Wednesday, May 31, 2017

தீயில் எரியும் சென்னை சில்க்ஸ்.. கொளுத்தும் வெயில்... கரண்ட் இல்லாமல் தவிக்கும் தி.நகர் மக்கள்!

சென்னை: தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புழுங்கும் அனலில் ஃபேன் கூட போட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸின் குமரன் தங்க மாளிகைக் கடையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தீப்பற்றியது. 7 அடுக்குகளை கொண்ட அந்த மாடியில் தரைத்தளத்தில் பற்றிய தீ மெல்ல மெல்ல மேல் தளங்களுக்கும் பற்றியது.

10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் அபாயகரத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நவீன கருவிகள் மூலம் புகை வெளியே கொண்டுவரப்பட்டு வருகிறது.

தீ கட்டுப்படுத்த முடியாத அளவில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. கட்டட பகுதியில் உள்ள மக்கள் 100 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் சுவரை இடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் உள்ள பகுதியில் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்காரணமாக காலை முதலே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் ஏசி, ஃபேன் இல்லாமல் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

அருகில் உள்ள மற்ற வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை வைத்து ஓட்டி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நடைபாதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Secretariat

தலைமைச் செயலகத்தில் ஒரே நாளில் 45 பேர் ஓய்வு... பிரிவுபச்சார விழாக்களால் பரபரப்பு!

Oneindia

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தமிழக தலைமைச் செயலகத்தில் 34 துறைகள் உள்ளன. இங்கு செயலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சட்டசபை பேரவை செயலர் ஜலாலுதீன் இன்று ஓய்வு பெற்றனர். இவருடன் அதே துறையை சேர்ந்த 9 பேரும், நிதித்துறையில் 10 பேரும், பொதுத் துறையில் 8 பேரும், சட்டத்துறையில் இருவரும், சிறப்பு திட்ட செயலாக்கம், கால்நடைத் துறை இந்நிலையில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் முதல் செயலர் வரை 21 துறைகளைச் சேர்ந்த 45 பேர் இன்று ஓய்வு பெற்றனர்.

சட்டசபை கூடுதல் செயலர், துணைச் செயலர் நிலையில் உள்ளவர்களும் ஓய்வு பெறுகின்றனர். ஜலாலுதீன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, கூடுதல் செயலராக இருந்த பூபதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவுள்ளது. மேலும் புதியவர்களும் தேர்வு செய்யப்படுவர் என தெரிகிறது.

இவர்கள் ஓய்வு பெறுவதால் பிரிவு உபசார விழா என தலைமைச் செயலகமே பரபரப்பாக உள்ளது.

source: oneindia.com

Dailyhunt

Chennai Silks

சென்னை சில்க்ஸ் தீ விபத்தை வேடிக்கை பார்க்க ஒரே கூட்டம்..வஜ்ரா மூலம் துரத்தும் போலீஸ்!

Oneindia

சென்னை: சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். போலீசார் எச்சரித்தும் மக்கள் செல்லாததால் வஜ்ரா வாகம் மூலம் கூட்டதை கலைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் குழுமத்துக்கு சொந்தமான குமரன் தங்க மாளிகையில் இன்று அதிகடிர பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீயை அணைக்கும பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தவித்து வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காணப்படுகிறது.

ஸ்கை லிப்ட் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. கடையின் சுவர்கள் இடிக்கப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

விபத்துக் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்த தீ விபத்தை நேரில் காண ஏராளமான மக்கள் திருவிழா பார்ப்பது போல் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் பல முறை எச்சரித்தும் மக்கள் தொடர்ந்து அத்துமீறிகின்றனர்.

இதையடுத்து வஜ்ரா வாகனம் மூலம் போலீசார் கூட்டத்தை கலைத்து வருகின்றனர். சூழ்நிலையை புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

புயல், மழை, சாலை விபத்துகள், சாலையில் ஏற்படும் பள்ளம் என எதையும் விட்டு வைக்காமல் செல்பி எடுக்கும் நம் மக்கள் இப்படி ஒரு தீ விபத்தை மட்டும் விட்டுவார்களா என்ன? விபத்தை ரசித்து வேடிக்கை பார்த்து செல்பி எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் விடாமல் இருக்க முடியுமா அவர்களால்?

Chennai Silks

சென்னை சில்க்ஸ் விபத்து சொல்லும் பாடம்.. விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சென்னை சில்க்ஸ் விபத்து சொல்லும் பாடம் என்னவென்றால், அப்பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பதுதான் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினர் உயிரைக் கொடுத்து போராட வேண்டியிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் கூட தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. கட்டடத்தின் தரைத்தளத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டு மற்ற மாடிகளுக்கும் பரவியது. இத்தகைய சூழலில் தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அதன்மூலம் கட்டடம் மற்றும் அதிலிருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பையும் குறைத்திருக்க முடியும்.

ஆனால், ஒருபுறம் மேம்பாலம், மறுபுறம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கமாக பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 விழுக்காடு திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கட்டடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இந்த விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு விதிமீறல்களுக்குப் பிறகும் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டிருந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாதவையாகிவிட்டன.

கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகர் அரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயையும் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமும் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டது தான். சென்னையில் ஏராளமான கட்டடங்கள் இப்படித் தான் எந்த விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டிருக்கின்றன. தியாகராயர்நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிகக் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் சென்னை வாழத்தகுதியற்ற நகரம் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னையிலுள்ள விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மாறாக, அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும். அப்போது இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படும் போது சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே, சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Dailyhunt

Chennai Silks

தீயணைக்க ஆகும் செலவுகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தான் தரவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 12 மணி நேரமாக எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் சுற்று வட்டாரப்பகுதி புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. புகைமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளன என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து தற்போது கூறமுடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடம் உறுதி தன்மையை இழந்திருந்தால், நிச்சயம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்டடம் கட்டியதில் விதிமீறல் இருந்தால்,உரிமையாளர் மற்றும் அனுமதி வழங்கிய சிஎம்டிஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீயை அணைக்க ஆகும் செலவுகளை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தான் தரவேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Dailyhunt

Chennai Silks

நகைகள் உருகின.. துணிகள் எரிந்தன!' - சென்னை சில்க்ஸ் தீயணைப்பு முயற்சி

சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடையில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நகைகள் உருகின, துணிகள் எரிந்தன. எட்டு மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள குமரன் நகைக்கடை, சென்னை சில்க்ஸ் ஆகியவற்றில்... இன்று அதிகாலை 4 மணியளவில் தீ பிடித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அப்போதுதான், கடைக்குள் ஊழியர்கள் தங்கியிருக்கும் தகவல் தீயணைப்பு வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் ஊழியர்களை முதலில் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து தீயணைக்கும் பணி 8 மணி நேரமாக நடந்துவருவதாக, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை தி.நகரில் உள்ள நகை மற்றும் துணிக்கடையில் தீப்பிடித்த தகவல் எங்களுக்கு அதிகாலையில் கிடைத்ததும், உடனடியாக அங்கு சென்றோம். அப்போது, ஏழு மாடிக் கட்டடம் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. கடைக்குள் சில ஊழியர்கள் இருப்பதாகச் சொன்னதும் அவர்களை கிரேன் மூலம் பத்திரமாக மீட்டோம். துரிதமாகச் செயல்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது

கட்டடத்தில் எந்தப் பகுதியில் தீ பிடித்தது என்று தெரியவில்லை. மேல் பகுதி முழுவதும் புகை மூட்டம் அதிகமாக இருந்தது. தீ மள, மளவென ஒவ்வொரு தளமாகப் பரவியது. இதனால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தோம். கிரேன், அருகில் உள்ள மேம்பாலம் மூலமாகவும் கட்டடத்துக்குள் தண்ணீர் அடிக்கப்பட்டது. இந்த நேரத்தில், தரைத் தளத்திலிருந்த நகைக்கடையில் இருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கின. இதனால், தீயை அணைப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. அதற்குள் துணிக்கடையிலும் குடோனிலும் தீ பரவியது.

தண்ணீர்மூலம் தீயை அணைப்பதைவிட, ரசாயனப் பவுடர்மூலம் தீயை அணைக்க முயற்சித்தோம். அதனால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. புகை மூட்டதால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கியது. இதனால், முன்னெச்சரிக்கையாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து (மதியம் ஒரு மணி நிலவரப்படி) 8 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது. தீயை அணைப்பதற்காக கடையின் சுவரை இடித்துள்ளோம் அதன் வழியாக தீயை அணைப்போம். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கான ஏற்பாடும் செய்துள்ளோம். இதுவரை 50 லாரி தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் தீயை அணைத்துவிடுவோம்" என்றார் நம்பிக்கையுடன்.

தீ விபத்து நடந்த இடத்துக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் வந்தனர். தீயணைப்புப் பணிகளைப் பார்வையிட்ட அவர்கள், பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டனர். மேலும், அந்தப் பகுதி அபாயகரமானது என்ற அறிவிப்பை வெளியிட்ட போலீஸார், அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. நகைகள் உருகியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தீ தொடர்ந்து எரிவதால், கட்டடத்தின் உறுதித்தன்மையிலும் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏழு மாடி கட்டடத்தில், சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. தீ விபத்துச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் இன்று திறக்கப்படவில்லை.

Dailyhunt

Chennai Silks

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீயை அணைக்க முடியாததற்கு இதுதான் காரணம்?

சென்னை தி.நகரில் ஏழு மாடி கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் இன்று அதிகாலை தீ பிடித்ததாக அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி இப்போதுவரை நடந்து வருகிறது. தீயை கட்டுக்குள் கொண்ட வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். ஸ்கை லிஃப்ட, ராட்சக கிரேன் மூலம் தீயை அணைத்தாலும், புகை மூட்டம் அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடைக்கு உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த சூழ்நிலையில் கட்டடத்தில் சில பகுதிகளை ஜே.சி.பி மூலம் தீயணைப்பு வீரர்கள் இடித்துத் தள்ளினர். இதன் பிறகு தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தற்போது, கிட்டத்தட்ட 125 தீயணைப்பு வீரர்கள் மூலம் தீயணைப்புப் பணி நடந்து வருகிறது. அப்படி இருந்தும், தீயணைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற இன்னும் சில மணி நேரம் ஆகும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து தீ எரிவதற்கு, கடையின் உள்ளே இருக்கும் ஜெனரேட்டர் அறையில் உள்ள டீசல் பேரல்கள் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பேரல்களில் இப்போது தீ பிடித்துள்ளதால், தீயை அணைப்பதில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோடை காலம் என்பதால், கடை உரிமையாளர்கள் டீசல் பேரல்களில், டீசல் இருப்பை அதிகமாக சேமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Dailyhunt

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...