Saturday, February 25, 2017


அத்தனை சொத்தும் அம்மா சினிமாவில் நடிச்சு சம்பாதிச்சது!' - சி ஆர் சரஸ்வதி


தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏகப்பட்ட குழப்பம். உட்கட்சி மோதல்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. நாளொரு அறிக்கை, நாளொரு பேச்சு என 'இவங்க என்ன சொல்ல வர்றாங்க' என்று மக்கள் குழம்பும் அளவுக்கு பாரபட்சம் இல்லாமல் ஒவ்வொருவரும் குழப்பி எடுக்கிறார்கள். ஒரு புறம் ஓ.பன்னீர்செல்வம், மறுபுறம் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் தீபா, மற்றொரு புறம் தீபக்..... இவர்களையெல்லாம் கண்காணித்தே டயர்ட் ஆகும் அதிமுக கட்சி தலைவர்கள் என்று அரசியல் காமெடியை ஒவ்வொரு நாளும் நாம் ரசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

அதிமுகவில் அதிகம் வாய்ஸ் கொடுப்பவர் சி.ஆர்.சரஸ்வதி . இதையெல்லாம் எப்படி பார்க்கிறார் என்று அவரது சைலென்ஸை உடைத்தோம்.
''பொதுவாக ஒருத்தருக்கு சோதனைக் காலக்கட்டம் என்பது வாழ்வில் நிகழும். அது போல் அ.தி.மு.க சந்தித்துக் கொண்டிருப்பது. அத்தகைய காலகட்டத்தையே எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அம்மா கட்சியில் இருந்தே ஓரம்கட்டப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தை வென்று வந்தவர் அம்மா. அதன்பிறகே அவருடைய கட்சி விசுவாசத்தை உணர்ந்து அவர் பக்கம் வந்தார்கள் முக்கியத் தலைவர்கள். அவர்களை எல்லாம் ஏற்றுக் கொண்ட தாயுள்ளம் கொண்டவர் அம்மா. நாங்கள் அம்மாவின் உண்மையான விசுவாசிகள். கட்சி உடைந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையோடும், ஈடுபாட்டோடும் செயல்பட்டு வருகிறோம்.



அம்மா கடைசியாக சட்டமன்றத்தில் எனக்கு பின்னும் இந்தக் கட்சி 100 ஆண்டு காலம் நீடிக்கும் என சொல்லியிருக்கிறார். அவர் மனதில் எதை வைத்து சொன்னார் எனத் தெரியவில்லை. அது தீர்க்கதரிசனமான வார்த்தை. கடைசியாக அவர் பேசியதை, நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதைக் காப்பாற்ற அம்மா எங்களுக்குள் ஒரு சக்தியாக உறுதுணையாக இருந்து உதவுவார். கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள், சவால்கள், பிரச்னைகள் எல்லாம் தற்காலிகமானவை. அவையெல்லாம் விரைவில் சரியாகி விடும்.





ஒரு அவசரத்தில் முடிவெடுத்து கட்சியில் இருந்து சென்றவர்கள் விரைவில் கட்சியில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஓ.பி.எஸ்.க்கு ஒரு கருத்து, தீபாவுக்கு ஒரு கருத்து, தீபக்குக்கு ஒரு கருத்து என இருப்பதெல்லாம் ஜனநாயக நாட்டில் இயல்பானவை. அ.தி.மு.க.வின் வரலாற்றை சற்று முன்னோக்கிப் பார்த்தால் பல சோதனைகளை சாதனைகளாக்கி கடந்து வந்த மாபெரும் கட்சி. குழப்பங்கள் எல்லாம் சரியாக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஓபிஎஸ் அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசி. அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறும் போது எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி, ஆத்திரம் இருந்தது. அதனால் அவர் மீது எங்களுக்கு அன்றைய நிலையில் கோபம் இருந்தது. எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை அரசியல் எதிரி தி.மு.க. தான். இந்த இரண்டு கட்சிகளும் என்றுமே இணையாது. இது அனைவரும் அறிந்த விஷயம். அண்ணன் டி.டி.வி.தினகரன் பதவியேற்கும் போது 'எங்கள் கட்சி, கழகம் குடும்பம் போன்றது. குடும்பத்தில் சண்டையிட்டு செல்பவர்கள் மீண்டும் சேர்வது இயற்கை' எனக்கூறியுள்ளார். அதே நிலைப்பாட்டை தான் நாங்கள் சொல்கிறோம். கட்சியை விட்டு, குடும்பத்தை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.





ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சின்னம்மா தான் எங்களை அம்மா ஸ்தானத்தில் இருந்து வழிநடத்துவார். சின்னம்மா என்பதை நாங்கள் அழைக்கவில்லை. அம்மா இருந்த காலத்திலேயே சசிகலாவை, எங்களிடம் 'சின்னம்மா' என்றுதான் அறிமுகப்படுத்துவார். திருமணமாகி 29 வயதில் இருந்து அம்மாவுடன் இணைந்து சுக, துக்கங்களை துறந்து அம்மாவுக்காக இருந்தவர் சின்னம்மா. அம்மாவும் தனக்கென ஒரு குடும்பத்தை தேடிக் கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். அத்தகைய ஒப்பற்ற அறிவார்ந்த அம்மாவுடன் ஒரு நாள் இருக்கும் வாய்ப்புக்கூட கிடைத்தால் அது மாபெரும் பாக்கியம். அந்த பாக்கியம், அத்தகைய வாய்ப்பு 33 ஆண்டுகளாக சின்னம்மாவிற்கு கிடைத்துள்ளது.

இந்த 33 ஆண்டுகளில் அம்மாவின் கோப, தாபங்களில் சுக, துக்கங்களில் பங்கெடுத்தவர் சின்னம்மா. கட்சிக்காக பணியாற்றியதற்காக அம்மா எனக்கு 2 முறை வாரியத் தலைவர், கட்சியில் பொறுப்பு என வழங்கினார். சின்னம்மா என்றோ அம்மாவின் துணையுடன் ராஜ்ஜிய சபா எம்.பி.ஆகி இருக்கலாம் அல்லது எம்.எல்.ஏ, மந்திரி ஆகியிருக்கலாம். ஆனால் சின்னம்மா என்றும் கட்சிப் பொறுப்பை விரும்பியதில்லை. அம்மாவுடன் இருப்பதே பாக்கியம் என திருமண வாழ்க்கையை துறந்து உடனிருந்தவர். சின்னம்மா அப்போதே தன்னை அரசியலில் கட்சியில் ஈடுபடுத்தியிருந்தால் இப்போது இந்த பிரச்னை வந்திருக்காது. அம்மா தற்போது இல்லை. அம்மாவை முழுமையாக புரிந்தவர் என்ற ரீதியில் சின்னம்மாவால் மட்டுமே கட்சியை திறம்பட நடத்த இயலும். சின்னம்மா இதுவரை அரசியலில் ஈடுபட வில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்டு மக்களின் திட்டங்களை செயல்படுத்தும் போது தான் அவரின் திறமை மக்களுக்குத் தெரியும்.

அம்மா இறந்த பின்னர் அவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்திருப்பது, சின்னம்மா சிறையில் இருப்பது எல்லாம் எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அம்மா நினைத்திருந்தால் 2001ல் சட்டமன்றத்திலேயே இப்பிரச்னையை முடித்திருக்கலாம். அப்போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் 'இவ்வழக்கிற்காக நீங்கள் சட்டம் கொண்டு வாருங்கள். நாங்கள் ஆதரவளிக்கிறோம் என்றார். அப்போது அம்மா 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்' என்று கூறியவர் அம்மா.

அம்மா வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் சினிமாத்துறையில் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை. அவர் மறைந்த பின்னர் அவரை குற்றவாளியாக்கியது, தி.மு.க.வினர் அம்மாவை குற்றவாளி என்பதெல்லாம் எங்ளுக்கு வேதனை அளிக்கிறது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு போட்டுள்ளோம். நிச்சயம் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

- ஆர். ஜெயலெட்சுமி.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024