Friday, September 29, 2017

டிஜிட்டல் போதை 2: கையோடு வந்த விபரீதம்

Published : 23 Sep 2017 10:10 IST

வினோத் ஆறுமுகம்





உடலுக்கு வலுச் சேர்க்கும், குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுக்களான கொக்கோ, கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடாமல், உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத கிரிக்கெட்டை நம் குழந்தைகள் தங்களுக்கான ஆதர்சமாக எடுத்துகொண்டார்கள். கிரிக்கெட்டை மட்டுமே பராக்கு பார்த்தபடி மெதுவாக விளையாடலாம். களத்தில் குதித்த பிறகு வெளியேறும்வரை எப்போதுமே கவனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பந்துவீச்சாளர் பந்தை வீசும்போதுதான் எல்லோருடைய கவனமும் குவியும். அது மட்டுமல்லாமல், பல நேரம் குழுவைவிடத் தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விளையாட்டு அது.

சுறுசுறுப்பு அதிகம் இல்லாதது என்றாலும், இத்தனை காலம் கிரிக்கெட்டை விளையாடவாவது நம் குழந்தைகள் வெளியே சென்றுகொண்டிருந்தார்கள். வீடியோ கேம் வீட்டுக்குள் நுழைந்தபோது, கிரிக்கெட்டைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டுவிட்டார்கள். வெளியே விளையாட விடாமல் தொலைக்காட்சிகள் அவர்களைக் கட்டி போட்டன. ஒரு நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவற்றின் இயல்புக்கு ஏற்ப சலிப்பை ஏற்படுத்தத் தொடங்க, வீடியோ கேம் பக்கம் குழந்தைகள் தாவிவிட்டனர். இதெல்லாம் 90-களில் நடந்தது.

அப்போதுதான் நம் ஊரில் வீடியோ கேம்கள் அறிமுகமாகியிருந்தன. ஆரம்ப கால வீடியோ கேம்கள், செல்போன் மாதிரியான ஒரு கருவியில், கறுப்பு வெள்ளைத் திரையில் விளையாடப்பட்டன. ‘ப்ரிக்ஸ்’ என்றொரு கேம். அதில் விதவிதமாக மேலிருந்து கீழே வரும் வடிவங்களைக் காலி இடம் இல்லாமல் நிரப்பிவிட்டால் பாயிண்ட் கிடைக்கும். அடுத்து ‘ஸ்னேக்ஸ்’ எனும் பாம்புபோல் ஊர்ந்துசெல்லும் டிஜிட்டல் பிக்ஸல்களை ஒன்றிணைக்க வேண்டும். இடம் வலம் மாத்திரம் செல்லும் ‘கார் ரேஸ்’ விளையாட்டு. அன்றைக்கு இருந்த வீடியோ கேம் வகைகள் அவ்வளவுதான்!

வியக்க வைக்கும் சந்தை

தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து விளையாடும் வீடியோ கேம் அதன் பிறகு வந்தது. வீடியோ கேம் வண்ணம் பெறத் தொடங்கியது. கணினிகள் பரவலாகாத காலம். ஆரம்பகால செல்போன்களும் கறுப்பு வெள்ளையில்தான் இருந்தன. நோக்கியாதான் முதன் முதலில் செல்போனில் கேமை அறிமுகப்படுத்தியது. எங்கள் செல்போனில் பேசலாம், பொழுதைப்போக்க விளையாடவும் செய்யலாம் என விளம்பரப்படுத்தியது. அப்போது சிறுவர்கள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் விளையாடத் தொடங்கினார்கள். அதன்பிறகு வீடியோ கேம் விளையாடும் பெரியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இன்றைக்கு வீடியோ கேம் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. இன்றைய இந்தியா வீடியோ கேமுக்கு மாபெரும் சந்தை. 2018-ல் இந்தியாவின் வீடியோ கேம் சந்தை மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், இந்தியர்களிடமிருந்து இவ்வளவு பணத்தைக் கறக்கலாம் என்பதே சந்தை மதிப்பீடுகள் முன்வைக்கும் உண்மை. ஆரம்ப கால வீடியோ கேம் உடன் ஒப்பிட்டால் கிராஃபிக்ஸ், விளையாட்டின் சிக்கல், உத்திகள், விளையாடும் முறை எனப் பல வகைகளில் வீடியோ கேம் முன்னேறியிருக்கிறது.

இன்றைக்கு வீடியோ கேம் மூன்று வகைகளில் விளையாடப்படுகிறது. ஒன்று சிடி, டிவிடி மூலமோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ அல்லது ‘ஆப்’ மூலமாகவோ விளையாடப்படுகிறது. இவை ஆஃப்லைன் கேம்ஸ். அதாவது, இணைய வசதியில்லாமலேயே விளையாடுவது. இரண்டாவது, ‘எக்ஸ் பாக்ஸ்’ போன்ற கேமிங் கன்சோல். தொலைக்காட்சியுடன் இணைத்து விளையாடுவது. மூன்றாவதாக, இணைய உதவியுடன் விளையாடுவது.

பொதுவாக ‘விளையாடாதே. படி, படி!’ என நச்சரிக்கும் பெற்றொர்களே, தம் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதைப் பெருமையாகக் கருத ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களே அதை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்த முரண்பாட்டைப் பற்றி பின்னர் விரிவாகப் பேசுவோம்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர் | தொடர்புக்கு: write2vinod11@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024