Saturday, February 25, 2017


'எனக்காக சின்னம்மா காலில் விழுந்தார் பன்னீர்செல்வம்... ஏன் தெரியுமா?' - கொதிக்கும் தம்பிதுரை

vikatan.com




சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என மூன்று தலைமைகளோடு மூன்றாக பிரிந்து நிற்கிறது அ.தி.மு.க. ஒவ்வொரு தரப்பும் இன்னொரு தரப்பை கடுமையாக விமர்சித்து வருகிறது. சசிகலா தரப்பில் இருந்து இப்படியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளையொட்டி, கரூரில் அ.தி.மு.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரையின் பேச்சில் சூடு அதிகமாகவே இருந்தது. கூட்டத்தில் தம்பிதுரை பேசியதாவது.

"நீங்கள் 2016ல் எதற்கு அம்மாவுக்கு ஓட்டு போட்டீங்க. கருணாநிதி என்கிற தீய சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தானே. அதற்காகதான் அம்மாவும் பாடுபட்டாங்க. ஆனா, தீய சக்திகள் இன்னைக்கு என்ன சொல்றாங்க? ரெண்டே ரெண்டு பிரச்னைகளைதான் சொல்றாங்க. ஒண்ணு அம்மாவின் மரணத்துல மர்மம் இருக்குனு சொல்றாங்க. மற்றொன்று, இந்த ஆட்சியை எப்படியும் கவிழ்த்துவிட வேண்டும்னு துடிக்கிறாங்க.



இதை எல்லாத்தையும்விட, 'அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கு. விசாரணை செய்யணும்'னு பன்னீர்செல்வம் பேசுகிறார். அம்மாவால் முதல்வரான ஓ.பி.எஸ்., இப்போ அம்மாவோட கனவை அழிக்கற வேலையை செய்கிறார்.

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் செப்டம்பர் 22ம் தேதி அப்போலோவில் சேர்த்ததில் இருந்து, அவர் சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அங்கேயே காவல்காரனாக இருந்தவன் நான். அமைச்சர்கள் வருவார்கள்,போவார்கள். ஆனால்,75 நாட்களும் மருத்துவமனை வாசலில் காவல் காத்து, லண்டன் டாக்டர், டெல்லி டாக்டர்கள் என்று வரவழைத்து அம்மா நலமாக முயற்சிகளை எடுத்தேன்.

23ம் தேதி வரை உயிரோடு இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. டாக்டர்களின் சிறப்பான சிகிச்சையால் அம்மாவின் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றியது. அப்போ எல்லாம், பன்னீர்செல்வம்தான் என்னோடு வருவார். என்னிடம் அம்மாவின் நிலைமை பற்றி கேட்டு விட்டு போவார். அம்மாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட அவர், 75 நாட்களும் அப்போலோவில் இருந்தாரே, அப்போது அம்மாவின் உடல்நிலை பற்றி கேள்வி கேட்டாரா?. அப்போதே என்ன மர்மம் என பார்த்திருக்க வேண்டியது தானே.



அம்மாவைப் பற்றி அப்போது எந்த கவலையும் படாதவர் அவர். உலகிலேயே ஒரு முதலமைச்சர் இறந்த உடனே முதல்வராக பொறுப்பேற்றவர் பன்னீர்செல்வம் தான். அண்ணா இறந்தபோது,நெடுஞ்செழியன் காபந்து முதலமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜானகி பொறுப்பு முதல்வராகத்தான் இருந்தார். அதன் பின்னர் தான் கருணாநிதியும், ஜானகியும் முதல்வர் ஆனார்கள். அப்பன் செத்தபோது பொட்டிச்சாவியை தூக்கிட்டு போனதுபோல முதலமைச்சரான பன்னீர்செல்வம், இப்போது அம்மாவின் சாவில் மர்மம் இருக்குங்குறார். எல்லாம் பதவி வெறி.

அம்மா இறந்த சமயத்தில், சின்னம்மா அவர்கள் ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருக்கிறார். அப்போது,சில சேனல்கள், நான் பி.ஜே.பி. துணையோடு பொதுச்செயலாளர் ஆக முயல்வதாக பொய் செய்தி வெளியிட்டன. உடனே 'தம்பிதுரை பி.ஜே.பி. துணையோடு கட்சியின் பொதுச் செயலாளர் ஆக பார்க்கிறார். அப்படி விடக்கூடாது. நீங்கள்தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும்' என்று இல்லாத குற்றச்சாட்டைச் சொல்லி சின்னம்மா காலில் விழுந்து கெஞ்சியவர் தான் பன்னீர்செல்வம்.

