Thursday, September 28, 2017

பெங்களூரில் இன்று 4-ஆவது ஒரு நாள் ஆட்டம் : வரலாறு படைக்குமா இந்தியா?
By DIN | Published on : 28th September 2017 01:03 AM |



பெங்களூரில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் வியாக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறும். இந்திய அணி தனது 926-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இதுவரையில் 7 அணிகள் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வாகை சூடியுள்ளன. ஆஸ்திரேலியா 6 முறையும், தென் ஆப்பிரிக்கா 5 முறையும், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் தலா இரு முறையும், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகியவை தலா ஒரு முறையும் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளன. எனினும் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி கண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது. 

கடந்த ஜூலைக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.
தற்போதைய நிலையில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரையும் கைப்பற்றிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியும் இன்றி இந்திய அணி களமிறங்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணி, இந்தத் தொடரில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்குமானால், தரவரிசையில் இறக்கத்தைச் சந்திக்கும். அதாவது 3-ஆவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு தள்ளப்படும். எனவே கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. 

வலுவான பேட்டிங்: இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ரஹானே 70, ரோஹித் சர்மா 71 ரன்கள் குவித்தனர். அவர்கள் இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் முன்வரிசையில் களமிறங்கி 72 பந்துகளில் 78 ரன்கள் குவித்த ஹார்திக் பாண்டியா இந்த ஆட்டத்திலும் சோதனை அடிப்படையில் முன்வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் வாய்ப்பு கிடைக்காத கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் மணீஷ் பாண்டே நீக்கப்படுவார். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தூரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் தடுமாறினாலும், கடைசிக் கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அந்த அணியை கட்டுப்படுத்தினர். எனவே இந்த ஆட்டத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் ஃபிஞ்ச்: ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபிஞ்சின் வருகையால் நம்பிக்கை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் சதமடித்த அவர், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி ரன் குவிக்க முயற்சிப்பார் என நம்பலாம். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய 3 பேரும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். 

மிடில் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு சரியான ஜோடி கிடைக்காததால், ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக திருப்பமுடியவில்லை.
கம்மின்ஸுக்கு ஓய்வு? வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்படலாம் என தெரிகிறது. அவருக்கு ஓய்வளிக்கப்படும்பட்சத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. 

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நாதன் கோல்ட்டர் நீல், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆஷ்டன் அகர் வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகிவிட்டார். அதனால் சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா (உத்தேச லெவன்): அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (விக்கெட் கீப்பர்), பட் கம்மின்ஸ்/ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.
மைதானம் எப்படி? 

பெங்களூரு சின்னசாமி மைதானம் ஓரளவு மெதுவான ஆடுகளமாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்திய காலங்களில் இங்கு நடைபெற்ற ஆட்டங்களில் ரன் குவிப்பது கடினமாக இருந்தது.
இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 6 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. 

ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. 

மிரட்டும் மழை... 

பெங்களூரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே போட்டி நடைபெறுவது வருண பகவானின் கையில்தான் உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம்!

பெங்களூரு சின்னசாமி மைதானம் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம் ஆகும். இங்கு 2013 நவம்பர் 2-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 158 பந்துகளில் 16 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024