Thursday, September 28, 2017

மழை நீரில் மிதக்கிறது பெங்களூரு!
By DIN | Published on : 28th September 2017 01:12 AM



பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் நகரமே தண்ணீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது.

கர்நாடகத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெங்களூரில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை மாநகரில் 58.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக நேர்ந்தது. 

உயிரிழப்பு: பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரம் ஆர்எம்எஸ் லே-அவுட் பகுதியில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால், கணினியில் பொருத்தப்பட்டுள்ள தடையில்லா மின் கருவியை (யூபிஎஸ்) அணைக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, மீனம்மா என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதேபோல, மாதநாயகனஹள்ளிக்கு அருகேயுள்ள ஆலூரில் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், அதில் சிக்கி நாராயணப்பா (48) என்பவர் உயிரிழந்தார். ஆர்எம்எஸ் லேஅவுட்டில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு, வீட்டிலிருந்த பொருள்கள் தீயில் கருகின. 

கோரமங்களா, எச்எஸ்ஆர் லேஅவுட், ஜே.பி.நகர் 6-ஆவது தடம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், சாலைகள் மூழ்கின. அப் பகுதிகள் அனைத்தும் தீவு போல காட்சி அளிக்கின்றன. சந்திர லே-அவுட்டில் சுவர் இடிந்து விழுந்ததால் 6 கார்கள், 2 ஆட்டோக்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
ஆடுகோடி சாலை, ராணுவப் பள்ளி சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால், பள்ளியின் நுழைவுவாயில் அடைபட்டது. 

சாகாம்பரி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச் சுவரும் மழைக்கு விழுந்துள்ளது . 

தண்ணீர் புகுந்தது: சாந்தி நகர் பேருந்து நிலையத்தின் பணிமனையில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், அங்கிருந்த ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அல்சூர், கிரிநகர், கே.ஆர்.புரம், எச்.எஸ்.ஆர்.லே அவுட், ராஜராஜேஸ்வரி நகர், ஜே.பி.நகர், கோரமங்களா, சாந்தி நகர், அவலஹள்ளி, ராஜாஜி நகர், யஷ்வந்த்பூர், ஹெப்பாள், பனசங்கரி, மல்லேஸ்வரம், ஓகலிபுரம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாயினர்.

கோரமங்களாவில் உள்ள பேருந்து நிலையத்தில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், பேருந்துகள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இரு சக்கர வாகனங்கள் இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

10 ஆயிரம் கோழிகள் சாவு: நெலமங்களா, தொட்டபிதர்கல்லு பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அங்குள்ள கால்நடைப் பராமரிப்பு மைய வளாகத்திற்குள் பகுந்ததால், பண்ணையில் தட்டிக்குள் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தண்ணீரில் மூழ்கி பலியாயின. பெங்களூரு, சந்திர லேஅவுட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால், வாகனங்கள் சேதமடைந்தன. மாநகரின் பல்வேறு இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயர் ஜி.பத்மாவதி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.

மழை தொடரும்

புதன்கிழமை தொடங்கி அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024