அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. (குறள் 635)
|
குறள் இனிது: ஆலோசனை சொல்வது யார்?
ஸ்ரீ ராம் குழுமத்தின் தியாகராசன் ஐயாவுக்கு 2013-ல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது ஞாபகம் இருக்கா? நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் 1974ல் தொடங்கிய சீட்டு நிறுவனம் தான் இன்று வாகனக்கடன், காற்றாலைகள், கட்டுமானம், காப்பீடு எனப் பரந்து விரிந்து பிரகாசிக்கிறது!
விக்கிப்பீடியாவையும் அவர்களது ராம் காப்பிடல் வலைதளத்தையும் பாருங்கள். மலைத் துப் போவீர்கள்! இன்று இக்குழுமத்தில் சுமார் 3,000 கிளைகள்,60,000 பணியாளர்கள்! மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையோ 1.2 கோடி.
இவை மட்டுமில்லைங்க. இக்குழுமம் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு (AUM) ரூ 90,000 கோடியாம். லாபமா. ரூ.2,200 கோடி! ஸ்ரீ ராம் சிட்ஸ் இன்று 22 லட்சம் சந்தாதாரர்களுடனும் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறதாம்! ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனமும் 8.5 லட்சம் வாகன உரிமையாளர்கள் கடன்களுடன் அதன் துறையில் அதே முதலிடம் தானாம்!
நம்ம தியாகராசர் ஐயா கல்லூரியில் படித்தது புள்ளியல்.எந்த வங்கியிலும் பணிபுரிந்த அனுபவம் இல்லை. அப்புறம் எப்படி இப்படி நிதித்துறையில் சக்கை போடு போட்டார்? இது மட்டுமில்லைங்க. ராம் நிறுவனத்தினர் சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்கின்றனர். பெரிய வீடுகள் கட்டிக் கொடுக்கின்றனர். மிகப் பெரிய தொழிற்சாலைகள் அமைத்துக் கொடுக்கின்றனர். நான் இன்னும் முடிக்கலைங்க! முதலீட்டிற்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். உயிருக்கும் உடமைகளுக்கும் காப்பீடு வழங்குகின்றனர்.
இப்படி எப்படிங்க வெவ்வேறு தொழில்களில் அவர்களால் அசாத்திய வெற்றி பெற முடிந்தது? அதற்கு உத்வேகமும் உழைப்பும் போதுமா? ஒவ்வொரு தொழிலிலும் உள்ள நெளிவு சுளிவுகள் வெவ்வேறு ஆயிற்றே? இந்த இமாலய வெற்றியின் இரகசியம்? அசாத்திய வெற்றி பெற்றவர்கள் எல்லோரிடமும் ஏதோ ஓர் அசாத்தியத் திறமை இருக்குமே என்கின்றீர்களா? இவரிடம் இருந்த அந்தத் தனிக் குணம் என்ன? அது என்ன? இந்நிறுவனத்தில் பணிபுரிந்த நண்பர்களிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டேன்.
நம்ம தலைவரிடம் ஒரு தனிப் பழக்கம், நல்ல வழக்கம் இருக்கிறது. தனக்கு நல் யோசனைகள் சொல்ல எப்பவும் ஒர் ஆலோசனைக் குழு (Think tank) வைத்து இருப்பார். அதில் பழுத்த அனுபவம் உள்ள அரசாங்க அதிகாரிகள், மூத்த முதலீட்டாளர்கள், சாதித்துக் காட்டிய வங்கியாளர்கள், சிறந்த பொறியாளர்கள் இருப்பார்கள்! அப்புறம் என்ன? 35 வருட நல்ல அனுபவம் உள்ள 10 பேர் இருப்பது அவருக்கு பல ஆண்டுகளின் பல்வேறு வகைப்பட்ட அனுபவத்தின் பலனைக் கொடுக்குமில்லையா?
'உங்களை விடக் குறைவாக விஷயம் தெரிந்தவர்களை எப்பொழுதும் பணியமர்த்தி விடாதீர்கள்' என்கிறார் மால்கம் போர்ஃஸ்! நம்ம தலைவரிடம் சட்ட நடைமுறைகள் தெரிந்த, வியாபார நுணுக்கங்கள் அறிந்த கெட்டிக்காரர்களைக் துணையாக வைத்துக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் இருந்தது! பெரும் பலன் தந்தது! அறங்களை அறிந்து, சொல்வன்மை உடையவனாய், எக்காலத்திலும் நாட்டை ஆளும் திறனை அறிந்தவனே அரசர்க்குக் கலந்தாலோசிக்க துணையாவான் எனும் குறள் வர்த்தக ஆளுமைக்கும் பொருந்துகிறதல்லவா?
- somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment