Saturday, February 25, 2017

அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ.,

இம்பால்: அரசு மருத்துவமனையில், வயிற்று வலியால் துடித்த ஒரு பெண்ணுக்கு, எம்.எல்.ஏ., ஒருவர் அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைக்க வைத்தார். 

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், முதல்வர் பூ லத்தன்வாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சியாஹா மாவட்டத்தில், மிசோ தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., டாக்டர் கே.பேச்சுவா, சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது, மாவட்ட அரசு மருத்துவமனையைச் சேர்ந்த, அறுவை சிகிச்சை நிபுணர், பயிற்சிக்காக இம்பால் சென்று விட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்து சென்ற, எம்.எல்.ஏ., பேச்சுவா, கடும் வயிற்று வலியால் துடித்த அந்த பெண்ணை பரிசோதித்தார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், உயிரிழக்கும் அபாயம் உள்ளதை அறிந்தார். ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்ற, தானே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பின், அந்த பெண் குணமடைந்து வருகிறார்.டாக்டர் பேச்சுவா, இம்பாலில் உள்ள மண்டல மருத்துவக் கல்லுாரியில் படித்து, 1991ல் பட்டம் பெற்றவர். 2013ல் மிசோ தேசிய முன்னணியில் உறுப்பினராவதற்கு முன், 20 ஆண்டுகள், டாக்டராக பணியாற்றி உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024