வெள்ளியங்கிரி மலை.. இரவுப் பயண அனுபவம்!
இது நடந்தது 2006-ல். கோவையில் நாளிதழ் ஒன்றில் பணி. பரபரப்பான நகர வாழ்க்கைக்கு இடையே ஒருமுறை வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான வாய்ப்பு கிட்டியது. கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் 20 கி.மீ தொலைவில், பூண்டி என்ற இடத்துக்கு தனிப்பாதை விலகிச் செல்லும். அந்தப் பாதையில்தான், ஈஷா யோக மையம் இருக்கிறது. ஈஷாவுக்கு முன்னர் இடதுபுறத்தில் சென்றால் வெள்ளியங்கிரி மலை. யானைகள் நடமாடும் பகுதி. மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் நம்மை வரவேற்கும்.
வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பெளர்ணமி அன்று, ஒரேநாள் இரவில் 3 லட்சம் பக்தர்கள் மலை ஏறுவார்கள். அந்தத் தருணத்தை புகைப்படமாகப் பதிவு செய்ய வேண்டுமென்பது ஆசை. சித்ரா பெளர்ணமியும் வந்தது. வெள்ளியங்கிரி என்பது கிட்டத்தட்ட 7 மலைகளைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரம் கொண்டது. ஒவ்வொரு மலையையும் தாண்டித்தாண்டி செல்ல வேண்டும். பகலில் செல்வது கடினமான விஷயம். காட்டைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.
கோவையைப் பொறுத்தவரை, அன்றைய தேதிவரை வெள்ளியங்கிரி மலையின் உச்சிக்கு எந்த பத்திரிகை புகைப்படக் கலைஞரும் சென்று போட்டோ எடுத்தது இல்லை. அதனால் சித்ரா பெளர்ணமி தினத்தில் மலையில் இரவில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல். மலைப் பயணத்துக்குத் தேவையான அனைத்தையும் முதுகில் சுமையாக ஏற்றிக் கொண்டோம். தோள்பை, தண்ணீர் கேன்கள், டார்ச் லைட் வயிற்றுக்கு பிரச்னை தராத உணவு வகைகள் சேர்த்தாகி விட்டது. கூடவே நமது உடன்பிறப்பும் ஒட்டிக் கொண்டது. அதுதான் கேமரா. அது இல்லாமல் ஒரு மலைப் பயணமா?
சித்ரா பெளர்ணமியில் கூட்டத்தோடு கூட்டமாக பயணிப்பது கொஞ்சம் ஆபத்தானதுதான் .சிங்கத்தைத் தவிர அத்தனை மிருகங்களும் வசிக்கும் அடர்ந்த வனம். முதல் மலையைத் தவிர மற்ற மலைப்பாதைகள் ஒற்றையடி பாதைதான். நெரிசல் ஏற்பட்டால் ஏராளமானோர் பலியாகி விட வாய்ப்பும் உண்டு. ஒருமுறை அதிக பனிப்பொழிவில் சிக்கி, சிலர் பலியானதாகத் தகவல்.
பொதுவாகவே மார்ச் முதல் மே வரை மலை ஏறலாம். ஆனால் சித்ரா பெளர்ணமியில் நிலவொளியில் நடந்து செல்வது நமக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அதனால், அன்றைய தினத்தில் லட்சக்கணக்கானோர் மலை ஏறுகின்றனர்.
இரவு 7 மணி முதல் மலையின் படிகளை பார்த்த போது பயம் தெரியவில்லை. கையில் 5 அடி மூங்கில் கம்பு வைத்துக் கொண்டு ஏறத் தொடங்கினோம். சரியாக 20 படிகள்தான் ஏறியிருப்போம். மூசசு வாங்கத் தொடங்கியது. 100 படிகள் ஏறியதும் உடல் முழுக்க வியர்வை கொட்டியது. 'ஏம்பா திரும்பி போயிடலாம்பா’ என்று மனசு சொன்னது. கண் முன்னால் அந்த எடிட்டர் முகம் வேறு வந்து போனது. 'இவ்ளோதான் உங்க சவடாலா?’ என்று மனசுக்குள் அவர் குரல் கேட்டது.
