Thursday, September 28, 2017

ஜெயலலிதாவின் அப்போலோ வீடியோவும்... விடைதெரியா சரச்சைகளும்!

அ.சையது அபுதாஹிர்
vikatan



ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் எந்த வீடியோவும் எடுக்கப்படவில்லை. அவர் சிகிச்சை பெற்ற அறையிலும் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை” என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்து பத்து மாதங்கள் கழித்து இப்போது வீடியோ வடிவில் அவர் மரணம் குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரண்டு தினங்களிலே அவர் வீட்டிற்கு அனுப்படுவார் என்ற சொல்லபட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான படங்கள் குறித்த பேச்சு அப்போது எழவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஜெயலலிதாவின் நிலை என்ன என்று பலதரப்பிலும் கேள்வி எழுந்தது. ஆளுநர், ராகுல் காந்தி, என பலரும் மருத்துவமனைக்கு வந்தாலும் ஜெயலலிதாவினை பார்க்க முடியாத நிலை இருந்தது. அப்போதுதான் ஜெயலலிதாவின் புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அப்போது அதைபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை சசிகலா குடும்பத்தினர்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இரவு நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் சிசிடிவி.கேமராக்களும் செயல் இழக்க செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. அதேநேரம் அ.தி.முக. வின் செய்தித்தொடர்பாளர்கள் அனைவருமே ஜெயலலிதா உண்கிறார் உறங்கினார் இட்லி சாப்பிட்டார் என்பதாக முரண்பாடான பேட்டிகளை அளித்துவந்தனர். ஜெயலலிதா மரணம் வரை நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த விவகாரம் அவர் மரணத்திற்கு பிறகு உசச்திற்கு சென்றது. குறிப்பாக பி.ஹெச்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசினார். பன்னீர் தீடீர் என சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கியபோதுதான் யாரையும் ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை என்று கூறி அதிரவைத்தார்.

அப்போதும் தமிழக அமைச்சர்கள் அமைதியாகவே இருந்தார்கள். ஆனால், பத்து மாதம் கழித்து இப்போது திண்டுக்கல் சீனிவாசன் “யாருமே ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. இட்லி சாப்பிடுகிறார் என்று சொன்னதெல்லாம் பொய்” என்று போட்டு உடைக்க, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.



ஜெயலலிதாவின் வீடியோ தங்களிடம் இருக்கிறது எனவும் அதை தக்கநேரத்தில் வெளியிடுவோம் என்றும் முதலில் சொன்னது திவாகரன் மகன் ஜெய்ஆனந்த். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரச்சை வெளியான ஆரம்பத்தில் இதை தெரிவித்தார். பன்னீர்செல்வத்தின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் ஆன்ந்த் இந்த பதிலை தெரிவித்தார். அதன்பிறகு ஜெயலலிதா பற்றி வீடியோ விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்த பிறகு இப்போது வில்லங்கமாகி வருகிறது.

தினகரன் “ஜெயலலிதா டி.வி. பார்க்கும் காட்சியை சின்னம்மா வீடியோவாக எடுத்துள்ளார். அதை விசாரணை ஆணையத்திடம் கொடுப்போம்” என்று சொல்லியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி“ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிரா ஏதும் பொறுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு முழுமையான விடை இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அந்த அறைக்குள் சென்று வரும் உரிமை சசிகலாவிற்கு மட்டுமே இருந்தது. ஜெயலலிதா இருந்த அறையின் அருகே இரண்டு சோபாக்கள் போடப்பட்டு இருந்தன. ஒரு டீபாய் ஒன்றும் இருந்துள்ளது. சசிகலா மருத்துவமனையிலேயே இருந்த நேரத்தில் அவர் கையில் இரண்டு செல்போன்களும், ஒரு டேப்லட்டும் இருந்துள்ளது. சசிகலா அதில் ஜெயலலிதாவை வீடியோ எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் மருத்துமவனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு ஒருமாதத்தில் அவர் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தரப்பிலிருந்தே சொல்லபட்டது. இதுகுறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது “ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சில படங்கள் எடுக்கப்பட்டது உண்மை. அது சசிகலா குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒருவரிடம் உள்ளது. சசிகலாவின் ஐபோனில்தான் இந்த படங்கள் எடுக்கபட்டது” என்று சொல்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. விசாரணை ஆணையமாவது இதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024