Saturday, September 30, 2017

பகவதி அம்மனுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கிடைக்குமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு

த.ராம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா கடந்த 21-ம் தேதி முதல் நடந்து வருகிறது. அந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டைதான். அந்த நிகழ்வு நாளை பகல் 12 மணிக்கு நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார். பின்னர் கோவிலிலிருந்து பகவதி அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் சென்றடைவார்.




அங்கு அம்மன் வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். அதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வெள்ளிக் குதிரை வாகனத்தின் பகவதி அம்மன் கன்னியாகுமரியிலிருந்து ஊர்வலமாக வரும் போது பேண்ட் வாத்திய இசையுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய போலீஸார் பாதுகாப்பு அம்மனுக்கு அளிக்கப்படவில்லை.




இந்தநிலையில், அம்மனுக்கு இந்த ஆண்டு முதல் பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். போலீஸார் அளிக்கும் பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய அணிவகுப்பு மரியாதையைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024