Thursday, September 28, 2017

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 28, 2017, 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.600 எனவும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்குக்கீழ் படித்து பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1000 எனவும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆகவே பயனாளிகள் தங்களது பெயர், முகவரி, வங்கிக்கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஆதார் எண் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டதற்கான ஆதாரங்களுடன் வருகிற 2-ந் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புதிதாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் பதிவுதாரர்களும், உதவித்தொகை புதுப்பிக்க வருகை தரும் பதிவுதாரர்களும் ஆதார் எண் விவரங்களை தங்களது வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைத்து விண்ணப்பத்தை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்காலியிடத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 9-ந்தேதி, 10-ந் தேதி என 2 நாட்கள் வேலூர் வர்கீஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 7.7.1997 மற்றும் 20.12.2000-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏர்மேன் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக்குறிப்புகளுடன் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் தேர்வின் முந்தைய வினாக்கள் மற்றும் இத்தேர்வில் தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024