Thursday, September 28, 2017

அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? : அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
பதிவு செய்த நாள்27செப்
2017
23:54

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்கான, ஐந்து பேர் இடம் பெற்ற அலுவலர் குழு, நேற்று, முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அவரது அறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, பிப்., 22ல், ஊதிய விகித மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் அளிக்க, அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் குறித்தும், மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்தும், ஆய்வு செய்தது. தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. அதன் அடிப்படையில், நேற்று, குழு உறுப்பினர்கள், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, குழு அறிக்கையை வழங்கினர்.அப்போது, துணை முதல்வர், பன்னீர்செல்வம், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.'ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு சார்பில், சமீபத்தில் வேலைநிறுத்தம் நடந்தது.

அப்போது, 'அலுவலர் குழு அறிக்கை அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, முதல்வர் உறுதி அளித்திருந்தார். தற்போது, குழு அறிக்கை அளித்து விட்டதால், ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024