Thursday, March 2, 2017

மூத்த குடிமக்களுக்கு விமான சுற்றுலா வாய்ப்பு

ஜெய்ப்பூர்: நாட்டின் முக்கிய புனித தலங்களுக்கு, 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை, விமானத்தில் அழைத்து செல்லும் திட்டத்தை, ராஜஸ்தான் மாநில அரசு துவங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மூத்த குடிமக்கள், ரயிலில் புனித தலங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது, மாநில அரசின் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக, 'தீன்தயாள் உபாத்யாயா மூத்த குடிமக்கள் புனித யாத்திரை திட்டம்' அமல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், புனித யாத்திரை செல்ல விண்ணப்பித்தவர்களில் இருந்து, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோர், விமானம் மூலம், நான்கு புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான செலவு, தங்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும். முதற்கட்டமாக, 28 பயணிகள், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து, திருப்பதிக்கு விமானத்தில் பறந்தனர். விமான பயணத்தை, முதல்வர் வசுந்தரா ராஜே கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து அறநிலையத் துறை பொறுப்பு ஆணையர், அசோக் குமார் கூறியதாவது:முதற்கட்டமாக, திருப்பதிக்கு, 28 பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர். அடுத்ததாக, ராமேஸ்வரத்துக்கு, 357 பேரும், புரி ஜகன்நாதர் கோவிலுக்கு, 225 பேரும் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 28, 04:15 AM

உயிரியல் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1985–ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பூங்கா நுழைவுக்கட்டணமாக ரூ.2 வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 முறை பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது பூங்காவை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் வார்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்தது. 2 மாதத்துக்கு பிறகு பூங்கா சீரமைக்கப்பட்டு இந்த மாதம் 10–ந்தேதி திறக்கப்பட்டது.நுழைவுக்கட்டணம்

இந்நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு (5 முதல் 12 வயது வரை) ரூ.20 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும்.

புகைப்படக்கருவிக்கு (கேமரா, செல்போன் உள்ளிட்டவை,) ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, பூங்காவை பேட்டரி வாகனத்தில் சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, சிங்க உலாவிடம் வாகன கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நுழைவுக்கட்டணம் வாங்காமல் பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

மார்ச் 02, 02:19 AM

செங்குன்றம்,

தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

அதன்படி புழல் சிறையில் தண்டனையை கைதிகள் 20 பேரும், விசாரணை கைதிகள் 4 பேரும், திருச்சியில் இருந்து 15 பேரும், கோவையில் இருந்து 13 பேரும், மதுரையில் இருந்து 11 பேரும், வேலூரில் இருந்து 8 பேரும், சேலத்தில் இருந்து 9 பேரும், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேரும், கடலூரில் இருந்து 3 பேரும், புதுக்கோட்டையில் இருந்து 5 பேரும் என மொத்தம் 98 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமல்.

மார்ச் 02, 05:00 AM

புதுடெல்லி,

கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடந்த டிசம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளித்த மத்திய அரசு, அதற்குப்பின் இந்த நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி தனிநபர் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட நோட்டுகள் வைத்திருந்தாலோ, ஆய்வு மற்றும் நாணயம் சேகரிப்பில் ஈடுபடுவோர் 25 நோட்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலோ அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அல்லது மொத்த தொகையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வகை செய்யும் வகையில் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் (பொறுப்பு நிறுத்தம்) சட்டம் 2017’ என்ற அந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 27-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வருகிற 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் செலுத்த இந்த சட்டம் வகை செய்வதுடன், தவறான தகவல்களை அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


தலையங்கம்
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம்


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இப்போது மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியுள்ள போராட்டம் நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம்தான்
.
மார்ச் 02, 02:00 AM

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இப்போது மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியுள்ள போராட்டம் நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம்தான். தற்போது தமிழ்நாட்டில் எல்லா வழிகளும் நெடுவாசலை நோக்கி என்ற நிலைமை உருவாகி விட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் என்ற கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, அந்த ஊர்மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள எல்லா இளைஞர்களையும் அங்குப் போய் கலந்து கொள்ள வைத்து விட்டது. கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கிய போராட்டம் இப்போது தீவிரமடைந்து விட்டது. ஏற்கனவே ‘மீத்தேன்’ எடுக்கும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன்பு, இதுபோல காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்கப்பட்ட போது எழுந்த போராட்டத்தின் விளைவாக அந்தத்திட்டம் மூடுவிழா கண்டது. ‘‘இந்தப்பகுதி மக்களுக்கெல்லாம் விவசாயம்தான் தொழில் என்பது மட்டுமல்லாமல் உயிர்மூச்சாகும். இதுபோன்ற திட்டங்களை தொடங்குவதன்மூலம் தங்கள் வாழ்வாதாரமே போய்விடும். தங்கள் நிலங்களெல்லாம் பயிரிடும் தன்மையை இழந்துவிடும். நிலத்தடிநீர் முற்றிலுமாக பாழ்பட்டுப்போய்விடும். மொத்தத்தில், தங்கள்பகுதியே நச்சுத்தன்மைக்கொண்ட பகுதிபோல் மாறிவிடும்’’ என்ற அச்சம் இந்தப்பகுதி மக்களுக்கு இருக்கிறது.

