Thursday, September 28, 2017

சிவாஜி கணேசன் மணிமண்டபம் 1-ந்தேதி திறப்பு தமிழக அரசு அறிவிப்பு


சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபம் வருகிற 1-ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 28, 2017, 04:16 AM

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, சென்னை அடையாறு பகுதியில் ஆந்திர மகிளா சபா மருத்துவமனை அருகில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசாணையின்படி, மணிமண்டபம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, சிவாஜிகணேசனின் பிறந்தநாளான 1.10.2017 அன்று மணி மண்டப திறப்பு விழாவை தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திறப்பு விழா

இந்த மணிமண்டபம் திறப்புவிழா 1.10.2017 காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

இந்த விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலக பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024