Friday, September 29, 2017

பல்கலைகளில் வன்முறை நிகழ யார் காரணம்?

பதிவு செய்த நாள்28செப்
2017
23:50

பல்கலைகளில், துறை தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, உச்சபட்ச அதிகாரங்களால், பேராசிரியர்களை கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு, நிர்வாக குளறுபடி ஏற்பட்டு உள்ளது. மதுரை, காமராஜர் பல்கலையில், வேலையில் இருந்து நீக்கிய காரணத்தால், இதழியல் துறை தலைவரான, பேராசிரியை ஜெனிபாவை, கவுரவ விரிவுரையாளர் ஒருவர், கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம், அனைத்து பல்கலைகளின் நிர்வாகத்தையும், சீர் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ௧௩ பல்கலைகளில், துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர், நிர்வாக பணிகளை கவனிக்கின்றனர். பாடவாரியான துறைகளை, அதன் தலைவர்களே நிர்வகிக்கின்றனர். மாணவர் சேர்க்கை, ஆராய்ச்சி நிதி பெறுவது, பல்கலை மானியக் குழுவின் திட்டங்களை செயல்படுத்துவது, பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்களை சேர்ப்பது, தற்காலிக சம்பளத்தில், கவுரவ ஆசிரியர்களை நியமிப்பது போன்ற பணிகளையும், துறை தலைவர்களே மேற்கொள்கின்றனர்.

ஊதியம் தருவதில்லை : இது குறித்து, கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு பல்கலையிலும், துறை தலைவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர். அவர்களே, பிஎச்.டி., படிப்புக்கு வழிகாட்டியாகவும் உள்ளதால், ஆராய்ச்சி மாணவர்களையும், கவுரவ விரிவுரையாளர்களையும், பணியாளர்களை போல் நடத்துகின்றனர்.

துறை தலைவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகள், வணிக பிரபலங்கள், அரசு உயர் அதிகாரிகள் என, பெரும் செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், அதிகார மையங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாகவும் உள்ளனர். 

அதனால், துணைவேந்தர்களால், துறை தலைவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கவுரவ விரிவுரையாளர் நியமனத்தில், துறை தலைவர்கள், விதிகளை பின்பற்றுவதில்லை. தங்களின் சுயவிருப்பம், சிபாரிசுகளின் படியே, நியமனம் நடக்கிறது. 

ஆராய்ச்சி மாணவர் களாகவும், வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களாகவும் இருக்கும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியமும் தருவதில்லை.

தீர்வு வேண்டும் : சென்னை பல்கலை, மதுரை காமராஜர், கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் போன்ற பல்கலைகளில், ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள், துறை தலைவர்களின் ஆதிக்கத்தால், ஆராய்ச்சி படிப்பை முடிக்க முடியாமல், பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர். இது போன்ற காரணங்களால், துறை தலைவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் சரியான நல்லுறவு இல்லாமல், மோதல் போக்கு நிலவுகிறது. இதற்கு, உயர் கல்வித் துறை தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024