Monday, February 27, 2017


வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம்! நலம் நல்லது-80 #DailyHealthDose


தொழில்நுட்பம் `வளர்ச்சி’ என்ற பெயரில் உருவாக்கியதுதான் வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம். எப்படி புகை, மதுவைத் தடைசெய்யப்படவேண்டிய பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அப்படி வைக்கவேண்டிய பொருள் சர்க்கரை. ஆனால், இதுவோ உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டது. உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்துக்குத் தள்ளியதிலும், பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும் இந்த வகைச் சர்க்கரை அளித்த பங்கு அளவில்லாதது.



நியூட்டனின் புவியீர்ப்புவிசை சிந்தனையிலும், `கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும், அறிவியலே அடித்தளம். நீயூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம் நீராவி இன்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரைக்குமான வளர்ச்சி. அந்த தொழில் வளர்ச்சிதான் இந்தச் சர்க்கரை உருவாக்கக் காரணமானது.



இனிப்பையோ, இனிப்பு உணவுகளையோ நாம் சாப்பிடாதவர்கள் அல்ல. விதவிதமாகச் சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய `இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியல் அதற்குச் சிறந்த உதாரணம். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப்பால்... என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ள குறிப்பு உள்ளது. அவை அத்தனையும் அப்போது வெள்ளைச் சர்க்கரையில் அல்ல... வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. எந்த் வகையிலும் இந்த இயற்கை இனிப்புக்கு மாற்றாக வருவதற்குத் தகுதியே இல்லாத இந்தச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாக நம் மீது திணிக்கப்பட்டுவிட்டது.



ஏன் தேவையில்லை?

நம் உடல், தனக்குத் தேவைப்படும் சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ எடுத்துக்கொள்ளும். எனவே, தனியே வெள்ளைச் சர்க்கரை என்ற ஒன்று தேவையற்றது. ஆனால் உண்மையில், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமும் 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடுகிறோம்.

கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை ஆட்சி நடத்த தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பையும், சாப்பிடுகிறவர்களின் உடலுக்கு நன்மையையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டுவிட்டது. அதற்குக் காரணங்களாக, `வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீரை உள்வாங்கும். உற்பத்தி தரமாக இல்லை’ ஆகியவை சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம் இதன் பின்னணியில் இருக்கும் உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான்.



இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்திக்கு மாற்றாக வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவு நிறைந்த கல் உப்பை விரட்டிவிட்டு, `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை `சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள்ளே நுழைந்திருக்கும் வணிகம்தானே தவிர, வேறு என்ன?

இங்கே `வளர்ச்சி’ பரிணாமமாக அல்லாமல், வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசி வரை காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை அடிமை முறையில் வடிவமைத்துவிட்டார்கள். அன்றைய கிழக்கு இந்திய கம்பெனியை வெள்ளந்தியாக வரவேற்றதுபோல, வெள்ளைச் சர்க்கரையையும் வரவேற்று வீட்டுக்குள் உட்காரவைத்துவிட்டோம். வெள்ளைக்கு அடிமையாகிவிட்டோம். அதன் மூலம், பல தொற்றா நோய்கள் நம்மைத் தாக்க வழிவிட்டுவிட்டோம்.

வெள்ளைச் சர்க்கரை என்பது விபரீதம். ஆகவே அதைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு அழகு.

நலம் நல்லது முடிவுரையாகச் சில வரிகள்...

மனிதனின் உலகில் பல்வேறு விந்தைகளை, உடலின் சூட்சுமங்களை அறியும் ஆற்றலும் முனைப்பும் அளப்பரியது. பிக்காத் துகள் வடிவில் உடம்பில் உள்ள புரதக் கூறில் ஒளிந்திருக்கும் முப்பாட்டனின் கழுகுமூக்கு நுனிக்கான காரணம் முதல் எறும்புக்கண்ணில் எட்டாயிரத்தில் ஒரு பங்காயிருக்கும் வைரஸ் நம் குடலுள் ஒளிந்துகொண்டு உன் புத்திசாலித்தனத்துக்கும் அறியாமைக்கும் காரணமாயிருப்பதுவரை இன்றைய மருத்துவ அறிவியலின் கண்டுபிடிப்புகள் அளப்பரியது.