இத்தகைய திட்டங்களை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், கடந்த 2016–ம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க. சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில், இவைப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘‘விவசாய நிலங்களில் ‘மீத்தேன்வாயு’ மற்றும் ‘ஷேல்வாயு’ எடுக்கும் திட்டங்கள் தி.மு.க. அரசினால் தடுத்துநிறுத்தப்படும். விவசாய உற்பத்தி பாதிக்கப்படும்வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாறுவதைத்தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்’’ என்று உறுதியளித்திருந்தது. அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப்பகுதிகளில் ‘மீத்தேன்’ எரிவாயு திட்டம், ‘ஷேல்’ எரிவாயு திட்டம், விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது போன்ற விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்தத்திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது’’ என்று தெளிவாகவே கூறியுள்ளது. அ.தி.மு.க தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள இந்தநிலையில், இதுபோன்ற திட்டங்களுக்கு ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிக்கு மாறாக, எப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், நெடுவாசல் போராட்டக்குழுவில் இருந்து 11 பேர் நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கோட்டையில் சந்தித்தனர். அவர்களிடம், முதல்–அமைச்சர் இந்தத்திட்டத்துக்கு நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம், சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இந்தத்திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று உறுதி அளித்தார்.

மத்தியஅரசாங்கம் இந்தத்திட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் உள்ள காரைக்கால் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படவுள்ள இந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தில் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கும் கீழேயிருந்துதான் ‘ஹைட்ரோ கார்பன்’ தோண்டி எடுக்கப்படுகின்றன. இதற்காக சிமெண்டால் ஆன வளையம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மேல்பகுதியில் உள்ள நிலத்தடிநீர் எந்த வகையிலும் பாதிக்கப்படாது, இறக்குமதியையே நம்பியிருக்காமல் நம்நாட்டிலேயே ‘கச்சா எண்ணெய்’ எரிவாயு போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில்தான், இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன’ என்று என்னதான் சொன்னாலும், பொதுமக்கள் அடைந்துள்ள அச்சத்தின், எதிர்ப்பின் காரணமாக இப்போது இந்தத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றமுடியாது. பொதுவாக, எந்த திட்டமென்றாலும் சரி மக்கள் ஆதரவில்லாமல், மாநிலஅரசு ஆதரவில்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை இந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் நிரூபித்து விட்டது.

Wednesday, March 1, 2017

ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு: வெங்கையா நாயுடு


புதுடில்லி: ‛பிரதமருக்கு ஓய்வு அவசியம் என ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

உ.பி.,யில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், மோடி களைப்படைந்துள்ளார்; அவருக்கு ஓய்வு அவசியம். அகிலேஷ் மீண்டும் உ.பி., முதல்வராவதன் மூலம் பிரதமருக்கு அவரால் ஓய்வு கொடுக்க முடியும் என பேசியிருந்தார்.

ராகுலின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முக்கிய விவாதங்களின் போது, பார்லி., நடவடிக்கைகளில் பங்கேற்காமல், வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் ராகுல், ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் மோடியை ஓய்வெடுக்க சொல்கிறார். குறுகிய காலத்தில் 40 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள மோடி, சர்வதே அளவில் இந்தியர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். 
உள்நாட்டில் அவர் பயணம் மேற்கொள்ளாத மாநிலம் இல்லை. அவர் கவனம் செலுத்தாத பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கே, மக்கள் நிரந்தர ஓய்வை தரும் நிலை ஏற்பட்டுள்ளது. ராகுலின் கீழ்த்தரமான பேச்சு கண்டத்திற்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
சென்னையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு

சென்னை : கடந்த ஆண்டு பருவமழை பொய்ததால் தமிழக அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளிட்ட 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு 15 சதவீதத்திற்கும் கீழாக உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், தற்போது கோடை காலம் துவங்க உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பதை தடுக்க 520 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு போன்ற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வாங்குகின்றனர்.

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...