Thursday, September 28, 2017

குழந்தையைக் கடத்திய சென்னை சிறுவனின் தந்திரம்! குறிவைத்துப் பிடித்த போலீஸ்

சகாயராஜ் மு




சென்னை தண்டையார்பேட்டையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட குழந்தையை, கொருக்குப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். "விளையாட்டாக குழந்தையை சிறுவன் கடத்தியதாகக் கூறும் காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் நிறத்தைச் சிறுவன் மாற்றியுள்ளான் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை முகமது சாது, நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த ஒரு சிறுவன், கடத்திச் சென்றான். குழந்தை காணாமல்போனது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இலியாஸ் புகார் கொடுத்தார்.

பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே, குழந்தையைக் கடத்திய சிறுவனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில், நேதாஜி நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தை முகமது சாதுவை, சிறுவன் ஒருவன் ஆரஞ்சு நிற சைக்கிளில் வைத்துக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொருக்குப்பேட்டை பகுதியில் சிறுவன் இருப்பதைக் கண்டறிந்த தனிப்படையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.



இதையடுத்து, குழந்தையைக் கடத்திய சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டை கார்னேஷன் நகரில் உள்ள கஸ்தூரிபா தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளி குமார் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. விளையாடுவதற்காகவே, குழந்தையை சிறுவன் அழைத்துவந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சைக்கிளின் நிறத்தை மாற்றியது ஏன் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, குழந்தையைக் கடத்தியதாகக் கூறப்பட்ட சிறுவனை, காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன், நேற்றிரவு தந்தை இலியாஸிடம் குழந்தை முகமது சாதுவை ஒப்படைத்தார். குழந்தை கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டதோடு, காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024