Thursday, September 28, 2017

குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர்


குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை பெண் என்ஜினீயர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

செப்டம்பர் 28, 2017, 07:00 AM
தாம்பரம்,

குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசி (வயது 22). சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 20-ந் தேதி இரவு அன்பரசி, குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசியபடி சென்றார். அப்போது எதிரில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அன்பரசியிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பரசி தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கடந்த 20-ந்தேதி அன்பரசியிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

கொள்ளையர்களை பார்த்த அன்பரசி, அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றார். வழியில் குரோம்பேட்டை ரெயில்வேகேட் மூடிக்கிடந்தது. இதனால் கொள்ளையர்களால் தப்பிச்செல்ல முடியவில்லை. உடனே பொதுமக்கள் உதவியோடு அன்பரசி இருவரையும் மடக்கிப்பிடித்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (25), பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஜப்பார் (24) என்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024