாக சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தகவல் பறிமாற்றம் அதிவேகமாக நடைபெறுகிறது. இது நமக்கு வரமாகும்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகத்தில் நடந்த இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு அனைவரையும் ஒருங்கிணைத்தது முகநூல், கட்செவி அஞ்சல்தான்.
ஆனால் அதே முகநூல், கட்செவி அஞ்சலில்தான் அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே சமூக வலைதளங்களில் இதை சாப்பிடாதீர்கள், அதை அருந்தாதீர்கள், இதில் அதை கலக்குகிறார்கள் என்று தகவல் பரப்பி நம்மை குழப்பமடையச் செய்கிறார்கள். உண்மையாகவே எதை வாங்கி பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் குழம்பிப்போய்தான் இருக்கின்றோம்.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டால் நல்லது என அரசும், சில மருத்துவர்களும் கூறுகின்றனர். அதை போட்டுக் கொண்டால் பின் விளைவுகள் ஏற்படும் என சிலர் அதற்கு எதிராக தகவல் பரப்பி வருகின்றனர்.
அரிசி சோறு சாப்பிட்டால் சக்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அதிகரித்துவிடும் என்று கூறி சப்பாத்தி சாப்பிட சொல்கிறார்கள். பிறகு அரிசியும், கோதுமையும் ஒன்று தான். அதனால் அதைவிடுத்து பழம், காய்கறி நிறைய சாப்பிட வேண்டுமென்று கூறுகின்றனர்.
அதை ஆலோசனையாக எடுத்துக் கொண்டு காய்கறி சாப்பிட ஆரம்பித்தால் பூச்சி மருந்து தெளிக்கிறார்கள், இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காய் சாப்பிடுங்கள் என்று அறிவிக்கிறார்கள். அதை வாங்க ஆர்வமுடன் சென்று விலையை கேட்டால் வாங்க முடியாத அளவுக்கு விலை உச்சத்தில் உள்ளது.
இருந்தாலும் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று கருதி அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டோம். ஆனால் ஆர்கானிக் எல்லாம் என்பது ஏமாற்று வேலை என்று கூறப்படுகிறது.
விளை நிலத்தை ரசாயன உரத்திலிருந்து இயற்கை உரத்திற்கு ஏற்ற நிலமாக மாற்ற வேண்டுமானால் சுமார் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்கான செலவும் அதிகம்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஆர்கானிக் உரம் (இயற்கை உரம்) என்று கூறி இயற்கை உரத்தில் விளைந்த காய்கறி என்று ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.
காய்கறியில் தான் பிரச்னை, பச்சை தண்ணீரை குடிக்கலாம் என்று பார்த்தால், அது ஆபத்து ஆர்.ஓ. டெக்னாலஜி மூலம் சுத்தப்படுத்திய தண்ணீரை குடிங்கன்னு விளம்பரம் மூலம் நடிகை கூறுகிறார். அதை வாங்கி பயன்படுத்தி சுத்தப்படுத்திய தண்ணீரை குடித்தால் அதில் சத்து இல்லை, எலும்பு உடைந்து போகும்னு வேறு ஒரு குழுவினர் அச்சமடையச் செய்கிறார்கள்.
கடலை எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கின்றது. அதனால் பயன்படுத்தக் கூடாது. சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துங்கள், ரைஸ்பிராண் ஆயில் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பெட்ரோல் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் எண்ணெயை அதில் கலந்து விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியர்களுக்கு ஏற்ற உணவு அதுவல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.
மனம் நொந்து போய் சோர்வாக அமர்ந்திருக்கும் சமயத்தில் வேறு சிலர், மாடியில் தோட்டம் போட்டால், நமக்கு தேவையான காய்களை நாமே வளர்த்து சாப்பிடலாம். நாட்டு கோழி வளர்த்தா முட்டையும், சிக்கனும் கிடைக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து செப்பு பாத்திரத்தில் ஊற்றிவைத்து அருந்துங்கள், ஒரு நோயும் வராது என்று கூறுகின்றனர்.
இந்த வாழ்க்கை முறையை பின்பற்றித்தானே கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாமும், நமது முன்னோர்களும் வாழ்ந்து வந்தோம். அறிவியல் வளர்ச்சியால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு பிறகு மீண்டும் பழைய முறையையே பின்பற்றுவதுதான் சிறந்தது என்று கூறி அறிவுறுத்துவதை கேட்கும் போது நமது நிலையை நாமே நொந்துக் கொள்வதாக இருக்கின்றது.
எந்த அளவுக்கு நாட்டு நடப்பின் உண்மைகளை அறிய அறிவியல் வளர்ச்சி உதவுகிறதோ, அதே நேரத்தில் தீமைகளையும் சேர்த்தே வளர்க்கவும் அறிவியலை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இது அறிவியல் வளர்ச்சியின் குறைபாடு இல்லை. அதை பயன்படுத்தும் மனித சமுதாயத்தின் குறைபாடே ஆகும்.
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வி எழும்போது தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
ஆனால் அறிவியல் வளர்ச்சி காரணமாக சமூக வலைதளத்தில் ஒருவரால் பதிவிடப்படும் கருத்தை முழுமையாக படித்து பார்க்கக்கூட நமக்கு நேரமில்லை. அதை முழுமையாக படித்து பார்த்துவிட்டு, அது சம்பந்தமாக நம்முடைய மனதில் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை நம் மனதுக்குள் எழுப்பி அந்த கருத்து சரியானது தானா என தீர ஆராய்ந்து முடிவெடுக்காமலேயே தவறான கருத்தையும், தவறான தகவலையும் நாம் அப்படியே மற்றவருக்கு அனுப்பி விடுகிறோம். இது தான் நாம் செய்யும் தவறாகும்.
அந்தத் தவறையே மற்றவர்களும் செய்கிறார்கள். அதனால் தான் அறிவியல் அழிவிற்கும் வழிவகுத்து விடுகிறது.
முன்பு மாதிரி பேப்பர் மட்டும் படித்துவிட்டு, இந்த முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றை மூட்டை கட்டி மூடிவைத்து விட்டு பழைய கருப்பு, வெள்ளை வண்ண செல்லிடப்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.
Ads by ZINC

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...