Thursday, September 28, 2017

“ரத்தம் கக்கி சாவேன்னு மிரட்டுறாங்க!”- கிராமத்து திருவிழாவை செய்தியாக்கிய பெண் நிருபரின் அனுபவம்

ஷோபனா எம்.ஆர்




கோயில் திருவிழாவில் சடங்கு என்கிற பெயரில் சிறுமிகளை மேலாடை இல்லாமல் ஊர்வலமாக அழைத்துச்செல்வது பற்றி செய்தி வெளிட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவம், பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருக்கும் கிராமம் வெள்ளளூர். இங்கே உள்ள ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் நடத்தப்படும் சடங்கு சமூக ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 61 கிராமங்கள் சேர்ந்து நடத்தும் திருவிழாவில், 15 வயதுள்ள சிறுமிகளை மேல் சட்டையில்லாமல் ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். இதுபற்றி ‘தி கோவை போஸ்ட்’ என்ற செய்தி இணையதளம், வீடியோ ஒன்றை கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து அந்தச் செய்தி வெளிட்ட பத்திரிகையாளர் மெய்யம்மையிடம் பேசினோம். “நான் மதுரையைச் சேர்ந்தவள். அந்த அம்மன் கோவிலில் நடக்கும் இந்தத் திருவிழாப் பற்றி எனக்குத் தெரியும். 15 வயதுடைய வளரிளம் சிறுமிகளை, மேல் சட்டையைக் களைந்து ஊர்வலமாக அழைச்சுட்டுப் போவாங்க. அந்தச் சிறுமிகளை ஏழு நாள்களுக்குக் கோவில் பூசாரியுடன் தங்கவைப்பாங்க. இதை, கடந்த ஞாயிற்றுகிழமை செய்தியாக வெளியிட்டேன். திங்கட்கிழமை முதல் எனக்கு போன் மூலமாகவும் ஃபேஸ்புக் மூலமாகவும் பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வர ஆரம்பிச்சது.

நான் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவள் இல்ல. ஆனால், அந்தச் சிறுமிகளுக்குப் பூப்பெய்தும் வயது இது. கிட்டதட்ட 50,000 பேர் கூடும் ஒரு திருவிழாவில், இப்படி மேலாடை இல்லாமல் ஊர்வலமாக கூட்டிட்டுப்போறது கொடுமையானது. அந்தத் திருவிழாவை நான் நேரடியாகப் பார்த்தேன். அங்கே இருந்தவங்களே செல்போனில் அந்தச் சிறுமிகளைப் படம்பிடிக்கிறாங்க. அந்த சிறுமிகளின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கலெக்டர்கூட அந்தச் சிறுமிகளுக்கு மேலாடை போட்டு, திருவிழா நடத்துங்கனு சொன்னாரு. ஆனா, அது எங்க வழக்கத்துக்கு மாறானதுனு மறுத்துட்டாங்க. இதெல்லாம் எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. அதனாலதான், இதைச் செய்தியாக்கினேன். எனக்குத் தொடர்ந்து மிரட்டல் வரவே, ஃபேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துட்டேன்” என்கிறார்.

அந்தச் செய்தி நிறுவனத்தின் ஆசிரியரான வித்யாஸ்ரீ தர்மாராஜிக்கும் மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. “எனக்கு திங்கட்கிழமை இரவு ஒரு கால் வந்துச்சு. அவங்களின் கோயில் திருவிழா பற்றி அவங்களுடைய நியாயத்தைப் பேசினாங்க. நானும் என் தரப்பைச் சொல்லிட்டிருந்தேன். ஆனால், அதற்கடுத்த ராத்திரி முழுக்க பல அழைப்புகள் வந்துட்டே இருந்துச்சு. 'ரத்தம் கக்கி சாவே', “உங்க இணையதளத்தையே ஹேக் செஞ்சுடுவோம்’னு பல வகையில் மிரட்டினாங்க. நேற்று (செவ்வாய்கிழமை) மதியம், சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கோம். அவர்கள் இணையதளம் கால் வழியே பேசியிருக்காங்க. இதை Voice over Internet Protocol தொழில்நுட்பம்னு சொல்வாங்க. இதைப் பயன்படுத்தி போன் செய்தால், 12 எண்கள் காட்டும். அதனால் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னாங்க. இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும்னு நம்புறேன்.

ஆனா, நாங்க யாரையும் புண்படுத்துறதுக்கு இந்த செய்தியை வெளியிடலை. நாங்கள் குழந்தைகள் பாதுகாப்பைத்தான் வலியுறுத்துறோமே தவிர, எந்த மத நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிரான நோக்கத்தில் இதை வெளியிடலை'' என்றார் ஆதங்கத்துடன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024