Friday, September 29, 2017

ஏ.டி.எம்.,களில் ரூ.1 லட்சம் கோடி
தொடர் விடுமுறையை சமாளிக்க நடவடிக்கை

தொடர் விடுமுறையால், தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பணம் நிரப்பப்படுகிறது. தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.



ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வங்கிகளுக்கு, இன்று முதல், நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. அதனால், வங்கி, ஏ.டி.எம்.,களில், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்குமா என, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு, நேற்று சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களும், தேவைக்கேற்ப, ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பர். தொடர் விடுமுறையாலும், தசரா பண்டிகைக்காகவும், சொந்த ஊர், பிற மாநிலங்கள் செல்வோர், சுற்றுலா செல்வோர், பெரும்பாலும், ஏ.டி.எம்.,களையே நம்பி செல்வர்.

பண நடமாட்டம் உள்ள நான்கு நாட்களில், வங்கிகள் தொடர் விடுமுறையால்,

ஏ.டி.எம்.,களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்த, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.இது குறித்து, இந்தியன் வங்கி பொது மேலாளர், நாகராஜன் கூறியதாவது:

தமிழகத்தில், எங்களுக்கு, 1,453 ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒவ்வொரு,ஏ.டி.எம்.,களிலும், குறைந்த பட்சம், 25 லட்சம் ரூபாய் இருக்கும்படி பார்த்து கொள்வோம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் நிரப்பி, கொள்ளை போனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திருப்பி தராது.

தொடர் விடுமுறை வருவதால், ஏ.டி.எம்.,களில் அந்த தொகை, ஓரிரு நாளில் காலியாகி விடும். தேவைப்பட்டால், வங்கியை திறந்து, அருகில் உள்ள, ஏ.டி.எம்.,களில், தேவையான பணத்தை நிரப்ப, அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், எங்களுக்கு, 1,500க்கும் மேற்பட்ட, ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒரு, ஏ.டி.எம்.,மில், ஒரே நேரத்தில், 6,000 எண்ணிக்கையில், ரூபாய் நோட்டுகள் வைக்க லாம். 100 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, தலா, 2,000 வைக்கலாம். அதன்படி, ஓர்இயந்திரத்தில், ஒரே நேரத்தில், 52 லட்சம் ரூபாய் வரை வைக்கலாம்.

தசரா விடுமுறையை முன்னிட்டு, இந்த நான்கு நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் வங்கியை திறந்து, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வேண்டும் என, தமிழகத்தில் உள்ள, 55 வங்கிகளுக்கு  உத்தரவிடப்பட்டு உள்ளது.பணம், 'டிபாசிட்' செய்யவும், எடுக்கவும் வசதியுள்ள, 'ரீசைக்கிளர்' இயந்திரங்கள் பல இடங்களில் உள்ளன. அவற்றில், மக்கள், 'டிபாசிட்' செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதில், இருந்தும் பணம் எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

27,750 ஏ.டி.எம்.,கள்

நாட்டில், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில், 27 ஆயிரத்து, 750, தனியார் மற்றும் பொதுத் துறை, ஏ.டி.எம்.,கள் உள்ளன. அவற்றில், சராசரியாக, 20 லட்சம் ரூபாய் முதல், 30 லட்சம் ரூபாயை, வங்கிகள் நிரப்புகின்றன. சில வங்கிகள், 2,000 ரூபாய் தாள்களாக, 40 லட்சம் ரூபாய் வரை நிரப்பி உள்ளன. இதன்படி, ஏ.டி.எம்.,களில், முதலில், 60 ஆயிரம் கோடி ரூபாய்; பின், தேவைக்கேற்ப, 40 ஆயிரம் கோடி ரூபாய் என, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிரப்ப வாய்ப்புள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -
பேட்டியளித்த,பிரபலங்கள்,பீதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, தமிழக அரசால் நியமிக்கப்  பட்டுள்ள, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த வாரம் அதிரடி விசாரணையை துவக்குகிறது. அதனால், கமிஷனின் விசாரணை வளையத்துக்குள், யார் யார் வருவர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஜெ.,வை பார்க்க, அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பிரபலங்களும், 'விரைவில் வீடு திரும்புவார்' என, பேட்டி அளித்தவர்களும், 'சம்மன் வருமோ...' என்ற பீதியில் உள்ளனர். ஜெ.,வை பார்க்காமல், பார்த்ததாக பேட்டி அளித்த யாரும், விசாரணை வரம்பில் இருந்து தப்ப முடியாது என்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.

திடீர் உடல் நல பாதிப்பு காரணமாக,2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனை யில், ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின்,

அவரது உடல் தான், டிச., 6 அதிகாலையில் வெளியே வந்தது. லண்டன் டாக்டர், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள், சென்னை டாக்டர்கள் என, பல மருத்துவ குழுவினர், சிறப்பு சிகிச்சை அளித்தும் பலனில்லை.

