Saturday, September 30, 2017

பரிதாபம்!

கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் பலி
வதந்தியால் மும்பை ரயில் நிலையத்தில் சோகம்

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 25 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடும் மழை பெய்த நிலையில், மின்சாரம் பாய்வதாக பரப்பப்பட்ட வதந்தியால் தப்பிக்க முயன்றபோது, இந்த விபந்து நடந்தது.



மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மும்பையில் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருப்பது, புறநகர் ரயில் சேவையே. நாட்டிலேயே, அதிக அளவுக்கு புறநகர் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்படுவது இங்குதான்.இங்குள்ள புறநகர் பகுதி யான பரேலில் நான்கு முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. மத்திய ரயில்வே இயக்கும் புறநகர் ரயில் சேவையின் கீழ், பரேல் மற்றும் கர்ரி ரோடு ரயில் நிலையங்கள் உள்ளன.

நடை பாலம்:

மேற்கு ரயில்வே இயக்கும்


ரயில் பாதையில், எல்பின்ஸ்டோன் ரோடு மற்றும் லோயர் பரேல் ரயில் நிலையங்கள் உள்ளன.

எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்காக உள்ள நடைபாலம் மூலம், பரேல் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும். நேற்று காலை, 10:40 மணிக்கு, ஒரே நேரத்தில், இரண்டு ரயில் பாதைகளிலும் ரயில்கள் வந்து சேர்ந்தன. அதனால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், கனமழை பெய்ததால்,மழையில் நனையாமல் இருக்க, நடைபாலத்துக்கு மக்கள் முண்டியடித்த னர்.

இந்த நிலையில், கனமழையில் மின்கசிவு ஏற்பட்டு, நடைபாலத்தின் ஒரு பகுதியில், 'ஷாக்' அடிப்பதாக வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து, தப்பிப்பதற்காக, நடைபாலத்தின் படிக்கட்டு வழியாக மக்கள்வேகமாக இறங்க முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி, சிலர் படிகட்டில் உருண்டனர். பலர் தடுமாறி விழுந்ததால், 25 பேர் நசுங்கி உயிரிழந்தனர். 40க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வீண் வதந்தியால் பலர் உயிரிழந்த சம்பவம், மும்பை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர்கள் இரங்கல்:

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர்,மோடி, மஹாராஷ்டிரா

முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே நிகழ்ச்சிகள் ரத்து:

மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே சார்பில்,பல்வேறு புதிய ரயில் சேவைகள், நேற்று துவக்கி வைப்பதாக இருந்தது. ரயில் நிலைய விபத்தால், அவை ரத்து செய்யப்பட்டன. இந்த புதிய ரயில் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் நேற்று, மும்பை வந்தார்; விபத்து நடந்த பகுதிக்கு சென்று, பார்வையிட்டார்.

''இந்த சம்பவம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, மேற்கு ரயில்வேயின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் விசாரிக்கப்படும். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார், பியுஷ் கோயல்.

பரேலில் தினசரி பிரச்னை

மும்பையின் ஜவுளி மில்களின் மையமாக பரேல் இருந்தது. கடந்த, 1990களின் கடைசியில், இந்தப் பகுதியில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. மில்கள், மிகப் பெரிய அலுவலகங்களாக மாறியுள்ளன. மும்பையின் பிரதான பகுதிகளான நரிமன் பாயின்ட், கபே பரேட் பகுதிகளுக்கு இணையாக, பரேல் மிகப் பெரிய வர்த்தக, தொழில் மையமாக மாறியுள்ளது.

விபத்து நடந்த எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலத்தின் வழியாக, பரேல் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும்.அதனால், இந்த ரயில் நடைபாலத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பரேல் கடந்த, 30 ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற வசதிகள் ஏதும் செய்யப்பட வில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடைபாலமே, தற்போதும் உள்ளது. இங்கு பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. செய்யப்பட்ட ஒரே மாற்றம், எல்பின்ஸ்டோன் ரோடு என்ற ரயில் நிலையத்தின் பெயர், பிரபாவதி என்று மாற்றியதுதான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024