ஆனால், கருங்குளத்து வற்றிப்போன கம்மாயின் ஓரத்தில் நிற்கும், வருசத்துக்கு 100 நாள் கூலியாக மாற்றப்பட்ட விவசாயி, குப்பனின் சாதாரணச் சளிக்கும் இருமலுக்கும் கூடச் சில நேரத்தில் சரியான மருந்துதரமுடியாத போது அளப்பறிய அறிவியல் இருந்து என்ன பயன்? எனத் தோன்றுகிறது. அதே சமயம் மூன்று நாளாய் நீடிக்கும் இருமலுக்குப் பின்னால், நுரையீரலின் புற்று ஒட்டியிருப்பதையும், லேசானத் தலைவலிக்கு ஆசுவசப்படுத்தும் அரவணைப்பில் மூளைக்குள் முக்கிப்பிதுங்கும் கிளையோமாகட்டியும் அறிய முடியாத அவசரத்தில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம் .

தலைவாழை இலையில் இனிப்புப் பரிமாறியக் காலம் மாறிப்போய்ச் சர்க்கரை மாத்திரையான மெட்பார்பினை முதலில் இலையில் பரிமாறும் வல நிலைக்கு ஏற்கனவே வந்து விட்டோம். கருத்தரித்த சந்தோஷத்தில். வளைகாப்பு நடத்திக் கை நிறைய வளையல் ஒலிக் கேட்டு மகிழ வேண்டிய தருணத்தில் "இப்பவுமா இன்சுலின் போட வேண்டும்?" எனச் 'சினையுற்றக் காலத்துச் சர்க்கரை நோய்' எனும் புது வரவில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

என்ன நடக்கின்றது இங்கே? ஏன் இத்தனை அவசர நோய்கள் அவசரக் கதியாய்? "இளமையில் கல்லையும் செரிக்கும் வயது" என்ற நிலை மாறிப்போய் .. இளமையில் எதைத் தின்னால் பித்தம் தெளியும்? எனும் குழப்ப நிலை வந்து குடியேறிய. அவலம் ஏன்?

பயிராக்கலில் துவங்கிப் பாதுகாப்பதில் பக்குவப்படுத்தலில் பதப்படுத்துவதில் பரிமாறப்படுவதில் என அத்தனையிலும் வணிக வன்முறை. "உன் வாயில் ஊட்டப்படும் ஒரு கவளச் சோற்றில் ஒரு பருக்கைக் காசு காப்புரிமையாய் என் வங்கிக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்; என் புன்னகைக்கு நீ இக்குப்பையைச் சுவைத்தாக வேண்டும்;" என நம் பசிக்கும் ருசிக்கும் பின் உள்ள வணிகம் அறமற்றதாய் ஆகிப்போனதில்

"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" எனப் புறநானூற்றுக் கிழவன் பாடிய வரிகளின் சூழல் காப்புச் சிதைந்து போனது. "அடிச்சட்டி ஆனைப் போல ஏன் ராசா இதுதாண்டாக் கடசி உருண்டை; வாங்கிக்கோடாச் செல்லம்" என நம் குழந்தையை ஒக்கலில் வைத்து ஊட்டிய உணவின் வளமும் நலமும் ஒட்டுமொத்தமாய் ஓரங்கட்டுப்பட்டுவிட்டது.

இனியேனும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அன்றி விடுதலைக்குக் காந்தி விடுத்த அறைகூவலான உப்புச் சத்தியாகிரகம் போல் உணவுச்சத்தியாகிரகம் இக்காலத்தின் கட்டாயம். அந்நிய உணவு அமிர்தமாய் இருப்பினும், நமக்கு வேண்டாம்.உள் நாட்டுத் தானியங்களை, உள்ளூர்க் கனிகளை, நம் நிலத்துப் புலாலை நம் மரபுத் தின்பண்டங்களை உண்டு உறுதியாய் நலமாய் வாழ்ந்திட முடியும். நம் பாட்டனும் பாட்டியும் அப்படித்தானே இருந்தார்கள். இரசாயனக் கலப்பால் நம் உடலையும் நம் மண்ணையும் மாசுபடுத்தும் வணிகத்தை உற்றுப்பார்த்து ஒதுக்குவோம். நமக்கு மட்டுமல்ல.. நாளை தலைமுறைக்கும் நாளைய நம் இந்தியாவுக்கும் உணவு நல்லது வேண்டும்!

தொகுப்பு: பாலு சத்யா

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...