நியமனம்:

ஜெ., மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அவரது மரணத்துக்கு,சி.பி.ஐ.,விசாரணை, நீதி விசாரணை கோரப்பட்டது. உயர் நீதிமன்றத்தி லும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. கடைசியில், 'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.இந்த அறிவிப்பு வந்த ஒரு மாதத்துக்கு பின், விசாரணை கமிஷனுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை, தமிழக அரசு நியமித்தது.விசாரணை கமிஷன், மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில், விசாரணை கமிஷன், தன் பணியை துவக்க உள்ளது. விசாரணை வரம்புக்குள் யார் யார் வருவர் என்பது குறித்து, நீதிபதி முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும்,

அவருடன் தங்கியிருந்த சசிகலா குடும்பத்தின ரிடமும், விசாரணை நடத்தப்படுவது உறுதி.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, தற்போதைய துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு, தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், பா.ஜ., தலைவர், அமித்ஷா, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்தனர்.மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தலைவர்களில் பெரும்பாலானோர், ஜெயலலிதா உடல் நிலை பற்றி, வெளியில் பேட்டி அளித்தனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி போன்றோரும், அன்றாடம் ஜெ., உடல் நிலை பற்றி பேட்டி கொடுத்தனர். ஆனால், சமீபத்தில், அமைச்சர் சீனிவாசன், 'நாங்கள் யாரும், ஜெயலலிதாவை பார்க்கவில்லை; பொய் சொன்னதற்காக, பொது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என, வெளிப்படையாக பேசினார்.

மற்றொரு அமைச்சர் வீரமணி, 'சசிகலாவுக்கு பயந்து, அப்படி பொய் சொன்னோம்' என்றார்.

இதனால், தற்போது நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன், தங்களிடம் விசாரணை நடத்துமா; அதற்காக, 'சம்மன்' அனுப்புமோ என, டில்லி தலைவர்கள் உட்பட, பேட்டியளித்த பிரபலங்கள், தற்போது அச்சத்தில் உள்ளனர்.

தீவிரம்:

மருத்துவமனைக்கு வந்து சென்ற பிரபலங்களுக்கு, கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி, விசாரணை கமிஷன் உத்தரவிடலாம். பதிலில் திருப்தி அடையவில்லை என்றால், நேரில் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பலாம். அவை எல்லாம், விசாரணை கமிஷன் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசு கூறியிருப்பதால், விசாரணை கமிஷன் பணிகள் தீவிரமடையும்.
சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது?

பதிவு செய்த நாள்29செப்
2017
04:03


சென்னை: 'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் மியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒரு மாதம் ஆகும் நிலையில், மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி பட்டியலும் தயராக உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், அக்., இரண்டாம் வாரத்தில், கவுன்சிலிங் நடத்தப்படும்' என்றனர்.
வாக்காளர் பெயர் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்
பதிவு செய்த நாள்28செப்
2017
19:50



லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் லக்னோ தொகுதிக்குட்பட்ட பாபு பனாரசி தாஸ் வார்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்து வந்தார். அவருடைய பெயர் அப்பகுதி வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது வாஜ்பாய் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் அசோக் குமார்சிங் கூறியதாவது: கடந்த 2000 -ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் , 2004-ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போதும் வாஜ்பாய் இங்கு வாக்களித்துள்ளார்.

தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட காலமாக இங்கு வசிக்கவில்லை . இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல்: போலீசார் அறிவுரை
பதிவு செய்த நாள்28செப்
2017
18:57




சென்னை: தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் மக்கள் மற்றும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர் . இது குறித்து போலீசார் கூறியிருப்பதாவது: நாளை செப்.,29 முதல் அக்., 2 வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகளால் 100 அடி சாலை, பூந்த மல்லிசாலை, ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம் செல்பவர்கள் முன்னதாகவே செல்ல வேண்டும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து
பதிவு செய்த நாள்28செப்
2017
20:29




சென்னை: தாம்பரம் -செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அக்., 2-ம் தேதிமுதல் 31ம் தேதி வரையில் தாம்பரம் மற்றும் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வழி: விருத்தாசலம், விழுப்புரம் ) இயக்கப்படும்என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு கட்டண ரயில்ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழியில் ரயில் இயக்கம்

தாம்பரம் செங்கோட்டை இடையேயான சிறப்பு கட்டண ரயில் காலை 5 மணிக்கு புறப்பட்டு (சிதம்பரம், மயிலாடுதுறை,கும்பகோணம், தஞ்சாவூர்) வழியாக வாரம் 5 நாள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம் ரயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு (சிதம்பரம், மயிலாடுதுறை கும்பகோணம், தஞ்சாவூர்) வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,தி.மலை மாவட்டங்களில் மழை
பதிவு செய்த நாள்
செப் 28,2017 18:30



சென்னை: கிண்டி, அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி,கோடம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வட தமிழக உள்மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையின் பல பகுதிகளில் மாலை முதலே கனமழை கொட்டித்தீர்க்கிறது. வட சென்னையிலும், தென் சென்னையிலும் புறநகரிலும் கனமழை கொட்டித்தீர்க்கிறது. பல்லாவரம், குரோம்பேட்டையில் கனமழை பெய்கிறது. அண்ணாநகர், முகப்பேர் பகுதிகளில் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கோயம்பேடு பகுதியில் பெய்து வரும் மழையால் வெளியூர் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்கிறது. அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் பெய்யும் கனமழையால் வடபழனி, ஜிஎஸ்டி சாலையிலும் பெருங்களத்தூர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் மழை

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளான ,பாதிரி, மாம்பட்டு, தெள்ளார் நடுகுப்பம் , மும்முனி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது

NEWS TODAY 2.5.2024