Thursday, September 28, 2017

பான் எண் தேவைக்கான 11 முக்கிய அம்சங்கள்!

By DIN | Published on : 27th September 2017 06:21 PM



பெர்மனன்ட் அகௌன்ட் நம்பர் எனப்படும் நிரந்தர பான் கணக்கு எண் தற்போது அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களுக்கும் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.50,000 அல்லது அதற்கு மேலான பணப்பரிவர்தனைகளுக்கு இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையால் இந்த நிரந்தர பான் கணக்கு எண் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தனிமனிதனின் பணப்பரிவர்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசாங்கத்தால் கண்காணிக்க முடியும்.

புதிய வீடு, கார் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும்போது, வெளிநாட்டு பண மாற்றத்தின்போது, வர்த்தகத்தின் போது மற்றும் பணப்பரிவர்தனைகள் உள்ளிட்ட அனைத்து பொருளாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு இந்த பான் எண் உபயோகப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற 11 முக்கிய காரணங்களுக்கு இந்த பான் எண் அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில் அனைத்தும் பான் எண் இல்லாமல் செய்துவிட முடியாது. மேலும், அன்றாட வாழ்வின் முக்கிய அம்சங்களாகவும் இவை திகழ்கின்றன.

புதிதாக வங்கிக் கணக்கு துவங்க:

நமது பணப்பரிமாற்றங்களுக்காகவும், சேமிப்பு தொடர்பாகவும் ஏதேனும் வங்கி ஒன்றில் புதிய கணக்குத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு அவசியம் பான் எண் சமர்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000-க்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்டவரின் பான் எண் குறிப்பிட வேண்டும்.

சொத்து வாங்க, விற்க:

புதிதாக வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்து ஒன்றை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும் குறிப்பாக அந்தத் தொகை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் இருக்கையில் பத்திரப்பதிவின் போது அவசிம் பான் எண் சமர்பிக்கப்பட வேண்டும்.

வாகனம் வாங்க, விற்க:

ரூ. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விலையில் உள்ள ஏதேனும் வாகனம் ஒன்றை வங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் அதன் பதிவுடன் கட்டாயம் பான் எண் இணைக்கப்பட வேண்டும்.

புதிய தொலைபேசி இணைப்புக்கு:

தனிமனிதருக்கு அல்லது வீட்டுக்கு தொலைபேசி, செல்ஃபோன் உள்ளிட்ட இணைப்பு வாங்கும்போது பான் எண் வழங்க வேண்டும். தீவிரவாத செயல்கள் மற்றும் தனிமனித பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் ஏற்படாதவாறு மத்திய அரசால் இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பங்கு வர்த்தகம்:

பங்கு வர்த்தகத்தில் பிணாமிகளால் அதிகளவில் கறுப்புப் பணப்புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு, ரூ. 50,000-ல் இருந்து தனிநபர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போதும் ஒவ்வொரு முறையும் பான் எண் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா:

வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது தினசரி தனிநபர் ஒருவர் ரூ. 25,000-க்கும் மேல் செலவு செய்ய நேர்ந்தால் அவர் அவசியம் பான் எண் குறிப்பிட வேண்டும்.

சொகுசு விடுதிகளுக்கு:

உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் ஒருவர் தனது தேவைக்காக சொகுசு விடுதிகளில் தங்கும்போது அதன் செலவுத் தொகை ரூ. 25,000-ஐ தாண்டினால் பான் எண் தெரிவிக்க வேண்டும்.

சந்தா, தரகர் கட்டணங்களில்:

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ரூ. 50,000 மற்றும் அதற்கும் மேல் பங்குகளை வாங்கும்போதும், ரிசர்வ் வங்கியின் மூலம் ஏற்படும் பணப்பரிவர்த்தனை, காப்பீட்டூத் திட்டம் வாங்கிய ஒரு வருடத்துக்குள் அதன் சந்தா தொகையாக ரூ. 50,000 அல்லது அதற்கு மேல் செலுத்தும்போது, மொத்த சந்தை மதிப்பில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தரகரிடம் ஆபரணங்கள் வாங்க, விற்பது போன்ற செயல்களுக்கு பான் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.

பங்குச் சந்தை கணக்கு:

பங்குச் சந்தையில் ஈடுபட்டு தொழில் செய்வது தொடர்பாக புதிய பங்கு வர்த்தக கணக்கு ஒன்றை துவங்கும் போது அந்த குறிப்பிட்ட பங்குச் சந்தை தரகரிடம் பான் எண் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது பங்கு வர்த்தக கணக்கு உபயோகத்தில் இருக்காது.

கடன்:

அனைத்து கடன்களுக்கும் பொருந்தும். விவசாயக் கடன் தொடங்கி கல்விக் கடன் மற்றும் தனிநபர் கடன் என அனைத்துக்கும் பான் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக அந்த வங்கியில் இருந்து தகவல் வந்தால் உடனடியாக பான் எண் இணைக்கப்பட வேண்டும்.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பெற:

வங்கியில் இருந்து புதிதாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பெற பான் எண் வழங்க வேண்டும். இல்லையெனில் அந்த கார்டு பயன்படாமல் இருக்கும்.


No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024