Thursday, September 28, 2017

ஜியோ போன்–சலுகைகளும் சர்ச்சைகளும்: சில விளக்கங்கள்!
By DIN | Published on : 27th September 2017 07:24 PM



சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஜியோ போன் உடன் வரக்கூடிய சலுகைகள் மற்றும் அதன் குறைந்த பட்ச பயன்பாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 'ஜியோ போன்' என்னும் மலிவு விலை போன் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்காக ரூ.1500-ஐ பயனாளர்கள் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஜியோவின் வழக்கமான சிறப்பு சலுகைகளும் அதனுடன் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டது.மூன்று வருட பயன்பாட்டிற்குப் பிறகு அந்த போனைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் பயனாளர்கள் தாங்கள் செலுத்திய காப்புக் கட்டணமான ரூ.1500-ஐ திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காப்புக் கட்டணமான ரூ.1500-ஐ திரும்பப் பெற பயனாளர்களுக்கு மூன்று வருட காலம் என்பதனை தற்பொழுது ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றி, அதற்கும் முன்னதாகவே வெளியேறும் படியான சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

முதல் ஒரு வருட காலத்திற்குள் ஜியோ போனை திருப்பிக் கொடுக்க விரும்புவர்களுக்கு எந்த விதமான காப்புக் கட்டணமும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

முதல் 12 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்குள் திரும்பிச் செலுத்த விரும்புவர்களுக்கு, ரூ.500 காப்புக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

அதேபோல 24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்குள் திரும்பிச் செலுத்த விரும்புவர்களுக்கு, ரூ.1000 காப்புக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

முதலில் அறிவிக்கப்பட்ட திட்டப்படி முழுதாக 36 மாதங்கள் அதாவது மூன்று வருட பயன்பாட்டிற்குப் பிறகு அந்த போனைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் பயனாளர்கள் தாங்கள் செலுத்திய காப்புக் கட்டணமான ரூ.1500-ஐ முழுமையாகத் திரும்பப் பெறலாம்

அதேநேரம் ஜியோ போனின் குறைந்த பட்ச பயன்பாடு தொடர்பாக முக்கியமான மற்றொரு அறிவிப்பினையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜியோ போன்களின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத பதுக்கலைத் தடுக்கவும், ஜியோவின் மிகச் சிறந்த வசதிகளைப் பயனாளர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் குறைந்த பட்ச பயன்பாடு என்பதனை வரையறை செய்துள்ளோம். அதன்படி பயனாளர் ஜியோவின் பல்வேறு விதமான திட்டங்களில் இருந்து தனக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து, ஒரு வருடத்திற்கு ரூ.1500-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அதனை அவர்கள் ஜியோவின் எந்த விதமான தொகுப்புத் திட்டங்களில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளும் வசதியினை நாங்கள் வழங்குகிறோம். உதாரணமாக ஒரு பயனாளர் ஜியோவின் ரூ.153 மாதாந்திர திட்டத்தினை தனக்கு தேர்வு செய்தால், பின்னர் ஒரு வருடத்தில் 10 முறை இந்த திட்டத்தில் அவர்கள் ரீசார்ஜ் செய்தால் போதும். இதன்மூலம் ஒருவேளை அவர் வருட இறுதியில் போனைத் திரும்ப அளிக்க விரும்பினால், அதற்கான காப்புக் கட்டண பெறுதலுக்குத் தயாராகிறார். இது வழக்கமாக ஒரு வருடத்திற்கு 13 தடவை ரீசார்ஜ் செய்வதை விட குறைவான தொகை கொண்டாதாகும்.

இது மற்ற 2G சேவை நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான தொகை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முக்கியமாக ஜியோ போனுக்கு சேவை வசதிகளை தடையற வழங்கும் பொருட்டு நாடு முழுவதும் 12000 சேவை மையங்கள் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு பயனாளர் அவர் இருக்கும் பகுதியின் 10 கிமீ சுற்றளவுக்குள் ஒரு ஜியோ சேவை மையத்தினை அணுகி பயன் பெறலாம்.


No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024