அந்தச் சமயத்தில் 60 வயது பாட்டி ஒருவர் மின்னல் வேகத்தில் எங்களை கடந்து போக வியப்பாகி விட்டது. வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பாட்டியிடம் நைசாகப் பேச்சுக் கொடுக்க ஓடினோம். 'என்ன பாட்டி இவ்ளோ வேகமா போறீங்களேனு' கேட்டால், 'தம்பிகளா 10 வருஷம் எக்ஸ்பிரியன்ஸ். மத்த நாள்னா ஒரே இரவிலேயே ஏறி இறங்கி விடுவேன்’-னு அசால்டாக பதில் வர, நாங்கள் விக்கித்துப் போனோம். 20 படிகள்ல அக்கடானு உட்கார்ந்த எங்களுக்கு, அந்தப் பாட்டியின் பதில் வியப்பூட்டியது. இந்தா வர்றோம் என்று நிமிர்ந்தால்... பாட்டியைக் காணோம். பல அடிகள் முன்னால போய்ட்டிருந்தாங்க.
பாட்டியைப் பார்த்தது, சற்று தெம்பு கொடுத்தது. முன் வச்ச கால பின்வைக்க வேண்டாம்னு மேலே போகத் தொடங்கினோம். கொஞ்ச தொலைவுல ஒரு பிள்ளையார் கோயில் வந்தது. அவர் வெள்ளை பிள்ளையார். அந்த இடத்துல கொஞ்ச நேரம் அமர்ந்தோம். ‘ஏம்பா.. இப்படி இருந்து இருந்து போனீங்கனா, நாளைக்கு காலைல 10 மணிக்குதான் போய்ச் சேருவீங்க. மள மளன்னு போய்ட்டு, வெயில் ஏர்றதுக்குள்ள திரும்புங்க’னு ஒரு பெரியவர்கிட்ட இருந்து அட்வைஸ். சொல்லிட்டு அவர் நடந்த வேகம்.. எங்களுக்கு அடுத்த பூஸ்ட். தொடர்ந்து நடக்கத் தொடங்கினோம். வெள்ளியங்கிரி மலையைப் பொறுத்தவரை, வெள்ளைப் பிள்ளையார் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, விபூதி மலை, ஒட்டன் சமாதி மற்றும் சுவாமி மலை போன்றவை முக்கியமானவை. இதில் 4வது மலையில் சிறிய கடை இருக்கிறது. அங்கு நமக்கு டீ, காபி கிடைக்கும். நொறுக்குத் தீனிகளும் கிடைக்கும்.ஆரஞ்சு மிட்டாய் போன்ற நாக்கை வறளாமல் வைத்துக்கொள்ள, சிறியரக மிட்டாய்களும் அங்கு கிடைக்கும்.
ஐந்தாவது மலை முழுவதும் சோலை மரங்கள் நிறைந்த சோலைக் காடுகள் உள்ளன. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், இங்குள்ள புற்களில் அமர்ந்து விடக் கூடாது. அட்டை ஒட்டிக் கொள்ளும். அதுபோல் சுனை நீரில் கால் வைக்கும் போதும் கவனம் தேவை. சில இடங்களில் செங்குத்தாகவும் ஏற வேண்டியது இருந்தது. ஏழாவது மலையில்தான் சுவாமி இருக்கிறது. இதனால், அதன் பெயர் சுவாமி மலை. ஏழாவது மலையை அடையவும் பளபளவென விடியவும் சரியாக இருக்கும். அதிகாலை சூரியன் உதிப்பதை பார்க்க கோடி கண்கள் வேண்டும்.
இரவு நேரத்தில் நாம் கடந்து வந்த பாதையின் ஆபத்தான பகுதிகள் தெரியாது. பகலில் இறங்கத் தொடங்கிய போதுதான் வெள்ளியங்கிரி மலையின் ஆபத்தும், அழகும் ஒருசேர வியக்க வைத்தது.
நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.. ஒருமுறை சென்று வாருங்களேன்!
-எம்.குமரேசன்
No comments:
Post a Comment