Thursday, March 2, 2017

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 28, 04:15 AM

உயிரியல் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1985–ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பூங்கா நுழைவுக்கட்டணமாக ரூ.2 வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 முறை பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது பூங்காவை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் வார்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்தது. 2 மாதத்துக்கு பிறகு பூங்கா சீரமைக்கப்பட்டு இந்த மாதம் 10–ந்தேதி திறக்கப்பட்டது.நுழைவுக்கட்டணம்

இந்நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு (5 முதல் 12 வயது வரை) ரூ.20 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும்.

புகைப்படக்கருவிக்கு (கேமரா, செல்போன் உள்ளிட்டவை,) ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, பூங்காவை பேட்டரி வாகனத்தில் சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, சிங்க உலாவிடம் வாகன கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நுழைவுக்கட்டணம் வாங்காமல் பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024