Thursday, September 28, 2017

கேமராக்கள் கண்காணிப்பில் மதுரை காமராஜ் பல்கலை
பதிவு செய்த நாள்28செப்
2017
00:51

மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலையில், அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' எனவும், துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை, இதழியல் துறை தலைவர் ஜெனிபாவை, அவரது அலுவலகத்திற்குள் சென்று, முன்னாள் கவுரவ விரிவுரையாளர் ஜோதிமுருகன் கத்தியால் குத்திய சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, அனைத்து துறை பேராசிரியர்கள் ஆலோசனை கூட்டம், துணைவேந்தர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.
அப்போது, 'ஜோதிமுருகனின் பணி குறித்து, பல நாட்களாக ஜெனிபாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது குறித்து, துணைவேந்தர் கவனத்திற்கு, அத்துறையினர் கொண்டு செல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம், இனி நடக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

'அனைத்து துறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், இந்த அலுவலகங்களில், வருகை விபர பதிவேடு முறை கொண்டு வரப்பட்டு, அலுவலகத்திற்குள் செல்வோர் யாரை, எதற்காக சந்திக்க செல்கின்றனர் என்ற விபரம் பதிவு செய்யப்பட்ட பின்னரே, அனுமதிக்கப்படுவர்.

'அடையாள அட்டை இல்லாதவர்கள், புலம் மற்றும் துறை அலுவலகத்திற்குள் செல்ல, அக்., 2 முதல் அனுமதி கிடையாது' என்பது உட்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024