பின்னர் நான் சின்னம்மாவிடம், 'ஓ.பி.எஸ் சொன்னது பொய். நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும்' என்று சொன்னேன். அப்படி சின்னம்மா பொதுச்செயலாளர் ஆனபோது முதலில் கையெழுத்திட்டது இதே பன்னீர்செல்வமும், மதுசூதனனும்தான். அதேபோல், கேபினட் அமைச்சர்கள் சின்னம்மாவை பார்க்க போனாங்க. அன்னைக்கும் நெடுஞ்சாண்கிடையாக சின்னம்மா காலில் விழுந்தவர் பன்னீர்செல்வம்தான். உடனே நான் சின்னம்மாவிடம்,'இந்த ஆள் கால்ல விழுறத பார்த்தா,ஏதோ சதி பண்ண போறார்'ன்னு சொன்னேன். அதேபோல் நடந்தது.



2001ல் அம்மா முதலமைச்சராக முடியாத சூழல் வந்தப்ப, முதல்முறையாக பெரியகுளத்தில் எம்.எல்.ஏ ஆன பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார் அம்மா. அதுக்கு காரணம் சின்னம்மா குடும்பம். அப்போது,சின்னம்மா நினைத்திருந்தால், தங்கள் குடும்பத்தில் ஒரு நபரை சி.எம் ஆக வைத்திருக்க முடியும். ஆனால்,அப்படி செய்யலை. ஆனால்,இப்போது சின்னம்மா குடும்பத்தை காட்டிக் கொடுக்க பன்னீர் துடிக்கிறார் என்றால்,என்ன அர்த்தம்?.

சின்னம்மா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முதலில் கையெழுத்திட்டவரும் பன்னீர்செல்வம்தான். சின்னம்மாவிடம்,'நீங்கதான் முதலமைச்சராகணும். எனக்கு பழையபடி நிதி அமைச்சர் பதவி கொடுங்க'ன்னு சொன்னார். ராஜினாமா கடிதத்தை யாரும் கேட்காம அவரே எழுதி கொடுத்தார். ஆனா, இப்போ வற்புறுத்தி எழுதி வாங்கியதா தியானம் பண்ணி நடிச்சு பொய் சொல்கிறார்.

அடுத்து, ஸ்டாலின் கிளம்பி இருக்கார். அவரும், 'அம்மா சாவில் மர்மம் இருக்கு'ன்னு சொல்றார். அண்ணா சாவிலும், ராஜீவ்காந்தி கொலையிலும் தி.மு.க தலைவர் கலைஞருக்கு இருக்கும் தொடர்பு சம்மந்தமான மர்மத்தை ஸ்டாலின் விளக்கிவிட்டு,அம்மாவின் சாவின் மர்மம் பத்தி கேட்கட்டும். அம்மா மரணத்துல என்ன மர்மம் கண்டார் ஸ்டாலின்?.அம்மாவை மருத்துவமனையில் பார்க்க வரும்போது நான்தான் அவரை வரவேற்று அமர வைத்தேன். அப்போது கேட்டிருக்க வேண்டியதுதானே, அந்த மர்மத்தை. அவர் மட்டுமல்ல,எல்லா கட்சிகாரர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அம்மாவோட உடல்நிலை மோசமா இருப்பதை உணர்ந்தாங்க.

இப்போ ஸ்டாலின் மர்மத்தை பத்தி பேச காரணம், இந்த ஆட்சியை கவிழ்த்து, தேர்தல் வர வைத்து அவர் போட்டி போடத்தான். எங்கம்மா மரண மர்மத்தை பத்தி பேசும் நீங்கள், உங்க அப்பா இப்போது உள்ள நிலை பற்றிய சொல்ல முடியுமா?. அவர் அனுமதி பெறாமலேயே நீங்கள் தி.மு.க செயல் தலைவராகிட்டு, கலைஞர் பக்கத்தில் நின்று ஆசிர்வாதம் பெற்றது போல ஒரு நாடகம் ஆடுனீர்களே. அந்த மர்மத்தை சொல்லுங்கள்.

ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழுவதை போல,ஓ.பி.எஸ் பத்தி ஸ்டாலினும்,துரைமுருகனும் கரிசனப்படுகிறார்கள். அ.தி.மு.கவை உடைத்து, இந்த ஆட்சியை கவிழ்த்து,தேர்தலை கொண்டு வரத்தான். இதை எல்லாம் செய்கிறார்கள். ஆனால்,அது நடக்கவில்லை. சட்டமன்றத்தில் சின்னம்மாவுக்கு எம்.எல்.ஏக்கள் செல்வாக்கு இருப்பதை உணர்ந்து தான், 'ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று இல்லாத நடைமுறையை சொல்லி, தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு ஒரு நாடகம் நடத்தினார். ஸ்டாலின் அரசியலை விட்டுட்டு,சினிமாவில் நடிக்க போகலாம்.

யார் என்ன சதி செய்தாலும், சின்னம்மா பின்னே கட்சி இருக்கிறது என்பதை எம்.எல்.ஏக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால்,வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும்,2021 சட்டமன்ற தேர்தலிலும் சின்னம்மா தலைமையிலான அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். எந்த சதியும் செல்லுப்படியாகாது. அம்மா நினைத்த ஆட்சியை தொடர்ந்து அமைப்போம்" என்று பேசி முடித்தார்.
'
- துரை.வேம்பையன்,

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...