Friday, February 24, 2017


ஒழிக்க வேண்டியது சீமைக்கருவேல மரங்களை மட்டுமா..?!.. இவற்றையும்தான்!




மதுரை, உயர்நீதிமன்றம் தனது உச்சவரம்புக்குள் வருகின்ற 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். விளைநிலங்கள், நீர் ஆதாரமாக விளங்கும் நீர்பிடிப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களை 20 நாட்கள் கால அவகாசத்துக்குள் அழிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது. வைகோ உள்ளிட்ட சிலரும் களத்தில் இறங்கி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயத்தை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வது சீமைக்கருவேல மரம் என்பதால் அழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், இதுதவிர இன்னும் பிற சில காரணிகளும் விவசாயத்தை அழிப்பதில் முக்கியப்பங்கு வகுகின்றன.

கருவேல மரத்துக்கும், சீமைக்கருவேல மரத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. இது பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. இந்த கருவேல மரமானது நமக்கு மருந்துப் பொருட்களாக பயன்படக்கூடிய மரங்கள். குளங்களிலும், நீர்நிலைகளிலும் செழித்து வளர்ந்திருக்கும். இதன் அறிவியல் பெயர் அகசியா நிலோடிகா ஆகும். கருவேல மரங்களானது இயற்கையாக நம் நாட்டில் வளரக்கூடியது. ஆனால், நச்சு மரம் என்று சொல்லக்கூடிய சீமைக்கருவேல மரம் பூமிக்குள் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சி நீர்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டது. இது வேலிக்காத்தான் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த மரங்களை முதலில் நிலங்களுக்கு வேலியாகத்தான் பயன்படுத்தினார்கள். சீமைக்கருவேலத்தின் அறிவியல் பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிப்ளோரா. இதன் பூர்வீகம் மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்கா எனவும் சொல்லப்படுகிறது.





இந்த மரமானது 12 அடிக்கும் மேல் வளரக்கூடியது. பூமிக்குள் அதிக ஆழத்தில் வேர்விட்டு வளரக்கூடியது. நிலத்தடிநீரை உறிஞ்சும் இந்த மரமானது காற்றில் உள்ள ஈரப்பதத்தை கூட விட்டுவைப்பதில்லை. பொதுவாக சீமைக்கருவேல மரங்கள் எவ்வளவு கடுமையான வறட்சி வந்தாலும் மிகுந்த செழிப்புடன் காணப்படும். காற்றிலுள்ள ஈரப்பத்தினை எடுத்துக்கொண்டு வளர்வதே இதற்கு காரணம். பொதுவாக இது பரவி இருக்கும் இடங்களில் வறட்சி அதிகமாக காணப்படும். இதனுடைய விபரீதம் தெரியாமல் சீமைக் கருவேல மரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1950-ம் ஆண்டில்தான் இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக தென்மாவட்டங்களில் அதிகமாக வேர்விட்டது இந்த சீமைக்கருவேல மரங்கள். ஆரம்பத்தில் விறகுக்காகவும், வேலிக்காகவும் இருந்த சீமைக்கருவேல மரங்களால் நாளடைவில் வறட்சி தாண்டவமாடத் தொடங்கின. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த சீமைக்கருவேல மரங்கள் படர்ந்து நிற்கிறது. இதுதவிர தமிழ்நாட்டில் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள், குளங்கள் ஏரிகள், புறம்போக்கு நிலங்கள் என பல லட்சம் ஏக்கரானது பாழ்பட்டுத் தரிசாக வறண்டு கிடக்கிறது.



இதனை முன்னரே உணர்ந்து கொண்ட கேரளாவில் சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. இதற்கு அம்மாநிலத்தில் கொடுக்கப்பட்ட சரியான விழிப்பு உணர்வே காரணம். தமிழகத்திலும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்போம் என்ற குரல் கடந்த ஐந்து வருடங்களாக வலுத்து வந்தது. இதன் தொடர்ச்சியாகவே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு 2015-ம் ஆண்டு சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கான திட்டம் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கிய அறிக்கையை 2016-ம் ஆண்டு ஜனவரியிலேயே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வனத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த திட்டம் இதுவரை சமர்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேறோடு அகற்ற உத்தரவிட்டது. வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்க முக்கியமான காரணமாக சொல்லப்படும் சீமைக்கருவேல மரங்களை வேறோடு அகற்றும் நோக்கில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள் அரசு அதிகாரிகளின் துணையோடு களமிறங்கியுள்ளனர்.

அதிகமான வறட்சிக்கு முக்கியமான காரணம் சீமைக்கருவேல மரங்கள் என்பது உண்மைதான். நல்ல நீர்வளமுள்ள பகுதிகளில் சாயப்பட்டறைகளாலும், அரசு சிப்காட்களாலும், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் தொழிற்சாலைகளாலும், நமது தண்ணீரை நமக்கே எடுத்து விற்பனை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான காரணங்களும் இங்கே கவனிக்கப்பட வேண்டியவைதான். இதுபோதாதென்று மீத்தேன், ஷேல்கேஸ் எடுக்கும் திட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் இவையெல்லாம் நிலத்தடி நீர்வளங்களை உயர்த்த உதவுமா?... விவசாயத்தை வாழவைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறதா?.. இதற்கெல்லாம் அரசால் முன்வைக்கப்படும் ஒரே காரணம் தொழில்துறை வளர்ச்சி...



விவசாயத்துக்கு முக்கியமானது தண்ணீர் வளம்தான். விவசாயத்துக்கு முதுகெழும்பே தண்ணீர் வளம் கொண்ட ஆறுதான். அதில் மணல் குவாரி அமைத்து ஆற்றின் வளங்கள் மொத்தமாக சூறையாடப்பட்டது. தற்போது மணல் குவாரிகள் அமைத்த ஆறுகள் வறண்ட நிலமாக காட்சியளிக்கிறது. ஆற்றங்கரையோரத்தில் பச்சைப்பசேல் என காட்சியளித்த நிலங்கள் எல்லாம் பாலைவனம்போல காட்சியளிப்பதும் இதற்கு சாட்சி. அடுத்ததாக மீத்தேன், ஷேல்கேஸ் மற்றும் இயற்கை எரிவாயுக்கள் ஆகியவற்றைத் தமிழகத்தின் நாடித்துடிப்பாக கருதப்படும் டெல்டாவில் எடுக்க அனுமதி அளிக்கும் மத்திய அரசு விவசாயத்தின் மேல் அக்கறை காட்டவில்லை. இதனால் நிலத்தடிநீர் வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும். இதுதவிர மத்திய, மாநில அரசுகளின் அக்கறையின்மையால் காவிரிநீர் இல்லாமல் முப்போகம் விளைந்த டெல்டா மண்ணில் இப்போது ஒருபோகம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஈரோடு, திருப்பூர் ஆகிய விவசாய மாவட்டங்களில் சாயப்பட்டறைகள், மற்ற மாவட்டங்களில் நீர்நிலைகள் அதிகமுள்ள பகுதிகளில் அரசு அமைத்த சிப்காட்கள் (சில இடங்களில் ஏரிக்குள்ளேயேயும் அமைந்துள்ளது) தண்ணீர் மற்றும் குளிர்பான தொழிற்சாலைகள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் நிலத்தடிநீர் வளத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாதபோது தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைப்பதும் கடுமையான வறட்சியை உண்டாக்கி விவசாயத்தை கண்டிப்பாக பாதிக்கும். இதன் விளைவு விவசாயிகள் தற்கொலைக்கு போகும் அளவுக்கு கூட இருக்கும். இதுபோக விவசாயத்துக்கு மத்திய அரசும், மாநில அரசும் வகுக்கும் திட்டங்கள் முழுமையாக விவசாயிக்கு சென்று சேராததும் ஒரு முக்கிய காரணம். தண்ணீர் இல்லாமை, பின்தங்கிய பொருளாதார நிலைமை மற்றும் பிற காரணங்களால் நலிவடைந்த பொருளாதாராத்தில் உள்ள விவசாயிகளும் நேரடியாக மானியதிட்டங்கள் சென்று சேராததும் ஒரு முக்கிய காரணம். இதுபோக விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது. இறுதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததும் ஒரு முக்கிய காரணம். இவ்வாறு சீமைக்கருவேல மரங்களைத் தவிர்த்து விவசாயிகளைப் பாதிக்கும் மற்றும் விவசாயத்தை அழிக்கும் காரணங்களும் பல உள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒழிக்கப்பட வேண்டியது, நிலத்தடி நீர் வளத்தை சுரண்டும் சீமைக் கருவேல மரங்களை மட்டுமல்ல... நிலத்தடி நீருக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும்தான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024