Thursday, September 28, 2017

விசாரணை கமிஷன் முன்பு அமைச்சர்கள் விளக்கம் அளிப்பார்கள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி



ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள நிலையில், விசாரணை கமிஷன் முன்பு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

செப்டம்பர் 28, 2017, 05:00 AM
சென்னை,

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 113-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தங்கு தடையில்லாமல் தமிழை பிழையில்லாமல் வாசிக்கக்கூடிய நிலையை நான் அடைந்ததற்கு சிறுவயதில் இருந்தே ‘தினத்தந்தி’ படித்து வந்தது தான் காரணம். அதுவே தமிழக சட்டசபை சபாநாயகராக ஜெயலலிதா என்னை நியமித்தபோதும் உதவியது. அப்படிப்பட்ட பெருமைமிக்க தினத்தந்தியை உருவாக்கிய பெருமை சி.பா.ஆதித்தனாரையே சாரும்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பேரவை தலைவராக இருந்த சமயத்தில் அவரது சபை நடவடிக்கைகள், ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ என்ற இங்கிலாந்து பாராளுமன்ற மரபுகளை பிரதிபலிப்பதாக இருக் கும். அமைச்சராக இருந்தபோதும் கூட, மக்களுக்கு தொண்டாற்றிய பெருமகனாராக திகழ்ந்தார். இப்படி பெருமைமிக்க சி.பா.ஆதித்தனாருக்கு அ.தி.மு.க. அரசில், எம்.ஜி.ஆர். தான் சிலையை நிறுவினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பூங்கா அமைக்கப்படும்

ஒரு இனிப்பான செய்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலையை சுற்றி ஒரு அழகிய பூங்கா அமைப்பதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார். எனவே உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். உங்களது குழந்தைகள் தங்கு தடையின்றி, பிழையின்றி தமிழ் வாசித்து பழகவேண்டும் என்றால், அவர்களை சிறு வயதில் இருந்தே தமிழ் நாளிதழை படிக்கவைக்க வேண்டும் என்று சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

அமைச்சர்கள் விளக்கம்

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறதே?

பதில்:- எல்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நான் உள்பட யார் யார் கருத்துகள் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு விசாரணை கமிஷன் அறிக்கை அனுப்பும். அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் மக்களின் குழப்பம் தீருவது எப்போது?

பதில்:- அதற்காக தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை நடக்கட்டும். ஜெயலலிதா வீடியோ பதிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டும். அது உண்மையா இல்லையா என்பதை கமிஷன் முடிவு செய்யும். அமைச்சர்களின் கருத்துகள் விசாரணை கமிஷனின் உரிமைகளை பாதிக்கவில்லை. விசாரணையின்போது அதற்கான விளக்கத்தை அமைச்சர்கள் அளிப்பார்கள். விசாரணை கமிஷன் நல்ல முறையில் நடக்கும்.


கேள்வி:- அமைச்சர்கள் வாய் உளறி பேசி வருவதாக டி.டி.வி.தினகரன் கருத்து கூறியிருக்கிறாரே?


பதில்:- ஜெயலலிதா அரசில், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் திறமைசாலிகள். இதன்மூலம் ஜெயலலிதாவையே டி.டி.வி. தினகரன் குறை சொல்வது போல இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024