Thursday, March 2, 2017



தலையங்கம்
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம்


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இப்போது மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியுள்ள போராட்டம் நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம்தான்
.
மார்ச் 02, 02:00 AM

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இப்போது மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியுள்ள போராட்டம் நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம்தான். தற்போது தமிழ்நாட்டில் எல்லா வழிகளும் நெடுவாசலை நோக்கி என்ற நிலைமை உருவாகி விட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் என்ற கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, அந்த ஊர்மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள எல்லா இளைஞர்களையும் அங்குப் போய் கலந்து கொள்ள வைத்து விட்டது. கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கிய போராட்டம் இப்போது தீவிரமடைந்து விட்டது. ஏற்கனவே ‘மீத்தேன்’ எடுக்கும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன்பு, இதுபோல காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்கப்பட்ட போது எழுந்த போராட்டத்தின் விளைவாக அந்தத்திட்டம் மூடுவிழா கண்டது. ‘‘இந்தப்பகுதி மக்களுக்கெல்லாம் விவசாயம்தான் தொழில் என்பது மட்டுமல்லாமல் உயிர்மூச்சாகும். இதுபோன்ற திட்டங்களை தொடங்குவதன்மூலம் தங்கள் வாழ்வாதாரமே போய்விடும். தங்கள் நிலங்களெல்லாம் பயிரிடும் தன்மையை இழந்துவிடும். நிலத்தடிநீர் முற்றிலுமாக பாழ்பட்டுப்போய்விடும். மொத்தத்தில், தங்கள்பகுதியே நச்சுத்தன்மைக்கொண்ட பகுதிபோல் மாறிவிடும்’’ என்ற அச்சம் இந்தப்பகுதி மக்களுக்கு இருக்கிறது.

இத்தகைய திட்டங்களை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், கடந்த 2016–ம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க. சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில், இவைப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘‘விவசாய நிலங்களில் ‘மீத்தேன்வாயு’ மற்றும் ‘ஷேல்வாயு’ எடுக்கும் திட்டங்கள் தி.மு.க. அரசினால் தடுத்துநிறுத்தப்படும். விவசாய உற்பத்தி பாதிக்கப்படும்வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாறுவதைத்தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்’’ என்று உறுதியளித்திருந்தது. அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப்பகுதிகளில் ‘மீத்தேன்’ எரிவாயு திட்டம், ‘ஷேல்’ எரிவாயு திட்டம், விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது போன்ற விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்தத்திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது’’ என்று தெளிவாகவே கூறியுள்ளது. அ.தி.மு.க தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள இந்தநிலையில், இதுபோன்ற திட்டங்களுக்கு ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிக்கு மாறாக, எப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், நெடுவாசல் போராட்டக்குழுவில் இருந்து 11 பேர் நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கோட்டையில் சந்தித்தனர். அவர்களிடம், முதல்–அமைச்சர் இந்தத்திட்டத்துக்கு நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம், சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இந்தத்திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று உறுதி அளித்தார்.

மத்தியஅரசாங்கம் இந்தத்திட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் உள்ள காரைக்கால் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படவுள்ள இந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தில் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கும் கீழேயிருந்துதான் ‘ஹைட்ரோ கார்பன்’ தோண்டி எடுக்கப்படுகின்றன. இதற்காக சிமெண்டால் ஆன வளையம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மேல்பகுதியில் உள்ள நிலத்தடிநீர் எந்த வகையிலும் பாதிக்கப்படாது, இறக்குமதியையே நம்பியிருக்காமல் நம்நாட்டிலேயே ‘கச்சா எண்ணெய்’ எரிவாயு போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில்தான், இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன’ என்று என்னதான் சொன்னாலும், பொதுமக்கள் அடைந்துள்ள அச்சத்தின், எதிர்ப்பின் காரணமாக இப்போது இந்தத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றமுடியாது. பொதுவாக, எந்த திட்டமென்றாலும் சரி மக்கள் ஆதரவில்லாமல், மாநிலஅரசு ஆதரவில்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை இந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் நிரூபித்து விட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024