Friday, September 29, 2017

ஏ.டி.எம்.,களில் ரூ.1 லட்சம் கோடி
தொடர் விடுமுறையை சமாளிக்க நடவடிக்கை

தொடர் விடுமுறையால், தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பணம் நிரப்பப்படுகிறது. தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.



ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வங்கிகளுக்கு, இன்று முதல், நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. அதனால், வங்கி, ஏ.டி.எம்.,களில், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்குமா என, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு, நேற்று சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களும், தேவைக்கேற்ப, ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பர். தொடர் விடுமுறையாலும், தசரா பண்டிகைக்காகவும், சொந்த ஊர், பிற மாநிலங்கள் செல்வோர், சுற்றுலா செல்வோர், பெரும்பாலும், ஏ.டி.எம்.,களையே நம்பி செல்வர்.

பண நடமாட்டம் உள்ள நான்கு நாட்களில், வங்கிகள் தொடர் விடுமுறையால்,

ஏ.டி.எம்.,களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்த, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.இது குறித்து, இந்தியன் வங்கி பொது மேலாளர், நாகராஜன் கூறியதாவது:

தமிழகத்தில், எங்களுக்கு, 1,453 ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒவ்வொரு,ஏ.டி.எம்.,களிலும், குறைந்த பட்சம், 25 லட்சம் ரூபாய் இருக்கும்படி பார்த்து கொள்வோம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் நிரப்பி, கொள்ளை போனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திருப்பி தராது.

தொடர் விடுமுறை வருவதால், ஏ.டி.எம்.,களில் அந்த தொகை, ஓரிரு நாளில் காலியாகி விடும். தேவைப்பட்டால், வங்கியை திறந்து, அருகில் உள்ள, ஏ.டி.எம்.,களில், தேவையான பணத்தை நிரப்ப, அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், எங்களுக்கு, 1,500க்கும் மேற்பட்ட, ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒரு, ஏ.டி.எம்.,மில், ஒரே நேரத்தில், 6,000 எண்ணிக்கையில், ரூபாய் நோட்டுகள் வைக்க லாம். 100 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, தலா, 2,000 வைக்கலாம். அதன்படி, ஓர்இயந்திரத்தில், ஒரே நேரத்தில், 52 லட்சம் ரூபாய் வரை வைக்கலாம்.

தசரா விடுமுறையை முன்னிட்டு, இந்த நான்கு நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் வங்கியை திறந்து, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வேண்டும் என, தமிழகத்தில் உள்ள, 55 வங்கிகளுக்கு  உத்தரவிடப்பட்டு உள்ளது.பணம், 'டிபாசிட்' செய்யவும், எடுக்கவும் வசதியுள்ள, 'ரீசைக்கிளர்' இயந்திரங்கள் பல இடங்களில் உள்ளன. அவற்றில், மக்கள், 'டிபாசிட்' செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதில், இருந்தும் பணம் எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

27,750 ஏ.டி.எம்.,கள்

நாட்டில், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில், 27 ஆயிரத்து, 750, தனியார் மற்றும் பொதுத் துறை, ஏ.டி.எம்.,கள் உள்ளன. அவற்றில், சராசரியாக, 20 லட்சம் ரூபாய் முதல், 30 லட்சம் ரூபாயை, வங்கிகள் நிரப்புகின்றன. சில வங்கிகள், 2,000 ரூபாய் தாள்களாக, 40 லட்சம் ரூபாய் வரை நிரப்பி உள்ளன. இதன்படி, ஏ.டி.எம்.,களில், முதலில், 60 ஆயிரம் கோடி ரூபாய்; பின், தேவைக்கேற்ப, 40 ஆயிரம் கோடி ரூபாய் என, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிரப்ப வாய்ப்புள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024