Thursday, March 2, 2017

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமல்.

மார்ச் 02, 05:00 AM

புதுடெல்லி,

கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடந்த டிசம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளித்த மத்திய அரசு, அதற்குப்பின் இந்த நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி தனிநபர் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட நோட்டுகள் வைத்திருந்தாலோ, ஆய்வு மற்றும் நாணயம் சேகரிப்பில் ஈடுபடுவோர் 25 நோட்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலோ அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அல்லது மொத்த தொகையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வகை செய்யும் வகையில் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் (பொறுப்பு நிறுத்தம்) சட்டம் 2017’ என்ற அந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 27-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வருகிற 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் செலுத்த இந்த சட்டம் வகை செய்வதுடன், தவறான தகவல்களை அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024